உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 10, 2011

கடலூரில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் விநியோகம் தொடக்கம்


கடலூரில் பள்ளிகளுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணியைப் பார்வையிடுகிறார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி. (வலதுபடம்)
கடலூர்:

           கடலூரில் சமச்சீர் கல்வித் திட்ட பாடப்புத்தகங்கள் விநியோகம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியது.  

               தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை, அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே அமல்படுத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.  உச்சநீதிமன்றத் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித் திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடலூர் கல்வி மாவட்டத்துக்கான சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கான பாடப்புத்தகங்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.  

                இந்த இரு மையங்களில் இருந்தும் பாடப்புத்தகங்கள் விநியோகம், செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கடலூரில் பாடப் புத்தகங்கள் விநியோகத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.   கடலூர் மாவட்டத்தில் 212 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட 1,600 பள்ளிகளுக்கு, சமச்சீர் கல்வித்திட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 

                 தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் (புதன்கிழமை) வழங்கப்படும் என்றும், மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், மாவட்ட பாடநூல் நிறுவன சேமிப்புக் கிடங்குகளில், பணம் செலுத்தி சமச்சீர் கல்வித்திட்ட பாடப் புத்தகங்களை பெற்றுக் கொள்வார்கள் என்றும், கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

                மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் இஷ்டப்படி தேர்வு செய்த பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கி இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும், ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை பள்ளி நிர்வாகங்கள் பெற்றோரைக் கசக்கிப் பிழந்து, பணம் வசூலித்து இருக்கின்றன. ஆனால் அரசு அச்சிட்டு வழங்கும் சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களின் விலையோ, மாணவர்களுக்கு தலா ரூ. 250 முதல் ரூ. 300 வரைதான் என்றும் அந்த அதிகாரி கூறினார். 





Read more »

நெய்வேலி மாணவி கே.சிவசங்கரி பண்ருட்டி அண்ணா பல்கலையில் பொறியியல் படிக்க உதவுங்கள்


மாணவி கே.சிவசங்கரி
நெய்வேலி:
 
         பிளஸ் 2 தேர்வில் 986 மதிப்பெண் பெற்று பண்ருட்டி அண்ணா பல்கலையில் பொறியியல் பயில வாய்ப்புக் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவி கே.சிவசங்கரி நிதியுதவியை எதிர்நோக்கியுள்ளார்.  
 
      நெய்வேலி வட்டம், 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி கே.சிவசங்கரி, பிளஸ் 2 தேர்வில் 986 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  என்.எல்.சி. அதிகாரி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் குடிசையில் வசித்து வரும் சிவசங்கரியின் தந்தை இறந்துவிட்டதால், தாயின் அரவணைப்பில் வளர்ந்து படித்து வருகிறார்.  
 
            இவரது தாய் பார்வதி வீடுகளில் சமையல் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். சிவசங்கரிக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் மாணவி அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் கலந்து கொண்டு, பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலை பிரிவில் பொறியியல் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  
 
              இந்நிலையில் சிறந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பைப் பெற்ற மாணவிக்கு கல்லூரியில் ஆண்டுக் கட்டணத்தை செலுத்த போதிய வசதியில்லாமல் தவித்து வருகிறார். இதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களை அணுகியும் இதுவரை நிதி கிடைக்கவில்லை.  இந்நிலையில் மாணவி சிவசங்கரி தனது பொறியியல் படிப்பைப் படிக்க ஆர்வமாக உள்ளதால் கொடையுள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளார்.  
 
                  மாணவியின் எதிர்காலம் பிரகாசிக்க உதவிபுரிய முன்வருவோர், மாணவியின் விவரத்தை அறிந்து அவர் பயின்ற என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு உதவலாம். 
 
தொலைபேசி எண்:
 
 
04142-255972
 
 
 
 

Read more »

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி அமைத்து தர பயணிகள் கோரிக்கை


கடலூர்:
 
         கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து போகிறார்கள். ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே குடியிருப்பில் உள்ளவர்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, ரயில்வே அதிகாரிகள் தினமும் பாடாய்படுகிறார்கள். இப் பிரச்னையை போக்க நகராட்சி ஆவன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  
 
                 திருப்பாப்புலியூர் ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களுக்கான குடியிருப்பும் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. 2002-ம் ஆண்டு வரை ரயில் நிலைய வளாகத்துக்குள், 3 நகராட்சி குடிநீர் இணைப்புகள் இருந்தன. அதன்பிறகு இந்த குடிநீர் இணைப்புகள் மூடப்பட்டதே குடிநீர் பிரச்னைகளுக்கு காரணம் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். 2004-ம் ஆண்டில் ஒரு இணைப்பு மட்டும் சரிசெய்யப்பட்டது. அதுவும் ஒரு மாதம் வரை குடிநீர் வழங்கியது. பின்னர் ஏனோ துண்டிக்கப்பட்டு விட்டது.  இதுகுறித்து பலமுறை கடலூர் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்கிறார்கள். 
 
                ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரயில்வே அதிகாரிகள் தினமும், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நீர்தான் குடியிருப்புப் பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. ரயில் பயணிகளின் தேவைக்கு சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பப் படுகின்றன. தண்ணீர் டிராக்டர் வருவதில் தாமதம் ஏற்பட்டாலோ, வராமல் போனாலோ அனைவரின் பாடும் அவஸ்தைதான்.  மேலும் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்து நிரப்பப்படும் குடிநீரை, அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் செல்வதுடன், குளிர்ந்த நீர் வழங்கும் ஃபிரீசரையே உடைத்து விட்டனராம். இதனால் ரயில் நிலையத்தில் அடிக்கடி குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது.  
 
                அண்மையில் ரயில்வே அதிகாரிகள் நகராட்சியைத் தொடர்பு கொண்டபோது 2002-ம் ஆண்டு முதல் இதுவரை உள்ள குடிநீர் பாக்கி கட்டணத்தை செலுத்தினால், குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனராம். ஆனால் அத்தொகையை செலுத்துவது சாத்தியம் அல்ல என்பதால், நகராட்சி குடிநீர் இணைப்பு பெறும் முயற்சியையே கைவிட்டு விட்டனராம்.  கடலூர் நகரில் மிகுந்த சிரமத்துடன்தான் மக்களுக்கு நகராட்சி குடிநீர் வழங்கி வருகிறது. எனினும் நகரில் பல இடங்களில், குடிநீர் அன்றாடம் வீணாகிக் கொண்டுதான் இருக்கிறது. சட்ட விரோதமாகப் பல வீடுகளில், மோட்டார் வைத்து நகராட்சிக் குடிநீரை உறிஞ்சுகிறார்கள். 
 
                  ரயில் பயணிகளும், ரயில்வே குடியிருப்பில் வசிப்போரும் கடலூர் நகர மக்கள்தானே. அவர்களுக்குக் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் மறுப்பது ஏன் என்கிறார் தென் ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும், கடலூர் ரயில் பணிகள் நலச் சங்கத் தலைவருமான முனைவர் பி.சிவகுமார்.  
 
                திருப்பாப்புலியூர் ரயில் நிலைய குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து விட்டோம் என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார்.
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior