உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

கடலூர் நகராட்சிக்கு மத்திய அரசின் மதிப்பெண்

கடலூர்:
              
             சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரம் கடலூர். 500 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த நகரம் இது.

                ஆங்கிலேயர்கள் வணிகத்துக்காகத் தமிழகத்துக்குள் நுழைந்தபோது அமைத்துக் கொண்ட முதல் தலைநகரம் கடலூர். அவர்கள் கட்டிய முதல் கோட்டை, கடலூர் புனித டேவிட் கோட்டை. சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் இருப்பதால், அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களுக்காக மாநிலத் தலைமை அலுவலகங்களைத் தொடர்பு கொள்வது கூட, கடலூர் மாவட்ட நிர்வாகத் தலைவர்களுக்கு எளிதான விஷயம்.

               நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் ரசாயனத் தொழிற்சாலைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் அமைத்துக் கொள்ள மத்திய அரசு, தாராளமாக இடம் ஒதுக்கி இருக்கும் நிலங்கள், கடலூரை அடுத்துள்ள கடற்கரையில்தான் அமைந்துள்ளன. இத்தகைய புகழ்மிக்க நகரம் சுகாதாரக் கேட்டின் விளிம்பில் உள்ளது.கடலூர் மக்கள் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரியாகச் செலுத்துகிறார்கள். ஆனால் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறுவதில் கடலூர் மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

                மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அண்மையில் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கும், இந்திய நகராட்சிகளின் சுகாதாரம் மற்றும் குடிநீர் தரம் பற்றிய அறிக்கையில் (ரிப்போர்ட் கார்டு) கடலூர் நகராட்சிக்கு அளித்து இருக்கும் சான்றிதழ் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.அந்த அறிக்கையில் ஒவ்வொரு, இனங்களிலும் 

கடலூர் நகராட்சிக்கு அளித்திருக்கும் மதிப்பெண் கீழே தரப்படுகிறது 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது பெறவேண்டிய மொத்த மதிப்பெண்):
நகரில் ஏழைகளுக்குக் கிடைத்துள்ள தனிப்பட்ட மற்றும் சமூக கழிப்பிட  சுகாதார வசதிகள்: 0 (4). 

நகருக்குள் வந்து போகும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த மக்களுக்குக் கிடைத்திருக்கும் கழிப்பறை வசதிகள்: 1.48 (4).

நகரில் திறந்தவெளிகளை கழிப்பிடமாகப் பயன்படுத்தாமல் இருப்பது: 0 (4).

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றி இருப்பது: 4 (4). 

மனிதக் கழிவுகளை பாதுகாப்புடன் சேகரிப்பது: 3 (6). 

நகரில் உற்பத்தியாகும் மிக மோசமான கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுவதல்: 0 (6). 

நகரில் உற்பத்தியாகும் நடுத்தர கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 0 (3).

நகரில் உற்பத்தியாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து உபயோகித்தல்: 0 (3). 

மழைநீரை பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 1 (3). 

மொத்த திடக் கழிவுகளையும் அவ்வப்போது சேகரித்தல்: 1 (4). 

மொத்த திடக்கழிவுகளையும் சுத்திகரித்து பாதுப்புடன் அகற்றுதல்: 0 (4).

நகரக் கழிவுகளால் சுற்றுப் புறங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருத்தல்: 0 (5). 

திறந்தவெளிகள் கழிப்பிடமாக மாற்றுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள்: 0 (4). 

கழிவுகள் அகற்றும் அமைப்புகளின் சரியான செயல்பாடுகள்: 0 (5). 

மழைநீர் அகற்றும் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்: 2 (4).

நகர மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரின் தரம்: 1.75 (7). 

நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீராதாரங்களின் தரம்: 0 (7). 

தண்ணீரால் உண்டாகும் நோய்களை கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள்: 3 (6).

                 ஏனைய நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போல் கடலூர் நகராட்சிக்கும் அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. இருப்பினும் இந்த அவலநிலை ஏன் என்று தெரியவில்லை.சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மட்டும், கடலூர் நகராட்சிக்கு ரூ. 35 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மட்டும் கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 2 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுளளது. ஆனால் அவை எல்லாம் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன.

               கடலூர் நகராட்சிக்கு வரவேண்டிய வரிபாக்கி மட்டும் ரூ. 17 கோடி என்று அண்மையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. தற்போது வசூலிக்கப்படும் வரி முழுவதும் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியமாகவும், மின் கட்டணம் மற்றும் குடிநீர் திட்டப் பராமரிப்புப் பணிகளுக்குச் சரியாகிவிடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் பொதுநிதியில் பணம் இல்லை. பொதுநிதியில் பணம் இருந்தால்தான் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளமுடியும் என்கிறது நகாராட்சி நிர்வாகம். சில சிறப்பு திட்டங்களுக்கு அரசு நிதி வழங்குகிறது என்றும் நகராட்சி தெரிவிக்கிறது.

Read more »

ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது "மாற்றம் பெறாத மருவாய்"

நெய்வேலி:

               ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது நெய்வேலியை அடுத்த மருவாய் தேசிய நெடுஞ்சாலை சேதமடைவதும், அதையொட்டி விளை நிலங்கள் பாதிக்கப்படுவதும்,  பின்னர் அவற்றை ஆட்சியில் உள்ளவர்கள் பார்வையிடுவது என்பது தொடர் கதையாக தான் இருக்கிறதே தவிர, சேதமடைந்த பகுதியில் நிரந்தர தீர்வுக்கு யாரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.

                கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருவாய் பகுதியில், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள மருவாய் தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டு கன மழையின்போது பாலத்தின் மீது தண்ணீர் செல்வது தொடர் கதையாகத்தான் இருந்து வருகிறது. 2005-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பரவனாற்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மருவாய் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் நீரில் மூழ்கின, பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

              இதனால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுóஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டு சாலையும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவ்விடத்தைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார்.நிவாரணத் தொகை வழங்கியதோடு சரி, அதன் பின் 2006-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி உருவானது. 

               அத்துடன் இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பிரதாயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதோடு நின்று போனது. அதன்பின் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும், ஓரளவுக்கு மழை பெய்த போதிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த கன மழையால் மீண்டும் மருவாய் தரைப்பாலம் அரித்துச் செல்லப்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 

                அப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.ஆனால் அப்பகுதி மக்களோ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் சேதம் ஏற்படுவதும் ஆட்சியில் உள்ளவர்கள் ஆறுதலுக்காக வந்து பார்வையிடுவதோடு சரி. நிரந்தரத் தீர்வு என்பது கானல் நீராகிவிட்டது என்கின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் கூறுகையில், 

               கடந்த முறை ஜெயலலிதா வந்தார் பார்த்தார். நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார். அதைத் தொடர்ந்து அப்போது எதிர்க்கட்சியில் இருந்த இந்நாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய துணை முதல்வர் ஸ்டாலினும் வந்து பார்த்துச் சென்றனர். அதன்பின் 2006 மே மாதம் நடந்த தேர்தலையடுத்து கருணாநிதி முதல்வரானார். முதல்வரான பின் கருணாநிதியும் மருவாயை மறந்து விட்டார். துணை முதல்வர் ஸ்டாலினும் மறந்து விட்டார். 

                   தற்போது 5 ஆண்டு முடிவில் ஆட்சியிலிருக்கும் துணை முதல்வர் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவராவது இதற்கு நிரந்தர தீர்வு காண்பார் என்றால், எங்களுக்கு அதில் துளியும் நம்பிக்கை இல்லை. காரணம் இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  இவர்கள் தேர்தல் வேலையை பார்ப்பார்களா அல்லது மருவாயை பார்ப்பார்களா அடுத்து ஆட்சிக்கு வருவோர் யாரோ அப்போதாவது இந்த மருவாய் மாற்றம் பெறுமா என்ற கேள்விகளுடன் காத்திருக்கிறோம் என்றார் ராஜசேகர்.

Read more »

நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில் நண்டுவாக்களிகள் பிடிபட்டன



கடலூர் : 

             கடலூர் நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில், தினமலர் செய்தி எதிரொலியால் புதர்கள் அகற்றப்பட்ட போது நண்டுவாக்களி மற்றும் பாம்புகள் பிடிபட்டன.

              கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் கோட்டப் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் பழமையான கட்டடம் என்பதாலும், மேல் தளத்தில் அதிகளவில் இலைச் சருகுகள் இருந்ததாலும் தண்ணீர் தேங்கி கட்டடத்தினுள் கசிந்தது. மேலும், இக்கட்டடத்தைச் சுற்றிலும் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தன. 

                   புதர்களில் இருந்து வரும் பாம்புகள் அலுவலகத்தில் படையெடுக்க துவங்கியதால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து, பொறியாளர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் இருந்த மரங்கள், செடி, கொடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின், பாம்புகளை பிடிக்க கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த் வரவழைக்கப்பட்டார். இவர் எட்டு காளியாங்குட்டி பாம்புகளை பிடித்தார். இவை அனைத்தும் இரண்டரை அடி முதல் மூன்றடி நீளம் வரை இருந்தன. மேலும், 40 நண்டுவாக்களிகளும் பிடிபட்டன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior