உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 27, 2011

தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் விவசாயிகளுக்கான B.F. Tech பட்டப் படிப்பு

               தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம், இளநிலை பண்ணை தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கான (பி.எஃப்.டெக்) விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இதுதொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வீ.வள்ளுவபாரிதாசன் வெளியிட்ட அறிவிப்பு: 

            தமிழக விவசாயிகளுக்கான, இளநிலை பண்ணை தொழில்நுட்ப பட்டப் படிப்பு (பி.எஃப்.டெக்.), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்தப் பட்டப் படிப்பு மூலமாக விவசாயிகள் சுயதொழில் முனைவோர் ஆகலாம். 

                 நிலத்தைப் பண்படுத்துதல் முதல் அறுவடை வரையிலும், தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் தாங்களே இப்புத்தகத்தைப் படித்து தொழில்நுட்பங்களை செயல்முறைப் படுத்த முடியும். பருவ முறையில் (செமஸ்டர்) மூன்று ஆண்டுகளுக்கு ஆறு பருவங்களில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.  

            பயிர் உற்பத்தி, பயிர்ப் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம், பண்ணை பார்வையிடல் ஆகியவை பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.  

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்: 

              இப்படிப்பில் 10-ம் வகுப்பைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய அனைவரும் சேரலாம். 2010-11 ஆண்டில் 229 மாணவர்கள் இப்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். 

              திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், கோவை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்; தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; வேளாண் அறிவியல் மையம், திண்டிவனம்; வேளாண் அறிவியல் மையம், சந்தியூர் ஆகிய பயிற்சி மையங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.  

மாணவர் சேர்க்கை: 

             2011-12ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் ரூ.100 செலுத்தி நேரிலோ அல்லது வரவோலை மூலமாகவோ பெறலாம். தபாலில் பெற விரும்புவோர் என்ற (payable at SBI, TNAU Branch, Coimbatore-3)  முகவரிக்கு வரைவோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.  

 ஜூலை 15-க்குள்: 

                பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-641003 என்ற முகவரிக்கு, பயிற்சிக் கட்டணத்திற்கான ரூ. 7,500-க்கான வரைவோலையுடன்  (payable at SBI, TNAU Branch, Coimbatore-3) ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

தொலைபேசி எண்கள்: 

0422- 661 1229, 94421 11058, 94421 11048, 94421 11057. 

மின்னஞ்சல்: 
 

இணையதளம்:








Read more »

ஆன்-லைனில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள்

        மக்களுக்கு எளிதாக, விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க, சரிபார்ப்பு விண்ணப்பங்களை தபாலில் அனுப்புவதற்கு பதில், ஆன்-லைனில் அனுப்புமாறு போலீசாருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. 

           மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில், மதுரை கோச்சடையில் ஜூன் 30 முதல், தனியார் பங்களிப்புடன் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படவுள்ளது. மதுரை பாரதி உலா ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த பின், அவை சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., அலுவலக பாஸ்போர்ட் பிரிவுக்கு வரும்.

            வீட்டு முகவரி, விண்ணப்பத்தாரர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, சம்பந்தப்பட்ட ஸ்டேஷனிற்கு அவை அனுப்பப்படும். ஆய்வுக்கு பின், பாஸ்போர்ட் பிரிவுக்கு அனுப்பப்படும். அந்த விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்புவர். இந்த நடைமுறையால், பாஸ்போர்ட் கிடைக்க குறைந்தது இரு வாரங்களாகும்.


          இதை தவிர்க்க, பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படுகிறது. இனி, போலீசாரால் ஆய்வு செய்த விண்ணப்பங்களை, தபாலில் அனுப்பாமல், ஆன்-லைனில் கேட்கப்படும் விபரங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்து அனுப்புமாறு போலீசாருக்கு பாஸ்போர்ட் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த புதிய முறை ஜூன் 30ல் அமலாகிறது. இதன் காரணமாக, ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். 




Read more »

காவிரி டெல்டா பாசனத்திற்கு கீழணையில் 29ல் தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில் :

           காவிரி டெல்டா பாசனத்திற்கு, கீழணையில் இருந்து, வரும் 29ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடலூர், நாகை, தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா பாசனத்திற்கு, மேட்டூரில் இருந்து, கடந்த 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர், கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. கீழணை வந்து சேர்ந்த தண்ணீர், தற்போது கீழணையின் மொத்தம் உள்ள, 9 அடியில், 3 அடிக்கு தேங்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

           கீழணைக்கு தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 18ம் தேதி வடவாறு வழியாக வீராணத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடவாற்றங்கரை விவசாயிகள், குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மூன்று மாவட்ட பாசனத்திற்காக, கீழணையில், வரும் 29ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. கீழணையில் இருந்து வீராணத்திற்கு வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, ஏரிக்கு வினாடிக்கு 500 கன அடி வரை தண்ணீர் வருவதால், வறண்டு கிடந்த வீராணத்தில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளது.

            கந்தகுமாரன் மதகு வரை தண்ணீர் வந்து விட்டது. வரும் 29ம் தேதி கீழணையில் தண்ணீர் திறந்துக்கப்படுவதால், அதிக அளவு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீராணத்தில் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior