உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

கடலூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி


கடலூர்:
 
           விநாயகர் சதுர்த்தி விரைவில் வரவிருப்பதை முன்னிட்டு, கடலூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  
 
              கடலூர் வண்டிப்பாளையம், மணவெளி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் ஆண்டு முழுவதும் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் கலையம்சம் நிறைந்த பொம்மைகள் இந்தியா முழுவதும், பல மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.  பொம்மை தயாரிக்கும் இக்குடும்பங்களில் பல, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள், விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் மும்முரமாக ஈடுபடுகின்றன. 
 
              இக்குடும்பங்கள் கடலூரில் சுமார் 10 குழுக்களாகப் பிரிந்து, ஆங்காங்கே சிறிய கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொண்டு, அவற்றில் விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்கள்.  வீடுகளில் பெரிய அளவில் வைத்து பூஜிக்கும் வகையிலும், பொது இடங்களில் பிரமாண்டமான அளவில் வைத்து பூஜிக்கும் வகையிலும், 3 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை இவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இவற்றின் விலைகள் ரூ. 1000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை இருப்பதாக, பொம்மை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
               விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்படுவது ஐதீகம். எனவே நீர் நிலைகளின் சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருளைக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருக்கிறது.  எனவே இவர்கள் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே விநாயகர் சிலைகளைத் தயாரிக்கிறார்கள்.  கடலூரில் விநாயகர் சிலை உருவாக்கப்படும் இடங்கள் ஒவ்வொன்றிலும், இதுவரை நூற்றுக்கணக்கான சிலைகள், மிகச்சிறந்த கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளன. வண்ணங்கள் தீட்டும் வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.  
 
 கடலூர் முதுநகரில் கிழக்கு கடற்கரைச் சாலையோரம் விநாயகர் சிலைகளை உருவாக்கி வரும் மணவெளி சங்கர் (38) இதுபற்றிக் கூறுகையில்,
 
             ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இது ஒரு கலைத்தொழில். எனவே பல குடும்பங்கள் பாரம்பரியமாக பல்வேறு கலையம்சம் கொண்ட பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.  
 
             விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 மாதங்கள், பெரும்பாலான குடும்பங்கள் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்றன. எங்களது பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிகளுக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பொம்மை தயாரிக்கும் தொழிலில், ஒத்தாசையாக இருக்கிறார்கள்.  இத்தொழிலில் பெரிதாக வருவாய் ஒன்றும் கிடைக்க வில்லை. கிடைக்கும் சொற்ப வருவாயில் சாப்பிடுகிறோம், குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். விநாயகர் சதுர்த்தி காலங்களில், விநாயகர் சிலைகள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்கள் வாங்கவும், கூலியாட்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் ஒவ்வொரு குழுவும் ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்கிறோம். 
 
             எங்களுக்கு எந்த வங்கியும் கடன்தர முன்வருவது இல்லை. ரூ. 1 லட்சத்துக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வீதம் வட்டிக்குக் கடன் வாங்கி, விநாயகர் சிலைகளைச் செய்கிறோம்.  விநாயகர் சதுர்த்தி பொம்மை தயாரிப்புத் தொழிலுக்கு என்று கடன் கேட்டால், அதிக வட்டி கேட்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்து கணக்குப் பார்த்தால்தான், என்ன வருவாய் கிடைத்து இருக்கிறது என்று தெரியும். எங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைத்தால், இத்தொழிலை மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வோம் என்றார் சங்கர்.  
 
 
        ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.  அந்த மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும், விநாயகர் பொம்மைகளைத் தயாரிப்போரின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் நிதரிசனமான உண்மை.
 
 
 

Read more »

சனி, ஆகஸ்ட் 06, 2011

இணையதளம் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள்

           மாணவர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள 90 உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணையதளம் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  

               சென்னை அறிவியல் நகரம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.  நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு சேர்க்கிறது. உலகின் எந்தப் பகுதியில் உள்ள தகவல்களையும் மக்கள் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் அறியக்கூடிய வகையில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.  இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நூலகங்களிலும் அமல்படுத்தும் முயற்சியை தமிழக பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது.  

               அதாவது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள மைய நூலகங்களை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இணைய தளம் மூலம் இணைக்கும் பணியை பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒரு பகுதியில் இருந்து கொண்டே, மாநிலத்தின் 32 மைய நூலகங்களிலும் என்னென்ன நூல்கள் மற்றும் அரிய தகவல்கள் உள்ளன என்பதை மக்கள் அறிய முடியும்.  

                  இதுபோல், உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் பணியையும் சென்னை அறிவியல் நகரம் மேற்கொண்டுள்ளது.  அதாவது, சென்னையில் உள்ள ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கணித அறிவியல் நிறுவனம், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் என 90 உயர் கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் நூலகங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.  

இதுகுறித்து அறிவியல் நகர துணைத் தலைவர் வி.கே. சுப்புராஜ் கூறியது:  

              சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் நிறைவடைய உள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  புத்தகங்களை மாணவர்கள் தேடி அலையவேண்டிய அவசியம் இனி இருக்காது. குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் என்னென்ன நூல்கள் உள்ளன என்பதை இணையதளம் மூலமே மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்றார்.





Read more »

கடலூரில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

கடலூரில் இருந்து கடத்தப்பட்டு புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
கடலூர்:
         தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 145 டன் ரேஷன் அரிசியை தமிழகப் போலீசார்  வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.  கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசி பெருமளவுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை புதுவையைச் சேர்ந்த கள்ளத்தனமாக அரிசி வியாபாரம் செய்யும் நபர்கள் வாங்கி, அங்குள்ள அரிசி ஆலைகளில் நன்றாக பாலிஷ் செய்து, கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விற்பனை செய்து விடுகின்றனர். 

            இந்த அரிசி சந்தையில் கிலோ ரூ. 15-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.   அண்மையில் கடலூரில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலம் பாகூரில் பதுக்கி வைத்து  இருந்த 48 டன் ரேஷன் அரிசியை கடலூர் மாவட்ட உணவு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார்    கைப்பற்றினர். இக்கடத்தலில் தொடர்பு உள்ள பாகூர் அப்பு என்ற இதயத்துல்லா உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.  

           தொடர்ந்து போலீஸôர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்நிலையில் புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை சேமிப்புக் கிடங்கை வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட உணவு குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரகுமார், ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்புப் படை ஆய்வாளர் அம்பேத்கர் உள்ளிட்ட போலீஸôர் சோதனையிட்டனர்.  

          சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 145 டன் ரேஷன் அரிசியை போலீசார் ரேஷன் கைப்பற்றினர்.  இந்த ரேஷன் அரிசி, விற்பனைக்குக் கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் நந்தகோபனை (56) போலீசார் கைது செய்தனர். மேலும் பலரைப் போலீஸôர் தேடிவருகிறார்கள்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior