உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 01, 2010

மார்ச் 2ல் பிளஸ் 2 தேர்வுகள்துவக்கம்

               தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. 

                அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல் தேர்வை துவக்கலாமா அல்லது மார்ச் 2ம் தேதி துவக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமையாக உள்ளதால், மார்ச் 2ம் தேதி தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் நேற்று இரவு தெரிவித்தன.தொடர்ந்து, மார்ச் 20ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. 

                 தற்காலிக தேர்வு அட்டவணைகள், ஓரிரு நாளில் மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டு, அதன்படி அட்டவணை இறுதி செய்யப்படும்.தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த விவரங்கள் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டரில் பதிவு செய்யும் பணிகள் முடிந்துள்ளன. இந்தாண்டு, ஏழு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுவார்கள் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதம்: நிரந்தரத் தீர்வு எப்போது?

சிதம்பரம்: 

                  கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பது, அரசு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை

                    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் செங்கால்ஓடை வழியாகவும், மணவாய்க்கால் மூலமாகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வழியாக சென்று கடலை சென்றடைகிறது. இவையல்லாமல் மேட்டூரிலிருந்து காவிரியில் கூடுதலாக திறக்கப்படும் பல லட்சம் கனஅடி உபரிநீர் கீழணை வந்து அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக சிதம்பரம் அருகே கடலில் கலக்கிறது. 

                   மேலும் பொன்னேரியிலிருந்து வரும் உபரிநீர் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வழியாக கடலில் சென்று கலக்கிறது. கோமுகி, மணிமுத்தாறு பகுதியிலிருந்து வரும் உபரிநீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வெள்ளாற்றில் கலந்து பரங்கிப்பேட்டை அருகே கடலுக்கு செல்கிறது. சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வெள்ளம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசம் செய்துவிட்டு கடலுக்கு செல்கிறது.

                     சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களின் தெற்கே கொள்ளிடம் ஆறும், வடக்கே வெள்ளாறும் செல்கின்றன. இதற்கு இடையில் உள்ள இந்த தாலுகாக்களில் உள்ள மக்களும், விவசாயிகளும் வெள்ளச் சேதத்தினால் ஆண்டுதோறும் அவதியுற்று வருகிறார்கள். அரசும் ஆண்டுதோறும் நிவாரணம் வழங்குவது, இழப்பீடு வழங்குவது போன்ற வழக்கமான செயல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

                       ஆள்பற்றாக்குறை, வேளாண் இடுபொருள் விலையேற்றம், போதுமான விலை கிடைக்காதது மற்றும் மழை, வெள்ளம், வறட்சி என மாறி, மாறி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருவதால் பலர் விவசாயத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் விவசாயத் தொழில் நலிவுறும் நிலை உருவாகியுள்ளது.

தடுப்பணைகள் தேவை

                 ஆண்டுதோறும் 2 டிஎம்சி தண்ணீர் சிதம்பரம் அருகே கொள்ளிடம், வெள்ளாற்றின் வழியாக கலந்து வீணாகிறது. எனவே இரு ஆறுகளிலும் பல இடங்களில் தடுப்பணைகளை அமைத்து கடலில் வீணாக கலக்கின்ற நீரை சேமிக்க வேண்டும். மழைக்காலங்களில் வீராணம் ஏரியில் அதிகளவு நீரைத் தேக்கி வைக்கக்கூடாது. சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கும் நோக்கில் கூடுதலாக நீரைத் தேக்கி வைக்கின்றனர். அப்போது கூடுதலாக ஏரிக்கு உபரிநீர் வரும் போது திடீரென அதிகளவு நீர் திறந்துவிடப்படுவதால் வெள்ளியங்கால் ஓடை மற்றும் பழைய கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிப்படைகின்றன.

                எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மா.கோ.தேவராசன்.

Read more »

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.யில் தொழிலாளர் நல படிப்பு தொடக்கம்

                   தொழிலாளர் நலம் குறித்த 3 மாத கால சான்றிதழ் படிப்பு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) தொடங்கப்பட்டது.

 படிப்பைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு தலைமை தொழிற்சாலைகள் கண்காணிப்பாளர் அய்யனு பேசியது:- 

                    சட்டப்படி பணி அமர்த்தப்பட வேண்டிய, பயிற்சி பெற்ற தொழிலாளர் நல டாக்டர்கள் கிடைக்காததால், தொழிலதிபர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் நல டாக்டர்கள் தேவை உள்ளது. ஆனால் இப்போது 1,314 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். 

                   தொழிலாளர் நலனை உணர்ந்துள்ள தொழிலதிபர்கள் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் நல டாக்டர்களை அமர்த்த விரும்புகிறார்கள் என்றார். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் பணி செய்த டாக்டர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். மத்திய தொழிலாளர் நல நிறுவனம் படிப்புக்கான சான்றிதழை வழங்கும். மத்திய தொழிலாளர் நல நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஜி.எம்.இ.கே.ராஜ், இயக்குநர் டாக்டர் ஆர்.பி.ராய்தாஸ், சென்னை வட்டார தொழிலாளர் நல நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கே.இளங்கோவன், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ். ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior