உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 21, 2011

கடலூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நெல் விவசாயம்

கடலூர்:

            தொடர்ந்து நெல் விவசாயம் செய்ய வேண்டுமா என்ற சலிப்பு, தமிழக நெல் விவசாயிகளிடையே ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் பரப்பளவும் நெல் உற்பத்தியும், நெல் விவசாயத்துக்கான ஆர்வமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

                இந்த நிலையை மாற்ற நெல் விவசாயிகளுக்கு அரசு மேலும் சலுகைகளை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  2010-11-ம் ஆண்டில் 21.5 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு 20.71 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. 81.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு 71.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப் பட்டது. 

               கடலூர் மாவட்டத்தில் சம்பா உள்ளிட்ட அனைத்து பருவங்களிலும் 3.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது.  தமிழகத்தின் மிகப்பெரிய சாகுபடியான சம்பா நெல் சாகுபடிப் பணிகள், தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க இருக்கிறது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 16 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா பாசன நெல் சாகுடி பெரும்பாலும், கர்நாடகத்தில் பெய்யும் மழையின் அளவையும், கர்நாடக அரசின் பெருந்தன்மையின் அளவையும் பொறுத்ததாக மாறியிருக்கிறது.  நெல் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், நியாயமான விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கருத்து. 

                அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தால், விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை என்பது விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இதனால் விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறை, விவசாயத்தை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்த போதிலும் மக்களுக்குத் தேவையான அரிசி கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்துவிடுவதால், உற்பத்திக் குறைவு பற்றி அரசு, அதிகம் சிந்திக்கும் நிலையில் இல்லை. 

                ஆனால் நெல் விவசாயிகளுக்கோ, இதை விட்டால் வேறு வழியில்லை என்ற பரிதாபநிலை. டெல்டா பாசனப் பகுதிகளில் நெல்லை விட்டால் வேறு பயிர்களை பயிரிட முடியாத நிலை. இதனால் எத்தனை கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும், ஆள் பற்றாக் குறை என்றாலும் விவசாயம் செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம், நெல் விவசாயிகளை பெரிதும் சலிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.  சம்பா அறுவடை காலத்தில் நெல் விலை, நல்ல தரமான காய்ந்த நிலையில் அரசு நிர்ணய விலையான ரூ. 1100-ஐ விட, சற்றும் உயரவில்லை. மாறாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொஞ்சம் ஈரப்பதம், கொஞ்சம் தரம் குறைவான நெல் குண்டால் ரூ. 600-க்கும் ரூ. 700-க்கும் அடிமாட்டு விலைக்கு தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப் பட்டது. 

                  சம்பா அறுவடை காலத்தில் பொன்னி புழுங்கல் அரிசி, கிலோ ரூ. 24 முதல் ரூ. 28 வரை இருந்தது, தற்போது ரூ. 28 முதல் ரூ. 32 வரை என உயர்ந்து இருக்கிறது. ஆனால் நெல்விலை இன்னமும் அடிமட்டத்திலேயே உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.  6 மாத சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15 ஆயிரம். அதில் இருந்து கிடைக்கும் நெல்லின் விலை ரூ. 18 ஆயிரம். ஒரு ஏக்கர் நிலம் வைத்து இருக்கும் நெல் விவசாயிக்கு 6 மாதத்துக்கு ரூ. 3 ஆயிரம்தான் வருமானம் வருகிறது என்கிறார்கள் விவசாயிகள்.  

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் கே.வி. கண்ணன் கூறுகையில், 

                 "கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் கருவிகளுக்குப் பயன்படும் டீசல் விலை 300 சதவீதமும், பூச்சி கொல்லி மருந்துகள் விலை 150 சதவீதமும், தொழிலாளர்களின் ஊதியம் 200 சதவீதமும், உரத்தின் விலை 45 சதவீதமும் உயர்ந்து இருக்கும் நிலையில், நெல் விலை 35 சதவீதம் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் எப்படி நெல் விவசாயம் செய்ய முடியும் என்று சலிப்புதான் ஏற்படுகிறது. 100 நாள் வேலைத்திட்டம் வேளாண்மையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போல் தமிழகத்திலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்களை, வேளாண் பணிகளுக்குத் திருப்ப வேண்டும். அரசு வழங்கும் கூலி போக மீதியை விவசாயிகள் வழங்குவர். வெட்டிய ஏரியை, வாய்க்காலை மீண்டும் மீண்டும் வெட்டிப் பயனில்லை' என்றார் அவர்.  

மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி. ரவீந்திரன் கூறுகையில், 

              "பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நெல் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும். பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயியும் இழப்பீடு பெறும் வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் சென்றுவர சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்' என்றார்.  






Read more »

பயறு வகை சேமிப்பில் புதிய தொழில்நுட்பம்


கடலூர்: 

           தமிழகத்தில் 2009-10ம் ஆண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி இலக்கு 110.5 லட்சம் டன்கள். ஆனால் 95 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. பயறு வகைகள் 6.90 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டு, 4.50 லட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தியாயின. 

                2010-11-ம் ஆண்டில் 45.5 லட்சம் ஹெக்டேரில் 112 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 12 லட்சம் ஹெக்டேரில் 7.50 லட்சம் டன் பயறு வகை உற்பத்தி செய்ய இலக்கு நிர்யணயிக்கப்பட்டது.  பயறு வகை உற்பத்தி, தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் உற்பத்தியைப் பெருக்க பயறு வகைகளை ஊடுபயிராக அல்லாமல் தனிப் பயிராக சாகுபடி செய்ய இந்தாண்டில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.


                  ஈடுசெய்ய முடியாத மண் வளச் சீர்கேட்டை மேம்படுத்துவதில் பயறு வகைப் பயிர்களின் பங்களிப்பு அளவில்லாதது.  அன்றாட உணவில் பயறு வகை பருப்புகள் ஒரு நபர் 70 கிராம் உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒரு நபர் 40 கிராமுக்கும் குறைவாகவே உட்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல், வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. பயறு வகைகள் எளிதில் பூச்சித் தாக்குதலுக்கு இலக்காகும் தன்மை கொண்டவை.

               எனவே பயறு வகைகள் சேதமடைந்து விடாதபடி பாதுகாக்க அறுவடைக்குப் பிந்திய நேர்த்தியில், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.  பயறு வகைகளில் துவரை, உளுந்து பயிர்கள் 80 சதவீதம் விதை முற்றியதும், அறுவடை செய்யப்பட வேண்டும். சில நாள்கள் வைத்து இருந்து, செடிகளில் இருந்து விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். பாசிப்பயறு தட்டைப் பயறு போன்றவற்றை, நன்கு முற்றியபின் அவற்றை பறித்துக் காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். 

            உணவுக்கான பயறு வகைகளைச் சேமிக்க, நன்கு காயவைக்க வேண்டும். ஈரப்பதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை இளம் வெயிலில் உலர்த்தி சேமித்து வைக்க வேண்டும். உளுந்து, பச்சைப் பயறு வகைகள் உடைத்து வைத்தால், பூச்சிகளால் அதிகம் சேதம் ஏற்படாது. கெடாமல் இருக்க விஷ மருந்துகளை கலக்கக்கூடாது. மூட்டைகளை பரண் மேல் மூங்கில் பாய் அல்லது பாலித்தீன் விரிப்பில் சேமிக்க வேண்டும்.  

              விதைக்கான பயறு வகைகளில் மாலத்தீயான் 4 சதவீதம் தூள் 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ வீதம் கலந்து, பாலித்தீன் உள்பூச்சு உள்ள சாக்குகளில் சேமிக்கவும். 100 கிலோ விதைக்கு அரைக் கிலோ தாவர எண்ணெய் பசை அல்லது ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து பாதுகாக்கலாம்.  சேமித்து வைக்கப்பட்ட பயறு வகைகளுக்கு ஈ.டி.பி. கலவைப் புகையிடுதல், உலோகக் குதிரில் உறுதியான களஞ்சியங்களில் சேமித்தல், 100 கிலோவுக்கு 15 கிராம் நொச்சி இலைத் தூள், சுண்ணாம்புத் தூள் போட்டும் சேமிக்கலாம். தாவர எண்ணெய்களை பூசுதல் தீங்கற்றது. விஷத் தன்மை அற்றது.

                 உடைத்து பருப்பாக்கும் போது அவற்றை அகற்றுவது எளிதாக இருக்கும். வண்டுகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பாக அமையும். சிக்கனமானது. செலவு கட்டுபடியாகக் கூடியது. விரைவில் உலர்ந்துவிடும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். அவை எங்கும் கிடைக்கக் கூடிவை.  

                சிமென்ட் கான்கிரீட் தரைமீது, அல்லது பாலித்தீன் பேப்பரை பரப்பி, அதன்மீது 100 கிலோ விதைக்கு 500 மில்லி எண்ணெய் கொண்டு, அனைத்து பயறுகள் மீதும் சீராகப்படும்படிக் கலக்கி, சற்றே ஆறவைத்த பின் சேமிக்கலாம். எண்ணெய் பூசப்பட்ட  பயறுகளை டப்பா, மண் பாண்டம், மூங்கில் கூடை போன்ற வற்றில் 5, 6 மாதங்கள் வரை சேமிக்கலாம் என வேளாண் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  







Read more »

அனைத்து தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்

கடலூர்:

           அனைத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வலியுறுத்தினார். 

           இ.எஸ்.ஐ. கார்பரேஷன் நிறுவனத்தின் வைரவிழாவை முன்னிட்டு, கடலூரில் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுக்கு, விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடந்தது.  

விழாவை மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்துப் பேசியது: 

           இ.எஸ்.ஐ. வசதிகளை பயன்படுத்திக் கொள்ளத் தகுதியான தொழில் நிறுவனங்கள் பல, கடலூர் மாவட்டத்தில் உள்ளன. மாத வருவாய் ரூ. 12 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இ.எஸ்.ஐ. மருத்துவ வசதிகளை அளிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு இ.எஸ்.ஐ. திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இயந்திரங்களை பயன்படுத்தும்  நிறுவனங்களில் 10 நபர்களும், இயந்திரங்களை பயன் படுத்தாத நிறுவனங்களில் 20 நபர்களும் வேலையில் இருந்தால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். 

             இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் மனைவியருக்கு மகப்பேறு உதவிகள், தொழிலாளர்கள் காயம் அடையும் போதும், உடல் நலம் பாதிக்கப்படும் போதும், மரணம் அடைந்தாலும் உதவிகள் வழங்கப் படுகிறது. இதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.  நிகழ்ச்சியில் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி, சென்னை மண்டல இ.எஸ்.ஐ. கூடுதல் ஆணையர் கே.பத்மஜா நம்பியார், இயக்குநர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior