உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

குருப்-1 தேர்வில் முறையற்ற வினாக்கள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி

             தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? உள்ளிட்ட சில கேள்விகளால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.

              டி.என்.பி.எஸ்.சி. சார்பில் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., டி.ஆர்.ஓ. உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதுமிருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுடையவர்களுக்கு தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது.தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பெண்கள் உள்பட 1.35 லட்சம் பேர் பங்கேற்றனர். 

               இந்தத் தேர்வில் எளிதான கேள்விகளே கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலான கேள்விகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர்.இந்த நிலையில் தேர்வில் ""பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? ஓரினச் சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த ஆண்டு எது?'' உள்ளிட்ட கேள்விகள் தங்களை அதிர்ச்சி அடைய வைத்ததாக தேர்வு எழுதிய பலர் கூறினர்.

இதுகுறித்து சென்னை மையம் ஒன்றில் தேர்வு எழுதிய ரமேஷ், கனகராஜ் ஆகியோர் கூறியது:

                  தேர்வில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது, மதுபானங்களை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளது. இதுபோன்ற தூண்டல்களால் ஒரு சிலர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. இதுபோல் ஓரினச்சேர்க்கை குறித்த கேள்வி, ஓரினச்சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதை பிரகடனப்படுத்துவதைப் போலவும், அதுகுறித்து அறிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவது போலவும் அமைந்துள்ளது என்றனர்.

               பொது அறிவுக்கான விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தவிர்க்கவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.






Read more »

கடலூர் துறைமுகம் புத்துயிர் பெற்றது : மியான்மர் நாட்டில் இருந்து மரக்கட்டைகள் வந்தடைந்தது

 கடலூர்:

         மியான்மர் நாட்டில் (பர்மா) இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் கடலூர் துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன.
 

           கடலூர் துறைமுகம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும், மாநில அரசு போதிய கவனம் செலுத்தாததாலும், கடலூரில் அதற்காக குரல் கொடுக்க சரியான அரசியல் தலைமை இல்லாததாலும், துறைமுகம் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளித்த கடலூர் துறைமுகத்தில், தற்போது 10 தொழிலாளர்களுக்குக் கூட வேலைவாய்ப்பு இல்லை.
 

           துறைமுக அதிகாரிகளின் முயற்சியால் அவ்வப்போது ஓரிரு கப்பல்கள் வந்து போகின்றன. சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வரும் கப்பல்கள் நேரடியாக, அந்த தொழிற்சாலைகள் அமைத்துள்ள சிறிய துறைமுகங்களுக்குச் சென்று விடுகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு தலா 27 ஆயிரம் டன் யூரியா உரம் ஏற்றி வந்த 2 கப்பல்கள் கடலூர் துறைமுகம் வந்தன. துறைமுகத்தில் யூரியாவை சேமித்து வைக்கவும், துறைமுகத்தில் இருந்தே சரக்குகளை, ரயில் வேகன்களில் ஏற்றும் வசதியும் இல்லாததால், யூரியவை இறக்குமதி செய்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 

          எனவே யூரியா கப்பல்கள் தொடர்ந்து வரவில்லை. தற்போது மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட கப்பல் மியான்மரில் இருந்து வந்துள்ளது. மே 28-ம் தேதி மியான்மர் நாட்டின் யான்கேன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட யான்பயோ என்ற இந்தக் கப்பல், சனிக்கிழமை கடலூர் வந்தது. கடலூர் துறைமுகத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் நங்கூரமிட்டு உள்ளது. இதில் 2,600 டன் எடை கொண்ட 1,460 காட்டு மரக்கட்டைகள் எடுத்து வரப்பட்டு உள்ளன. 

          இவைகளை பாஜிகள் மூலம் (சரக்கு மிதவை) கரைக்குக் கொண்டு வரப்பட்டு, துறைமுக சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு வரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடலூர் துறைமுகத்தில் இருந்து இந்த மரக்கட்டைகள் டிரக் லாரிகள் மூலம், புதுவையில் உள்ள பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குக் கொண்டு போகப்பட உள்ளன. கப்பலில் இருந்து அனைத்து மரக்கட்டைகளையும் கரைக்குக் கொண்டுவர ஒரு வாரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மியான்மர் நாட்டுக் கப்பலில் மரக்கட்டைகள் கடலூர் வந்ததன் மூலம், கடலூர் துறைமுகத்துக்குக் கட்டணமாக ரூ. 5 லட்சம் கிடைக்கும் என்றும் துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

           சரக்கு முறையாகக் கையாளப்படுவதாக புதுவை பிளைவுட் நிறுவனமும், மியான்மர் நிறுவனமும் திருப்தி அடைந்தால், மாதம் இரு கப்பல்கள் கடலூர் துறைமுகத்துக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். கடலூர் துறைமுகத்துக்கு தொடர்ந்து கப்பல்கள் வந்தால் கடலூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.




Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் அமோக விளைச்சல்

கடலூர்:

            அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் முடிந்த பிறகும், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயில் தகித்துக் கொண்டு இருக்கிறது. 

          பல ஊர்களில் இன்னமும் 100 டிகிரியில் இருந்து வெப்பம் குறைந்த பாடில்லை. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மக்கள் இளநீர், நுங்கு, பதநீர், பழங்கள் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். ஏழை எளிய மக்களும் வாங்கிச் சாப்பிடும் விலையில் கிடைப்பது வெள்ளரிக்காய்தான். இளநீருக்கு இணையானது வெள்ளரிக்காய் என்று இந்திய மருத்துவம் தெரிவிக்கிறது.
 

           வெள்ளரிக்காய் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைகாலப் பயிராக விளைகிறது. அதிக தண்ணீர் தேவையின்றி, பராமரிப்புச் செலவுகள் இன்றி, விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர் வெள்ளரிக்காய். திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட வடமாவட்டப் பகுதிகளில் ஜெர்க்கி என்ற புதியரக வெள்ளரிக்காய் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகம். ஆனால் பெருவாரியாக நாட்டு ரகமே பயிரிடப்படுகிறது. நாட்டு ரக வெள்ளரிக்காய்தான் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
 

           கடலூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி முடிவுற்றதும், வயல்களில் பெருவாரியாக, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். புவனகிரி, முட்லூர், புதுச்சத்திரம், ஆண்டிக்குழி, வடலூர், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வெள்ளரி விளைச்சல் அமோகமாக உள்ளது. வெள்ளரித் தோட்டங்களில் 10 கிலோ கொண்ட கூடை ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
             ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை வெள்ளரிக்காய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சிறுவியாபாரிகள் வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப் பழங்களை வாங்கி வந்து நகர்ப் புறங்களில் விற்பனை செய்கிறார்கள். வெள்ளரிப் பழங்கள் கூடை கூடையாக தற்போது விற்பனைக்கு வருகின்றன. வெள்ளரிப் பழங்களைவிட, காய்க்கே அதிக கிராக்கி உள்ளது.  
           இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியபோது 3 நாள்கள் மழை பெய்ததன் காரணமாக, வெள்ளரிச் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தன. அதன்பிறகு விவசாயிகள் மீண்டும் வெள்ளரி சாகுபடி செய்து, தற்போது வெள்ளரிக்காய் வெள்ளரிப்பழம் அறுவடை ஆகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளரிக்காய் சிறந்த நீரிளக்கி. தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமனைக் குறைக்கும். பசியைத் தூண்டும். ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைத் தணிக்கும். தலைச் சுற்றலைத் தடுக்கும்.

              மூட்டுவலி வீக்கம், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும். ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்கத் தேவையான ரசாயனப் பொருள் வெள்ளரிக்காயில் உள்ளது. புகைப்பிடிப்போருக்கு குடலில் படியும் நிகோடின் விஷத்தை நீக்கும்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior