உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

ஊகவணிகத்தில் மக்காச் சோளம்: கடலூர் மாவட்ட விவசாயிகள் புதிய முயற்சி

திட்டக்குடி வட்டம் கீழக்கல்பூண்டி கிராமத்தில் பூக்கத் தொடங்கி இருக்கும் மக்காச்சோளம். (வலது படம்) கீழக்கல்பூண்டி கிராமத்தில் அண்மையில் நடந்த விளக்கக் கூட்டம்
கடலூர்:

                  ஊகவணிகத்தின் மூலம், மக்காச்சோளத்துக்கு நியாயமான விலை கிடைக்க கடலூர் மாவட்ட விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

                  தமிழ்நாட்டில் 2 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் மக்காச்சோளம், தமிழ்நாட்டின் ஆண்டுத் தேவையில் 50 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. எனினும் தமிழகத்தில் விளையும் மக்காச்சோளத்துக்கு, நியாயமான விலை கிடைப்பது இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.

                    கடலூர் மாவட்டம் மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு 14,300 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு உள்ளது. மக்காச்சோள விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு, அதிகபட்சவிலையாக குவிண்டாலுக்கு ரூ.800 மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள். மக்காச்சோள வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில், சிண்டிகேட் கூட்டணி அமைத்துக் கொண்டு, மக்காச்சோள விலையை குறைத்துவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

                இந்நிலையைப் போக்க ஊகவணிகம் மூலம் மக்காச்சோளத்தை விற்பனை செய்ய கடலூர் மாவட்ட விவசாயிகள் புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளனர். தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த முறையைப் பின்பற்றியதால், கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை, முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மக்காச்சோள விவசாயிகள் இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக, கடலூர் மாவட்ட விவசாயிகள் கூறுகிறார்கள்.

              ஊகவணிகத்தை மேற்கொள்ளும் என்.சி.டி.இ.எக்ஸ். ​(Nation​al​ Commodity​ Deriv​ative Ex​ch​ange​ LTD)​  என்ற நிறுவனத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டதன் விளைவாக, அந்த நிறுவனத்தினர் கடந்த திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இக்கூட்டம் திட்டக்குடி வட்டம் கீழக்கல்பூண்டி கிராமத்தில் நடந்தது. ஊகவணிக நிறுவனத்தின் தலைமை அமைப்பாளர் உமா மதன், மக்காச்சோளப் பிரிவு தென்னிந்திய மேலாளர் ரமேஷ் சந்த், விருத்தாசலம் வேளாண் விற்பனை துறை உதவி அலுவலர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கங்களை அளித்தனர்.

இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                  "தமிழகத்தில் விளைச்சலைவிட மக்காச்சோளத் தேவை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் ரூ.800தான் கிடைத்தது. மஞ்சள் விவசாயிகளிடமும் வியாபாரிகள் இதே முறையைப் பின்பற்றியதால், மஞ்சள் விவசாயிகள் நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஊகவணிகத்தின் மூலம், மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது.

              அதன் அடிப்படையில் மக்காச்சோளத்திலும் ஊகவணிகத்தின் மூலம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, முயற்சி செய்கிறோம். இந்த முறையில் மக்காச்சோளத்தை விற்பனை செய்ய, விவசாயிகளுக்கு சேமிப்புக் கிடங்கு வசதிகள் தேவைப்படும். இந்த ஆண்டு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்துவோம். எங்கள் முயற்சி வெற்றி பெற்றால் வரும் ஆண்டுகளில் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசை வற்புறுத்துவோம்' என்றார். 

                   நிகழ்ச்சியில், மாவட்ட அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன், உழவர் மன்றங்களின் நிர்வாகிகள் வேணுகோபால், ஏ.கே.ரவிச்சந்திரன், எல்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

தமிழகத்துக்கு வந்த சிங்கப்பூர் மாணவர்கள்

சிதம்பரம்:

                 சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவாக தமிழகம் வந்துள்ளனர்.சுற்றுலாக் குழுவினர் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் முறை குறித்து தெரிந்து கொண்டனர்.

                 சிங்கப்பூர் நாட்டின் பெருமையை பற்றியும், அதன் அழகையும், தூய்மையையும் பற்றி நாம் பெருமையாக பேசுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களுடன் தமிழகத்துக்கு கல்விச்சுற்றுலா வந்துள்ளனர். சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூச்சூன் பள்ளி மாணவ, மாணவியர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் பெருமாள், டேவிட், சகாயராஜ் ஆகியோர் இந்தியாவுக்கு ஒருவார கல்விச் சுற்றுலாவாக வந்துள்ளனர்.

                   இதன் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு வந்த அம்மாணவர்கள் சிதம்பரத்தை அடுத்த தண்டேஸ்வரநல்லூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனர். அவர்களை பள்ளித் தாளாளர் அருளானந்தம், தலைமைஆசிரியை ஜோஸ்பின்மேரி ஆகியோர் வரவேற்றனர்.  மாணவர்களுக்கு தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.மேலும் தமிழகத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் உள்ளிட்ட கலாசாரங்கள் குறித்து சிங்கப்பூர் மாணவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் அச்சுற்றுலா குழுவினர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

Read more »

கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த சேர்மன் மனு

கானல் நீராகிப் போன கனவுகள் 

கடலூர் : 

             கடலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என சேர்மன் தங்கராசு கூறியுள்ளார். 

இதுகுறித்து நான்காவது நிதிக்குழுத் தலைவரிடம் கடலூர் நகராட்சி சேர்மன் தங்கராசு அளித்துள்ள மனு: 

                    சிறப்பு நிலை நகராட்சியான கடலூர் நகராட்சியை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து, இந்நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம், காரைக்காடு, குடிகாடு, பச்சையாங்குப்பம், சான்றோர் பாளையம், கண்ணாரப்பேட்டை, சுத்துக்குளம், கரையேறவிட்டகுப்பம், அரிசி பெரியாங்குப்பம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, கோண்டூர், கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி ஆகிய பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும்.

                   கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் துணை பஸ் நிலையம் அமைக்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகிய பகுதிகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கரைப்பகுதியை பலப்படுத்த வேண்டும். கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தேவனாம்பட்டினம் கடற்கரையை சுற்றுலா தளமாக அங்கீரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior