உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 28, 2011

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.50 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தருவிப்பு

கடலூர்:

             சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.5 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுத்துவரப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். கடலூர் மாவட்ட தேர்தல் ஏற்பாடுகளை வியாழக்கிழமை பிரவீண்குமார் ஆய்வு செய்தார். 

பின்னர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்  பேசியது:

             கடலூர் மாவட்டத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். தேர்தல் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று உள்ளன. தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன்பு தருவிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வாக்குப் பதிவின் நேரம் பதிவாகாது.எனவே வாக்குப் பதிவு நேரம் பதிவாகும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1.5 லட்சம், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

              கடலூர் மாவட்டத்துக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் அரசு கருவூலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்தேன்.வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வாக்குப் பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் 1,000 வாக்குகள் பதிவு செய்து, காண்பிக்க இருக்கிறோம்.10 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களில் இந்த வாக்குப் பதிவு, செய்து காண்பிக்கப்படும். 

            வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 கட்டமாக சோதனை செய்யப்படும். மின்னணு இயந்திரங்களில் பயிற்சி அளிக்க, முதல் கட்டமாக மாஸ்டர் டிரெய்னர்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பாளர்கள்.தமிழகத்தில் 11.46 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புதிதாக 49,976 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போதைய சட்ட மன்றத்தின் ஆயுள் காலம் மே 13-ம் தேதி வரை உள்ளது.மே 10-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முந்தைய தேர்தல்களில் மார்ச் 1-ம் தேதி, தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

               தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதுபற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.தேர்தல் ஆணைய விதிகளின்படி, அரசுப் பணிகளில் 3 ஆண்டுகள் ஓரிடத்தில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள்களில் வேட்பாளர் பற்றி கட்டுரைகள் எழுதப்பட்டால், அது விளம்பரமாகக் கருதப்பட்டு, அதற்கான தொகை வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்றார் பிரவீண்குமார் .மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ரயில் மறியல்


ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசுகிறார் சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் கே.ராஜேந்திரன்
சிதம்பரம்:

          சிதம்பரத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் செய்ய வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்.  

           பல்கலைக்கழகத்துக்கு வந்து செல்லும் நேரத்துக்கு ரயில்களின் நேரத்தை மாற்றி அமைக்குமாறும், ஏற்கெனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என கோரி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் இ.சந்தோஷ்குமார் தலைமையில் 800 பேர் வியாழக்கிழமை விழுப்புரம்-மயிலாடுதுறை ரயிலை மறிக்க வந்தனர்.  அவர்களை ரயில்வே போலீசார்   மற்றும் சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தினர்.  போலீஸôர் ரயில் மறியல் செய்ய தடுத்ததால் பிளாட்பாரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

           போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினரும், சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவருமான வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், பாஜக நிர்வாகிகள் வே.ராஜரத்தினம், இரா.திருமேணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட மாணவரணிச் செயலர் கெய்க்வாட்பாபு உள்ளிட்டோர் பேசினர்.  பின்னர் சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.இந்துமதி, ரயில்வே நிலைய மேலாளர் பட்டாபிராமன், ரயில்வே டி.எஸ்.பி. மாணிக்கம், சிதம்பரம் டி.எஸ்.பி. ஆர்.மோகன், வட்டாட்சியர் எம்.காமராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்து இரண்டு மாதங்களில் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததால், மாணவர்கள் தாற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

Read more »

கடலூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்கள்: சுய தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு

கடலூர்:

         படித்து வேலை தேடும் இளைஞர்கள் கடன் பெற்று சுயமாக தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

           படித்து வேலைதேடும் இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பினை பெறும் வகையில் தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டு தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

          குடும்ப ஆண்டு வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு 5 லட்ச ரூபாயும், சேவை தொடர்பான தொழில்களுக்கு 3 லட்ச ரூபாயும், வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு ஒரு லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படுகிறது.இதில் திட்ட அறிக்கையில் 10 சதவீதம் தொகையினை பொதுப் பிரிவினர் விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டும். 

            திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் பெற்று பூர்த்தி செய்து இரட்டை நகலில் திட்ட அறிக்கை, கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். படித்த வேலைதேடும் இளைஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior