உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 13, 2011

ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள கோரிக்கை

             ஓட்டுநர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் அப்பாவு, போக்குவரத்து துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு: 

               தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டை குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு அங்கம். குடும்ப அட்டையை அடையாள அட்டையாக பல அரசு துறை பயன்பாட்டிற்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் போக்குவரத்துத் துறையில் ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டை நிராகரிக்கப்படுகிறது. தேர்தல் அடையாள அட்டை, பாஸ்போர்ட், எல்.ஐ.சி., பாண்டு ஆகிவயற்றில் ஒன்றை கேட்கின்றனர். இவைகள் இல்லையென்றால் நோட்டரி பப்ளிக் சான்று பெற வேண்டும். போக்குவரத்துத் துறை கேட்கும் ஆவணங்கள் ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் வைத்திருக்க இயலாது. 

               நோட்டரிக் பப்ளிக் சான்று, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கையெப்பம் ஆகியன பெற்றுவர வேண்டியிருப்பதால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே அரசு கோபுர சின்னத்துடன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டையை போக்குவரத்துத்துறை மட்டும் புறக்கணிப்பது நியாயமில்லை. எனவே ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட முகவரி சான்றுக்காக குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



Read more »

கடலூர் மாவட்டத்தை புறக்கணிக்கும் நெடுஞ்சாலைத்துறை

கடலூர் :

                    தமிழகத்தில் மிக மோசமான சாலைகளை உடைய மாவட்டமாக கடலூர் மாவட்டம் திகழ்கிறது.

                      கடலூர் மாவட்டதிலிருந்து பிற மாவட்டங்களை இணைக்கும் அனைத்து சாலைகளும் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளதால் இம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி, இம்மாவட்டதிற்கு வந்து செல்லும் பிற மாவட்டத்தினரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக கடலூர் விளங்கியது. அதன் பிரதிபலிப்பு மாறாமல் இன்னும் அதன் சுவடுகளுடன் கடலூர் மாவட்டம் காட்சியளிக்கிறது. 

                  அதற்கு சான்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களை காணலாம்.  அத்தகைய பழமைவாய்ந்த கடலூர் மாவட்டத்தில், சாலை வசதி ஏனோ இன்னும் தரம் உயர்த்தப்படாமலும்,  அகலமாக்கப்படாமலும், குறுகிய மற்றும் குண்டும் குழியுமான சாலைகளாகவே காட்சியளிக்கின்றன. தமிழகத்தில் உள்ள சாலைகளின் சாலைகளின் நீளம் மொத்தம் 199040 கி.மீ. இதில் 61640 கி.மீ. சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 4873 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 9384 கி.மீ. மாவட்ட முக்கிய சாலைகளின் நீளம் 11288 கி.மீ., மாவட்ட இதர சாலைகளின் நீளம் 63096 கி.மீ. ஆகும். 

                 இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் நீளம் 1898 கி.மீ. இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 94.98 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 308.96 கி.மீ, மாவட்ட முக்கிய சாலைகளின் நீளம் 395.64 கி.மீ. மாவட்டத்தின் இதர சாலைகளின் நீளம் 1204.85 கி.மீ ஆகும்.  இதில் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 93 கி.மீ நீள சாலைகள் தரம் உயர்த்தப்படவுள்ளது. மற்ற மாவட்ட சாலை வசதிகளைக் காட்டிலும் கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளது.  

                 குறிப்பாக கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து சேலம் செல்லும் சாலை, விருத்தாசலம்-வேப்பூர் வரையிலான சாலை, கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் சாலை, விருத்தாசலம் - தொழுதூர் சாலை ஆகியவை போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளன. கார் வைத்திருப்பவர்கள் பண்ருட்டி மார்க்கமாக சென்று கள்ளக்குறிச்சி வழியாக சேலம் சென்றுவிடுகின்றனர். சரக்கு ஏற்றிவரும் லாரிகள் மேற்கண்ட சாலையில் லாரியை பழுது இல்லாமல் ஓட்டிவந்தால் அதுவே ஒரு பெரும் சாதனை என்றே குறிப்பிடலாம். 

               பண்ருட்டியிலிருந்து - விக்கிரவாண்டி இடையிலான சாலையும் இதே நிலையில்தான் உள்ளது. இதனால் சென்னை செல்வோர் கடலூர் வழியாக பதுச்சேரி சென்று கடற்கரை சாலை வழியாக சென்னை செல்கின்றனர். பண்ருட்டியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையும் படுமோசமான நிலையில் உள்ளது. தங்கநாற்கர சாலைத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தபடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி - தஞ்சை சாலை மார்க்கத்தில் இம்மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கண்டரக்கோட்டை- மீன்சுருட்டி வரையிலான 65 கி.மீ. சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

              தஞ்சை, கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வழியாகத்தான் சென்னை செல்லவேண்டும். இந்தசாலை ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்திலும் மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. இதை சீரமைக்கவே ஒவ்வொரு ஆண்டும் ரூ. 17 கோடியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கிய போதிலும் இதுவரை முழுமை பெறவில்லை. இந்த சாலையில் வடலூருக்கு 2 கிலோ மீட்டருக்கு முன் அமைந்துள்ள, 100 ஆண்டுகளை கடந்த குறுகிய பாலம் இதுவரை சீரமைக்கப்படாமல், குறுகிய பாலமாகவே இருப்பதால் இந்த பாலத்தில் 10 தினங்களுக்கு ஒரு விபத்து நடந்தேறியவண்ணம் உள்ளது. 

               பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்த நிலையிலும், பாலத்தின் நிலை குறித்து எச்சரிக்கை பதாகைகளோ அல்லது சிவப்பு விளக்குகளோ இதுவரை பொருத்தாதது நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு மாவட்டதில் சாலை வசதிகள் சிறப்பாக இருக்கும்பட்சத்தில், அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் தொழில் நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களை அமைக்க முன்வருவார்கள். 

           கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக என்எல்சி விளங்குகிறது.  கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடலூரில் சிறிய துறைமும் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முன்வராதது வருத்தமளிக்கிறது. தற்போது இரு அமைச்சர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களாவது மாவட்டத்தின் நிலையை உணர்ந்து சாலைகள் மேம்பட உதவி புரிவார்களா என்ற எதிர்பாப்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.






Read more »

தமிழ் வழி பி.இ.: தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாமா

              தேர்வுகளைத் தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி பி.இ. படிக்கும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.  

                பள்ளிகளில் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்கள், பொறியியல் பட்ட பாடங்களை எளிதாகப் புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக பி.இ. மெக்கானிகல் மற்றும் சிவில் பிரிவுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது படித்து வருகின்றனர். 

                   சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இந்த தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.  அப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க. பொன்முடி, தமிழ் வழி பி.இ. படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தேர்வுகளை தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாம் எனக் கூறினார். ஆனால், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளைத் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று துறைத் தலைவர்கள் சிலர் வலியுறுத்தினர். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதல் மாதிரித் தேர்வின்போது, தூய தமிழில் கேள்வித் தாள் தயாரிக்கப்பட்டு இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

                 இதனால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.  இதைத் தொடர்ந்து, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாம் என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹரும் கூறினார். இதனையடுத்து, மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதி வந்தனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புதிதாக சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழிருந்த உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் அதன் கீழ் மாற்றப்பட்டன. 

                  இந்த நிலையில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அனைத்துக் கல்லூரிகளுக்கும் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பினார். இதனால் மீண்டும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இந்த உத்தரவு காரணமாக, சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை (விழுப்புரம் வளாகம்) சேர்ந்த 4 தமிழ் வழி பி.இ. மாணவர்கள், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

                 இப்போது 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து, அண்ணா பல்கலைகழகத்தை முன்பிருந்த நிலைக்கு மாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தங்களுக்கும் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுத தமிழக அரசு உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி மாணவர்களிடைய எழுந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் சில, பாடத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளன. இப்போது 5 பல்கலைக்கழகங்களும் ஒன்றாக இணைக்கப்படுவதால், பாடத் திட்ட ரீதியாக தங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்ற அச்சமும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.  

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (விழுப்புரம் வளாகம்) பேராசிரியர் ஜெயச்சந்திரன் கூறியது:  

              பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தில் சிறிய அளவில்தான் மாற்றங்களைச் செய்துள்ளன. அதே நேரம், தரத்தைக் குறைக்கும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, மீண்டும் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்குவதால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கப் போவதில்லை. மேலும், தமிழ் வழி பி.இ. படிப்புகளின் பாடத் திட்டத்தில் மாற்றம் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது: 

                அண்ணா பல்கலைக்கழகங்களை இணைப்பது என்ற தமிழக அரசின் முடிவால், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பாடத் திட்டம் சர்வதேச தரம் உடையது என்பதை அனைவரும் அறிவர். எனவே, ஒருங்கிணைப்பு முடிவால் மாணவர்களுக்கு நன்மைதான் ஏற்படும். தொடக்கத்தில் சிறு பிரச்னைகள் எழும் என்றபோதும், பின்னர் சரியாகிவிடும் என்று அவர் கூறினார்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior