உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 05, 2011

பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள்

கடலூர்:

               பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் கடலூரிலேயே செப்டம்பர் 5-ம் தேதி முதல் கிடைக்கும் என்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.  

முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                 தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. இந்தக் கையேடுகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டடத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவற்றை மாணவர்களின் பெற்றோர் சென்னை சென்று வாங்கி வந்தனர். 

                தற்போது வினா வங்கி மற்றும் மாதிரி வினாக் கையேடுகளை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலேயே விற்பனை செய்ய, கல்வி அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.  கடலூர் மாவட்டத்துக்கான வினா வங்கி மற்றும் மாதிரி வினாக் கையேடுகள், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 5-9-2011 முதல் விற்பனை செய்யப்படும். மாணவர்கள் இக்கையேடுகளை வாங்கிப் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

தமிழகத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நட ரூ. 62 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.சி. சம்பத்

பண்ருட்டி:

                சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு ஒரு கோடி  மரக்கன்றுகளை நட ரூ. 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.

               டால்மியா சிமென்ட் குழுமம், பண்ருட்டி அரசு மருத்துவமனை மற்றும் எக்ஸ்னோரா, சிவிக் எக்ஸ்னோரா சங்கம் இணைந்து எக்கோடச் மரக்கன்றுகள் நடும்விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடந்தது. 

விழாவில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: 

               காடு செழித்தால் தான் நாடு செழிக்கும், இன்றைய நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் அதிகம் தேவை. நாளுக்குநாள் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகிறது. மேலும் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான காற்றும் அவசியம்  என்றார்.

                விழாவிற்கு ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலன் இணை இயக்குநர் கடலூர் டாக்டர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மாவட்ட தலைவர் ஆர்.எம்.பாலசுப்பிரமணியன், மத்திய அரசு வழக்கறிஞர் கே.கோபாலகிருஷ்ணன், எக்ஸ்னோரா சங்க இயக்குநர் இ.பழனி முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.மலர்கொடி வரவேற்றார். சிவிக் எக்ஸ்னோரா தலைவர் டி.சி.பசுபதி, மாவட்ட வனத்துறை அலுவலர் ஏ.சுப்ரமணியன், சென்னை எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் துணைத் தலைவர் என்.வி.ரங்கநாயகலு, விதை சான்று உதவி இயக்குநர்  பி.ஹரிதாஸ், மொழி மொழி அமைப்பாளர் பொன்வேந்தன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

             மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலர் ஆதிசேஷன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலர் பெருமாள் ராஜா, அண்ணா கிராம ஒன்றிய செயலர் வ. விபீஷணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் எம்.எஸ். தாஜுதீன், நகர பேரவைச் செயலர் ஆர். செல்வம், நகரச் செயலர் ரவிச்சந்திரன், அவைத் தலைவர் ராஜதுரை கவுன்சிலர் கமலக்கண்ணன், வழக்கறிஞர் வடிவேலன், ஏழுமலை, ஆழ்வார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ். மோகன்குமார் தலைமையில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். டாக்டர் டி. எழில் நன்றி கூறினார்.







Read more »

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கடலூர் மாணவர்கள் 27 பதக்கங்கள் வென்றனர்

கடலூர்:

            சென்னையில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 27 பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
 
               சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டியை சேர்ந்த மாணவர்கள் 49 பேர் பங்கேற்றனர். 

இதில் 

கடலூர் மாணவர் ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தங்கம், இரண்டு சில்வர், ஒரு வெண்கலம் என 5 பதக்கமும், 

தினேஷ்ராஜ், சிவகதிரவன், ரக்ஷாம்பிகா சக்திகுமார் ஆகியோர் தலா ஒரு தங்க பதக்கத்தையும் பெற்றனர்.

           மேலும் சிவகதிரவன், கீர்த்திவாசன், பிரியதர்சன், தினேஷ்ராஜ், விக்னேஷ்வர், ரக்ஷாம்பிகா, அமிழ்தம் ஆகியோர் சில்வர் பதக்கங்களும், ரக்ஷாம்பிகா, நித்தியஸ்ரீ, திரிசுலா, சேரலாதன், பூவராகவன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் என மொத்தம் கடலூர் மாணவர்கள் 27 பதக்கங்களை பெற்றனர்.

                 பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அமச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., பகலவன் தலைமை தாங்கி, போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் .விழாவில் சங்கத்தின் பெருந்தலைவர் கரிகாலன், சங்க தலைவர் எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலளர் ராமலிங்கம், துணை தலைவர்கள் அருமைச்செல்வம், கருணாகரன், செயலாளர் சந்திரமோகன்பால்ராஜ் வாழ்த்து தெரிவித்தனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior