உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 01, 2011

பாஸ்போர்ட் சேவை மையம் : ஜூலை முதல் சென்னை, கோவையில் தொடங்கத் திட்டம்

              சென்னை, கோவையில் ஜூலை மாதத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவைத் திட்ட இயக்குநர் அனில் குமார் சோப்தி.

திருச்சியில் புதன்கிழமை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவைத் திட்ட இயக்குநர் அனில் குமார்  அளித்த பேட்டி: 

            "நாடு முழுவதும் 77 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டது. பெங்களூர், சண்டீகர் உள்பட 7 இடங்களில் கடந்த ஆண்டு இம் மையங்கள் தொடங்கப்பட்டன.இப்போது, புதன்கிழமை (ஜூன் 29) எட்டாவதாக திருச்சியிலும், ஒன்பதாவதாக தஞ்சாவூரிலும் இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

            ஜூலை மாதத்தில் சென்னையில் 3 இடங்களிலும், தில்லி, விசாகப்பட்டினம், கோவையில் தலா ஓர் இடத்திலும் என மொத்தம் 6 பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் 8 மாதங்களுக்குள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .தவிர, 14 இடங்களில் சிறிய அளவிலான பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கும் திட்டமும் உள்ளது. இவற்றில் 5 மையங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும், மற்றவை ஒரிசா, கர்நாடகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் அமைக்கப்படும். 

                இந்த மையங்கள் அனைத்தும் அரசு ஊழியர்களே இயக்கும் வகையில் அமையும். இப்போது, அமைக்கப்பட்டு வரும்   சேவை மையங்களில் விண்ணப்பங்கள் பெறுதல், புகைப்படம் எடுத்தல், விரல் ரேகைகள் பதிவு செய்தல் ஆகியவை மட்டுமே மேற்கொள்ளப்படும். மீதமுள்ள பணிகள் அனைத்தும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்தான் மேற்கொள்ளப்படும். எனவே, பாதுகாப்பு விஷயத்தில் எந்த வித பிரச்னையும் ஏற்படாது.திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்கெனவே ஆண்டுக்கு ஏறத்தாழ 1.25 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டன. 

            இப்போது, பாஸ்போர்ட் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் படிப்படியாக மூடப்படும்' என்றார் அனில்குமார் சோப்தி.

பாஸ்போர்ட் சேவை மையம் இணையதள முகவரி 


 
 
 
 
 
 
 







Read more »

அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி திட்டத்திற்கு அமெரிக்கக் குழுவினர் நிதியுதவி


துணை வேந்தர் எம்.ராமநாதனை (வலதுகோடி) சந்தித்த அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக குழுவினர்.
 
சிதம்பரம்:
 
           பெண் சிசுக்கொலை தடுப்பு தொடர்பான ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழகக் குழுவினர் வியாழக்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்தனர்.
 
             மெக்சிகன் பல்கலைக்கழக அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் தொழில்துறை தொடர்பு அதிகாரி டான் டட்கிவிக்ஸ் தலைமையிலான குழுவினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ராமநாதன், வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் செய்திருந்தார்.
 
           கடந்த ஆண்டு மீனவர் பென்களுக்கான தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மெக்சிகன் பல்கலைக்கழகம் நிதியுதவி அளித்தது. இதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் பெண்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதை பாராட்டிய மெக்சிகன் பல்கலைக்கழக குழுவினர், தற்போது இந்த ஆண்டு பெண் சிசுக்கொலை தடுப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள நிதி வழங்க முன்வந்துள்ளது என பேராசிரியர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் தெரிவித்தார்.
 
 
 
 

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பண்ருட்டி நூலாசிரியர் ஆர்.பஞ்சவர்ணத்திற்கு விருது

பண்ருட்டி:
         
             நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள 14-வது புத்தக கண்காட்சியில், பண்ருட்டி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர்.பஞ்சவர்ணம் (படம்) சிறந்த நூலாசிரியருக்கான சான்றும், விருது பெறுகிறார்.

              அவர் தொகுத்து எழுதிய "பிரபஞ்சங்களும் தாவரங்களும்' என்ற நூல் கண்காட்சியில் வெளியிடப்படவுள்ளது.பண்ருட்டி காமராஜர் தெருவில் வசிப்பவர் ஆர்.பஞ்சவர்ணம். பி.யூ.சி. படித்து வேளாண் தொழிலை செய்து வந்தார். 1996 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் நகர்மன்றத் தலைவராக இருந்த காலத்தில் பண்ருட்டி நகராட்சி கணினிமயமாக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றதால். இதர நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது பல பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றது.

             இவர் தொடர்ந்து 2005-2006-ல் மாநில திட்டக்குழு (குடிநீர் வடிகால்) உறுப்பினர், 2007-2008-ல் கோவை பாரதியார் பல்கலைக் கழக பாடக்குழு உறுப்பினர் (எம்.பி.ஏ), நிறுவனர்-தலைவர் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் நிவாரணக் குழு மற்றும் நிறுவனர் தாவரத் தகவல் மையம் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.தாவரங்கள் மீது அதிக பற்று கொண்டவர். தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் தீமைகளின் நிலை உணர்ந்து மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி நகர பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 

             மேலும் பொதுமக்கள் உணர வேண்டும் என்ற நோக்கில். முன்னோர்களின் சம்பிரதாயம், வழக்கம், மரபு படி திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில்களில் ராசி, நட்சத்திரங்களுக்கு ஏற்ற தலமரங்களை உருவாக்கி அதன் மருத்துவ குணத்துடன் கல்வெட்டில் பதித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து இயற்கை வழிபடும் முறையை ஏற்படுத்தியுள்ளார். இவர் எழுதிய நூலில் தாவரங்களை இனம் கண்டு பெயர், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காணவும், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள் என அனைத்தையும் தொகுத்து அளித்துள்ளார். 

            நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் டி.மதிவாணன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன இயக்குநர் (சுரங்கம்) ஆகியோர் பங்கேற்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பஞ்சவர்ணத்துக்கு சான்றும், பரிசும் அளிக்கப்படுகிறது.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior