உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

கடலூர் மாவட்டம் முழுவதும் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது

கடலூர் : 

            கடலூர் மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வரும் 9ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. 

             4,161 கள பணியாளர்கள், 681 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் ஒழுங்குமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 1871ம் ஆண்டு முதல் துவங்கி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 908 ஆண்களும், 11 லட்சத்து 34 ஆயிரத்து 487 பெண்களுமாக மொத்தம் 22 லட்சத்து 85 ஆயிரத்து 395 பேர் உள்ளனர். 

             தற்போது 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வரும் 9ம் தேதி முதல் துவங்கி, 28ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இப்பணிக்கு 4,161 களப்பணியாளர்களும், 681 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிந்து, மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 5 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக வரும் 6, 7, 8ம் தேதிகளில் கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட களப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்கள் தொகையை கணக்கெடுப்பதற்கு ஏதுவான வரைபடம் தயார் செய்ய உள்ளனர். 

              பின்னர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுவர். அதில் படிவத்தில் உள்ள 29 கேள்விகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவர். அப்போது ஏற்கனவே விடுபட்ட வீடுகளின் விவரங்களையும் சேர்த்து செக்ஷன் 3 படிவத்தில் பூர்த்தி செய்வர். 28ம் தேதி இரவு பஸ் நிலையம், கோவில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளவர்களின் விவரம் குறித்து கணக்கெடுக்கப்படும். இதன் பிறகு மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மறு ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகள் மார்ச் 6ம் தேதி அனுப்பப்படும். அதன் பின்னர் மார்ச் 21ம் தேதி மக்கள் தொகை குறித்த முழு விவரம் நாடு முழுவதும் வெளியிடப்படும்.

சேகரிக்கும் விவரங்கள்... : 

1.பெயர், 
2.குடும்பத் தலைவருக்கு உறவுமுறை, 
3.இனம், 
4.பிறந்த தேதி, 
5. திருமண நிலை, 
6. திருமணத்தின் போது வயது, 
7. மதம்,
8. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா, 
9. மாற்றுத் திறனாளியா, 
10. தாய்மொழி, 
11. அறிந்த பிறமொழிகள், 
12. எழுத்தறிவு நிலை, 
13. கல்வி நிலையம் செல்பவரா, 
14. அதிகபட்ச கல்வி, 
15. கடந்தாண்டு வேலை செய்தவரா, 
16. பொருளாதார நடவடிக்கை வகை, 
17. தொழில்,
18. தொழில் (அ) வியாபார நிலை, 
19. வேலை செய்பவரின் வகை, 
20. பொருளீட்டா நடவடிக்கை, 
21. வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா,
22. பணிக்கு பயணம் செய்யும் முறை, 
23. பிறந்த இடம், 
24. கடைசியாக வசித்த இடம், 
25. இடப் பெயர்ச்சிக்கு காரணம், 
26. இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம், 
27. உயிருடன் வாழும் குழந்தைகள், 
28. உயிருடன் பிறந்த குழந்தைகள், 
29. கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 

                   உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Read more »

உழவர்களுக்கு ஊக்கம் தரும் உளுந்து சாகுபடி


கடலூர்: 

              குறைந்த காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் விவசாயமாக உளுந்து சாகுபடி உள்ளது.  நிறைந்த ஊட்டச்சத்தும் சிறந்த மருத்துவக் குணங்களும் கொண்டது உளுந்து. எனவேதான் உளுந்தின் தேவை, தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதுக்கும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.  

              இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் உளுந்து பயிரிடப்படுகிறது. எனினும் தேவையில் 85 சதவீதத்தை பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் 1990-91ல் 3.36 லட்சம் ஏக்கரில் 1.35 லட்சம் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டது. 2000-2001ல் 2.75 லட்சம் ஏக்கரில் 1.32 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.  
 
                தமிழகத்தில் உளுந்து உற்பத்தி பெரும்பாலும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளையே நம்பி இருக்கிறது. காவிரி பாசனப் பகுதிகளான சுமார் 16 லட்சம் ஏக்கரில் உளுந்து சாகுபடிக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிடப்பட்டது.  சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன் வயல்களில் உளுந்து விதைகளை விதைத்து விடுவார்கள். வயல்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் பனியால் உளுந்துப்பயிர் வளர்ந்து 60 நாள்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதற்குச் செலவு இல்லை. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 150 கிலோ வரை உளுந்து கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

            இந்த ஆண்டு உரிய காலத்தில் காவிரி நீர் கிடைத்து இருப்பதால் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.  தமிழகத்தில் தற்போது ஏடிடி 3, டி 9, டி.ஓ.யூ.1 வண்பன் ஆகிய உளுந்து ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏடிடி 3 டெல்டா பகுதிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தேவையைக் கருத்தில் கொண்டு, உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

              "காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி மூலம் செலவு இல்லாமலேயே ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்.  உளுந்தை தனிப்பயிராக இறவை பாசனத்தில் சாகுபடி செய்தால் 60 நாள்களில் ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும். எனவே உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்யவும், நேரடிகொள்முதல் செய்யவும் தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.  

இதுகுறித்து வேளாண்துறை அளிக்கும் தகவல்கள்: 

                 தேசிய உணவு பாதுகாப்பு மிஷன் மற்றும் விரைவுபடுத்தப்பட்ட பயறு வகைகள் சாகுபடித் திட்டம் தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.  இத்திட்டங்களில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் தலா 1,000 ஹெக்டேரில் உளுந்து பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  மேற்கண்ட திட்டங்களில் உளுந்து விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், இடுபொருள்கள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள், சொட்டு நீர் பாசனக் கருவிகள் வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.     

Read more »

சோற்று கற்றாழை; வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு


              மூலிகை பயிரான சோற்றுக்கற்றாழையை இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. எனவே சோற்றுக்கற்றாழை பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம்.  சோற்றுகற்றாழை வறட்சியான பகுதிகளுக்கு ஏற்ற பயிராகும். 
 
             பல்வேறு அழகுசாதனங்கள், மருந்து பொருள்கள் தயாரிப்பதற்கு இது பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரம், குஜராத், தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது பெருமளவில் பயிரிடப்படுகிறது.  3 வகை கற்றாழை: குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை என கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 
 
             இந்தியாவில் பயிரிடப்பட்டு வருவது குர்குவா கற்றாழை.  வறட்சிப் பிரதேசங்கள் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயர மலைபிரதேசங்களிலும் இது பயிரிடப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்தில், 30 முதல் 60 செ.மீ. நீளமாக சிறிய முட்களுடன் இருக்கும்.  தரிசுமண், மணற்பாங்கான நிலம், பொறைமண் போன்றவை இதற்கு ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
 
  நடவு: 
 
              தாய்ச்செடியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வயதுடைய பக்கக்கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவுள்ள கன்றுகளை தேர்ந்தெடுத்தல் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.  கற்றாழையை தனிப்பயிராக பயிரிடும்போது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் தேவைப்படும். இப்பயிரை வருடத்துக்கு இரண்டு பருவங்களில் பயிரிடலாம். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முற்றும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். 
 
              இதனால் இலையில் தரமான கூழ் கிடைக்கும்.  நிலத்தை இரணடு முறை உழுது, ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்கு செடிகளுக்கிடையே 3 அடி இடைவெளி விட்டு நடவேண்டும்.  இப்பயிருக்கு ரசாயன உரங்கள் தேவைக்கேற்ப இட வேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து இடுவது அவசியம். ஹெக்டேருக்கு 120 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இடுவது அவசியம். 
 
              இதனால் கூழ் அதிக அளவில் கிடைக்கும்.  கற்றாழையில் அதிக பூச்சித் தாக்குதல், நோய்கள் தோன்றுவதில்லை.  நீர்த் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இதற்கு நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.  அறுவடை: நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவபடுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  
 
              ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை கிடைக்கும். இலைகளில் 80 முதல் 90 சதவீதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து கூழை பிரித்தெடுக்க வேண்டும்.  அரக்கோணம் வட்டம், தண்டலம் ஊராட்சி கேசவபுரத்தை சேர்ந்த சுரேந்தர்பாபு முதன் முதலாக 4 ஏக்கர் நிலத்தில் சோற்றுகற்றாழையை பயிரிட்டுள்ளார். கற்றாழை பயிரிட விரும்புவோர் அவரிடம் ஆலோசனை பெறலாம்.  கேசவபுரம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சோற்றுக்கற்றாழை.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior