உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 24, 2011

விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்



விருத்தாசலம்:
                      விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
            கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கண்மணி நகரைச் சேர்ந்தவர் ராஜவேல் - மலர்கொடி தம்பதியினர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமார் டிப்ளமா எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
            அதே நிறுவனத்தில் சீன நாட்டின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டத்தைச் சேர்ந்த லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் தம்பதியின் ஒரே மகளான லியூயிங், விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நிறுவனத்தின் பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற போது ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்கினர்.தங்கள் காதலை பெற்றார்களிடம் கூறி சம்மதம் பெற்றனர்.              அதைத் தொடர்ந்து இரு வீட்டார் விருப்பத்துடன் விருத்தாசலம் ராஜா மகால் திருமண மண்டபத்தில் இந்து ஐதீக முறைப்படி மந்திரம், மேளதாளம் முழங்க நேற்று திருமணம் நடந்தது. மணமகள் லியூயிங் கழுத்தில் மணமகன் செந்தில்குமார் தாலி கட்டினார். திருமண விழாவில், லியூயிங் பெற்றோர் வேட்டி, சேலை அணிந்து திருமண சடங்குகளை ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்தது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மணமகள் லியூயிங் கூறுகையில், 
               "முதலில் செந்தில்குமார் தான் காதலை வெளிப்படுத்தினார். என் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மொழி மட்டும் தடையாக இருக்கிறது. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்' என்றார்.
மணமகளின் தந்தை லியூ ஹாங்க்யூ கூறுகையில், 
                "எனக்கு எனது மகள் முக்கியம். அவளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது எனது கடமை. என் மகளுக்கு நல்ல தமிழ்க் குடும்பம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.




Read more »

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு

விருத்தாசலம் : 

             புண்ணிய நதி என அழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் "மினி கூவமாக' மாறி வருவதால் நதியின் பெருமையை குலைப்பதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதான நகரமாக விருத்தாசலம் விளங்கி வருகிறது. 

             இந்நகரில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்டவைகளும், புண்ணிய நதியான மணிமுக்தா ஆறு ஓடுவதும் இந்நகரின் முக்கிய சிறப்பாகும். மணிமுக்தா ஆற்றின் கரையோரம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இருப்பதால் கோவில் விழா நாட்களிலும், காணும் பொங்கல் அன்றும் ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் ஒன்று கூடி விளையாடி மகிழ்வர். 

           அதுபோல் மாசி மக திருவிழாவில் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் கூடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் குளித்துவிட்டு மாலை அணிவதும் வழக்கம்.இவ்வளவு சிறப்பு மிக்க மணிமுக்தா ஆற்றில் இருந்துதான் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் கோவில்களுக்கு பங்குனி மாதங்களில் அலகு மற்றும் காவடிகளை எடுத்துச் செல்வர்.

              மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த மணிமுக்தா ஆறு உரிய பராமரிப்பில்லாததால் "மினி கூவமாக' மாறி வருகிறது. நகரின் முக்கிய வடிகாலான ஊத்தோடை வழியாக பெரும்பாலான பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. இக்கழிவுநீர் மணிமுக்தா ஆற்றின் பாலத்தின் கீழ் குளம்போல் தேங்கி நிற்கிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் அடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாலத்தை கடந்து செல்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது

              .பிரசித்தி பெற்ற இந்த ஆறு சுகாதார சீர்கேடு அடைந்து வருவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் நகரப் பகுதியில் நிலத்தடி நீரின் தன்மையும் மாறி வருகிறது. நல்ல சுவையாக இருந்த குடிநீர் தற்போது குடிப்பதற்கு லாயக்கற்ற நீராக மாறி வருவதால் நகர மக்கள் "மினரல் வாட்டரை'யே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ஆற்றை ஒட்டியுள்ள வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட மண் வளத்தை பாதிக்கும் மக்காத கழிவுகளை கொட்டி புண்ணிய நதியான மணிமுக்தாவை பாழ்படுத்தி வருகின்றனர். 

             விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை ஏட்டளவில் மட்டும் இல்லாமல் நடைமுறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.அதோடு ஆற்றின் ஓரமாக கால்வாய் வெட்டி ஊத்தோடை வழியாக விடப்படும் கழிவுநீரை நகர எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விடும்படியும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் கழிவுகள் கொட்டாத வகையிலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

            சுகாதாரத்துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் முழுவதும் 1,512 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து போடப்பட்டது. மேலும், மாவட்ட எல்லையோரம், குடிசைப் பகுதிகள், புதியதாக உருவான பகுதிகள், பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் பகுதி என 101 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

            கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் கலெக்டர் சீத்தாராமன் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் கமலக்கண்ணன், துணை இயக்குனர் மீரா, கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உடனிருந்தனர். கடலூர் பஸ் நிலையத்தில் அய்யப்பன் எம். எல்.ஏ., துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், கமிஷனர் இளங்கோவன், கவுன்சிலர் செல்வி அஞ்சாபுலி, சுகாதார ஆய்வாளர்கள் பத்மநாபன், பாக்கியநாதன் உடனிருந்தனர். 

             மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என 6,048 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 2 லட்சத்து 47 ஆயிரத்து 510 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று (24ம் தேதி) மற்றும் நாளை (25ம் தேதி) வீடு வீடாகச் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் பிப். 27ம் தேதி நடக்கிறது. 

சிதம்பரம்: 

            நெல்லுக்கடை தெரு மகப்பேறு மருத்துவமனையில் சேர்மன் பவுஜியாபேகம் துவக்கி வைத்தார். கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன், சுகாதார ஆய்வாளர் சத்தியசுந்தர், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

நெல்லிக்குப்பம்: 

              சேர்மன் கெய்க்வாட் பாபு துவக்கி வைத்தார். கமிஷனர் புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விருத்தாசலம்: 

            அரசு மருத்துவமனையில் டாக்டர் கதிர்வேல் தலைமையில் குழந்தைகள் நல மருத்துவர் பார்த்தசாரதி சொட்டு மருந்து போட்டு முகாமை துவக்கி வைத்தார். 

சிறுபாக்கம்: 

             சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் டாக்டர் உதயகுமார் தலைமையில் ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் துவக்கி வைத்தார்.

பண்ருட்டி: 

              பஸ் நிலையம் முன்பு ரோட்டரி சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சேர்மன் பச்சையப்பன், துணை சேர்மன் கோதண்டபாணி துவக்கி வைத்தனர். 

சேத்தியாத்தோப்பு: 

            ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரி ஹென்றி டேனியல் தலைமையில் ஜேசீஸ் தலைவர் சேரலாதன் துவக்கி வைத்தார். 

கிள்ளை: 

             பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியப்பகுதி ஊராட்சி கிராமங்களில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாமை அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் துவக்கி வைத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior