உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

நெய்வேலி இளைஞரின் மனிதாபிமானம்

2 கால்களும் இல்லாத பெண்ணை காதலித்து மணந்த வாலிபர் : வடபழனி கோவிலில் பெற்றோர் முன்னிலையில் இன்று திருமணம்



 
பொன்னை விரும்பும் பூமியிலே...
என்னை விரும்பும் ஓருயிரே... 
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே...

 
             என்று ஆலயமணி படத்தில் கால்களை இழந்த கதாநாயகி சரோஜாதேவியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியபடி நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பாடுவார்.  

          அதேபோல 2 கால்களும் இல்லாத ஒரு பெண்ணை மோகன் என்ற வாலிபர் திருமணம் செய்து புரட்சி செய்து இருக்கிறார்.   வடபழனி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ( 19.06.2011)  காலை நடந்த 50 ஜோடிகள் திருமணத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மோகன்- கற்பகம் திருமணம்தான்.

         பட்டுவேட்டி கட்டி கம்பீரமாக காட்சி அளித்த மணமகன் மோகன் தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வந்தார். அதில் 2 கால்களையும் இழந்த ஊனமுற்ற இளம்பெண் கற்பகம் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தார். பெற்றோர் முன்னிலையில் அவர்கள் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.

ஊனமுற்ற பெண்ணை மணந்த மணமகன் மோகன் கூறியது:-  

            எனக்கு சொந்த ஊர் நெய்வேலி. எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்து உள்ளேன். புரசைவாக்கத்தில் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறேன். அந்த கடையில்தான் கற்பகமும் வேலை பார்க்கிறார். தினமும் தள்ளுவண்டியில் தாயார் கடைக்கு அழைத்து வருவார்.

           எனக்கு சிறுவயது முதலே ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கற்பகத்தை பார்த்ததும் அந்த எண்ணம் மேலும் அதிகரித்தது.   கால்களை இழந்தபோது தன்னோடு பழகியவிதமும், நடந்து கொண்டவிதமும் என்னை கவர்ந்தது. அவரை உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கினேன்.  எனது விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தேன். எல்லோருடைய சம்மதத்துடன் கற்பகத்தை வாழ்க்கை துணையாக ஏற்று உள்ளேன். வெற்றிகரமாக எங்கள் வாழ்க்கை பயணத்தை நடத்துவோம்.  

மணமகள் கற்பகம் கூறியது:-

           எ  னக்கு 2 1/2 வயது இருக்கும்போது போலியோ தாக்கியதால் 2 கால்களும் செயல் இழந்து விட்டது. 10-ம் வகுப்பு வரை படித்தேன். எனது தந்தை சண்முகம் இறந்து விட்டார். அம்மா சண்முகசுந்தரிதான் ஊன்றுகோலாக இருந்து என்னை தினமும் தள்ளு வண்டியில் வைத்து பார்மசிக்கு அழைத்து செல்வார்.  எல்லோரையும் போல் எனக்கும் வாழ்வு கிடைக்குமா? அம்மாவுக்கு பிறகு யார் நமக்கு துணை இருப்பார்கள் என்று ஏங்கி கொண்டு இருந்தேன். எனது ஏக்கத்துக்கு நல்ல தீர்வு கிடைத்து உள்ளது. மோகன் கடவுள் போல் கணவராக கிடைத்து உள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

          கற்பகத்தின் அக்காள் பிரேமா ஆரோக்கியமானவர். ஆனால் அவரது கணவர் வள்ளிநாயகம் ஊனமுற்றவர். கற்பகத்தின் தங்கை கவுரி எந்த குறையும் இல்லாதவர். அவரது கணவர் அய்யனார் ஊனமுற்றவர். 2 கால்களையும் இழந்த கற்பகத்துக்கு எந்த குறையும் இல்லாத மோகன் கணவராக கிடைக்கப்பெற்றுள்ளார். கற்பகத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி. 
 

 
 
 

Read more »

விருத்தாசலத்தில் எரிசாராய ஆலை கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு

விருத்தாசலம்:
        
            விருத்தாசலம் தாலுக்கா கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள தனியார் எரிசாராய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பதாகவும், அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  
               இந்த தனியார் எரிசாராய ஆலையிலிருந்து மதுபானத்துக்கு தேவையான மூலப்பொருள் தயாரிக்கப்பட்டு மதுபான ஆலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் எரிசாராயத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை அருகிலுள்ள முந்திரிக் காடுகளில் ஊற்றிவிடுவதால், முந்திரி விவசாயம் பாதிப்பதாகவும், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, இது கழிவுநீரல்ல உர வடிநீர். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளனர்.  
              ஆனால் கிராம மக்களோ இந்த ஆலை வந்த பிறகுதான் முந்திரி விளைச்சல் குறைந்து விட்டதாகவும், இந்த கழிவுநீரிலிந்து உற்பத்தியாகும் ஒருவித ஈக்கள், கால்நடைகளை தாக்கி நோய்க்கு ஆளாக்குகிறது என்கின்றனர். மேலும் இந்த கழிவுநீரை விளைநிலங்களில் ஊற்றுவதால், மழைக்காலங்களில் மழைநீருடன் இந்த கழிவுநீரும் மண்ணில் கலந்து, குளங்களையும், ஆழ்துளைக் கிணறுகளையும் பாதித்து வருவதாகக் கூறுகின்றனர்.  இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றால் சுமார் 20 கி.மீ தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதோடு, கண் எரிச்சல், மழைக் காலங்களில் மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.  
              இந்த கழிவுநீரை லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் போது, கழிவுநீர் கசிந்து சாலையில் ஊற்றிக்கொண்டே செல்வதால் சாலை சேதமடைவதோடு, இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் இந்த கழிவுநீரை பொது வடிகால்களில் ஊற்றிவிடுவதால் சாலையோரத்தில் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால், பொதுமக்கள் வசிக்குமிடத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதோடு, விளைநிலங்களையும் பாழாக்கும் தனியார் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆய்வு நடத்தி, உரிய முறையில் கழிவு நீரை அகற்றிடவும், துர்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதி மக்கள் சுகாதாரமான முறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Read more »

சிதம்பரம் பொன்னேரியில் பெயரளவுக்கே தூர்மண் அள்ளப்படும் அவலம்


பொக்லைன் மூலம் பெயரளவுக்கே தூர்மண் அள்ளப்படும் பொன்னேரி.

சிதம்பரம்:
 
           சிதம்பரம் அருகே பொன்னேரியில் பெயரளவுக்கே தூர்மண் எடுப்பதால் விவசாயிகள் மிகவும் ஏமாற்றமும், கவலையும் அடைந்துள்ளனர்.  

              அணைக்கரையிலிருந்து சிதம்பரத்தை அடுத்த சின்னகாரமேடு வரை கொள்ளிடத்தின் இடது கரை ரூ.108 கோடி செலவில் பலப்படுத்தி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கரையை பலப்படுத்த வீராணம் ஏரி மற்றும் பொன்னேரியிலிருந்து தூர்மண்ணை எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.  

            ஆனால் வீராணம் ஏரியிலிரும், பொன்னேரியிலும் பெயரளவுக்கு மண் அள்ளப்படுவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். வீராணம் ஏரி, பொன்னேரியிலிருந்து மண் அள்ளுவதால் ஏரியும் தூர்வாரப்படும், கூடுதல் கொள்ளளவு நீர் தேக்கலாம் என அங்கிருந்து மண் அள்ளுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

             ஆனால் பெயரளவுக்கு அங்கு மண் அள்ளப்படுவதாலும், இதை காரணம் காட்டி குறுவை சாகுபடிக்கு இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.  ஒப்பந்தத்தின்படி பொன்னேரியிலிருந்து 7.012 லட்சம் கன மீட்டர் மண் அள்ள வேண்டும். ஆனால் இதுவரை 2 லட்சம் கனமீட்டர் மண்கூட அள்ளப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கனமழைக்காலங்களில் பொன்னேரியில் ஆண்டுதோறும் வெள்ளப் பெருக்கெடுத்து விவசாயப் பணி பாதிக்கப்படுகிறது.  

            இந்தாண்டாவது பொன்னேரி தூர்வாரப்பட்டு கூடுதல் நீர் தேக்கப்படுவதால் வெள்ளப் பெருக்கை தவிர்க்கலாம் என இருந்த விவசாயிகள் மத்தியில் சரியாக மண் அள்ளப்படாததால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர் என கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.ராஜசேகரன் தெரிவித்தார்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior