உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 11, 2011

புவனகிரி (பொது) சட்டமன்றத் தொகுதி பார்வை

 தொகுதி பெயர் : 
புவனகிரி
தொகுதி எண் :
157
 அறிமுகம் : 
       கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக திகழ்கிறது.
எல்லை : 
                 புவனகிரி தொகுதியில் உள்ள கிராமங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பழைய புவனகிரி தொகுதியில் இடம் பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. புவனகிரி, சேத்தியாத்தோப்பு. கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சிகள், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியத்தின் 41 ஊராட்சிகள், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம் ஒன்றியத்தின் 43 ஊராட்சிகள், மேல்புவனகிரி ஒன்றியத்தின் 40 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. 
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
 பேரூராட்சிகள்: 3 
புவனகிரி  18 வார்டுகள் 
சேத்தியாத்தோப்பு15 வார்டுகள் 
கங்கைகொண்டான்  15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 
124 
 கம்மாபுரம் ஒன்றியம்: (41)
                      பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம் வடக்கு, சேப்ளாநத்தம் தெற்கு, கோட்டகம், உய்யகொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, வடக்குவெள்ளூர், கூனங்குறிச்சி, ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கல், ஊ.மங்கலம், மும்முடிச்சோழகன், கம்மாபுரம், சு.கீணலூர், ஊ.கொளப்பாக்கம், வி.சாத்தமங்கலம், கோ.மாவிடந்தல், கார்குடல், கோ.ஆதனூர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், கார்மாங்குடி, ஏ.வல்லியம், சி.கீரனூர், மேலபாலையூர், மருங்கூர், கே.தொழூர், கீழப்பாலையூர், தேவங்குடி, சிறுவரப்பூர், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனூர், தர்மநல்லூர், கோட்டிமுளை, பெருவரப்பூர், பெருந்துறை, டி.பழவக்குடி, காவனூர்.
மேல்புவனகிரி ஒன்றியம்: (40) 
               அழிச்சிக்குடி, அகர ஆலம்பாடி, அம்மன்குப்பம், அம்பாள்புரம், ஆணைவாரி, பூதவராயன்பேட்டை, பு.கொளக்குடி, பு.சித்தேரி, பு.உடையூர், பு.ஆதனூர், சி,ஆலம்பாடி, சின்னநற்குணம், சொக்கன்கொல்லை, எல்லைக்குடி, எறும்பூர், ஜெயங்கொண்டான், வடகிருஷ்ணாபுரம், கத்தாழை, குமுடிமூலை, கிளாவடிநத்தம், மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், மேலமணக்குடி, நெல்லிக்கொல்லை, நத்தமேடு, பெரியநற்குணம், பிரச்சனராமாபுரம், பின்னலூர், சாத்தப்பாடி, தெற்குதிட்டை, துறிஞ்சிக்கொல்லை, உளுத்தூர், வடதலைக்குளம், வடக்குதிட்டை, வத்தராயன்தெத்து, வீரமுடையானநத்தம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரைமேடு.
கீரப்பாளையம் ஒன்றியம்: (43)
                 கே.ஆடூர், ஆயிப்பேட்டை, அ.அக்ராமங்கலம், பூதங்குடி, தேவன்குடி, இடையன்பால்சேரி, எண்ணநகரம், கண்ணங்குடி, கீரப்பாளையம், கீழ்நத்தம், கிளியனூர், கூளாப்பாடி, மதுராந்தகநல்லூர், டி,மணலூர், சி,மேலவண்ணியூர், முகையூர், டி.நெடுஞ்சேரி, ஓடாக்கநல்லூர், ஒரத்தூர், பாளையஞ்சேர்ந்தன்குடி, பண்ணப்பட்டு, பரதூர், பெருங்காலூர், பூந்தோட்டம், சாக்காங்குடி, சி.சாத்தமங்கலம், செங்கல்மேடு, சேதியூர், சிறுகாலூர், தரசூர், தென்ஹரிராஜபுரம், தெற்குவிருதாங்கன், வடக்குவிருதாங்கன், துணிசிரமேடு, வடஹரிராஜபுரம், வடபாக்கம், வாக்கூர், வாழைக்கொல்லை, வயலூர், சி.வீரசோழகன், வெள்ளியங்குடி, வெய்யலூர், விளாகம். 
வாக்காளர்கள் :  
ஆண் -  1,04,753
பெண் - 1,00,511
மொத்தம் -  2,05,264
வாக்குச்சாவடிகள் :  

மொத்தம் : 254  
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:  
மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம் : 9445000209

Read more »

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து மோதுவது யார்?


எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கடலூர்:

          மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை எதிர்ப்பு போட்டியிடுவது. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.வா, ம.தி.மு.க.வா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

              தி.மு.க. அணியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுவது, பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 முறை குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தற்போது போட்டியிடப் போவது 4-வது முறை ஆகும். அமைச்சர் என்ற முறையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை இத்தேர்தலில் எப்படியும் வீழ்த்துவதற்கு அனைத்து திட்டங்களையும், வியூகங்களையும் அ.தி.மு.க. வகுத்து இருப்பதாக அ.தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

            பெரும்பாலான நலதிட்டங்களை குறிஞ்சிப்பாடி தொகுதிக்கே நிறைவேற்றி இருக்கிறார் என்று அ.தி.மு.க. பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறது.அப்படி இருக்கும்போது அமைச்சருக்கு எதிராக, யாரை நிறுத்துவது என்பதில் அ.தி.மு.க. அணியில் தீவிர சிந்தனை எழுந்துள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலருமான எம்.சி.சம்பத் மனு அளித்து இருக்கிறார். 

               எம்.சி. சம்பத் பெரும்பாலும் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதையே அதிகம் விரும்புகிறார், ஆனால் கட்சி மேலிடம் அவரை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்களோ கடலூரில் போட்டியிடுமாறு அறிவுரை கூறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறிஞ்சிப்பாடி தொகுதியை ம.தி.மு.க.வுக்குக் கொடுப்பதாக இருந்தால், அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் என்.ராமலிங்கம்தான், அமைச்சருக்குச் சரியான போட்டி வேட்பாளராக இருக்கும் என்று, அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

                 ஆனால் என்.ராமலிங்கமோ குறிஞ்சிப்பாடி தொகுதியில், அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுவதைத் தவிர்க்க விரும்புவதாகவே அவரது சமூகத்தினரும், அவரது கட்சியினரும் தெரிவிக்கிறார்கள். இதே தொகுதியில் தே.மு.தி.க. விவசாய அணிச் செயலாளராக இருக்கும், ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான வி.சி. சண்முகமும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்றும், விருப்ப மனுகூடத் தாக்கல் செய்யவில்லை என்றும், அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                  அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்து இருக்கிறார். அவரும் நெய்வேலி தொகுதியையே அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தே.மு.தி.க. சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிட விரும்புவதாலும், பண்ருட்டி தொகுதி கிராமங்கள் பலவும், தொகுதி சீரமைப்பில் நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டு இருப்பதாலும், நெய்வேலி தொகுதியை அவர் விரும்பினால், தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

               அமைச்சர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சிகள் போட்டியிடுவதும், வலுவான போட்டியாக இருக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எனவே அமைச்சரை எதிர்த்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த வலுவான நபர் அல்லது தேர்தலுக்குப் புதியவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர், அல்லது ம.தி.மு.க. வேட்பாளர் ஒருவர் போட்டியிடக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Read more »

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலை விபத்து: இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரண தொகை வழங்க கோரிக்கை

கடலூர்:

              கடலூர் சிப்காட் தனியார் ரசாயனத் தொழிற்சாலை விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொதுமக்கள் பாதிப்பு இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை விடுத்தார்.  

              கடலூர் சிப்காட் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் 7-ம் தேதி இரவு ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால், அப்பகுதி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து, நிஜாமுதீன்  கூறியது:  

              தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்து மிகவும் மோசமானது. சம்பவம் நடந்து 3-வது நாளில்கூட, மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நீண்டகால சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். பலரது அன்றாட வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. பலர் தொடர்ந்து வேலை செய்வதிலும் உடல் ரீதியான சிரமம் ஏற்பட்டு உள்ளது. வீட்டில் ஆடு, கோழி உள்ளிட்ட உடமைகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.  

              இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரமாகவும், இடைக்காலமாகவும் பொதுமக்கள் பாதிப்பு இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரணம் கோரிப் பெற முடியும். நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.  சம்பவம் நடந்த அன்று மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தும், பாதிக்கப்பட்ட தொழிற்சாலைக்குள் செல்ல, மாஜிஸ்திரேட் அதிகாரம் பெற்ற, ஆட்சியரை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று அறிகிறோம். அவ்வாறு அனுமதிக்கப்படவில்லை என்றால் அது சட்டப்படி குற்றமாகும்.  

                 விபத்து நிகழ்ந்த தனியார் ரசாயனத் தொழிற்சாலை உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகள் பலவும், அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே இயங்கிக் கொண்டு இருக்கின்றன. ரசாயனத் தொழிற்சாலை விபத்து போன்று, அவற்றிலும் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் பல, பயன்படுத்தப்படுகின்றன.  எனவே ரசாயன தொழிற்சாலை விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதுபோல், ஏனைய தொழிற்சாலைகளின் நிலை குறித்தும் விசாரணை நடத்த, அரசு உத்தரவிட வேண்டும்.  

                 சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் நிலம், நீர், காற்று மாசு குறித்து, தற்போது ஆய்வை மேற்கொண்டு இருக்கும், தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் (நீரி), தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்தையும் பதிவு செய்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  ஏற்கெனவே 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீரி ஆய்வறிக்கையில், சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள 22 கிராமங்களில், மக்களின் சுகாதார நிலை குறித்து, பொதுவான ஆய்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டும், இதுவரை அந்த ஆய்வை நடத்த தமிழக அரசு, முயற்சிகூட மேற்கொள்ளவில்லை. தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்து நிகழ்ந்துள்ள இந்த நேரத்திலாவது, சுகாதார ஆய்வைத் தொடங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றார் நிஜாமுதீன்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior