உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 26, 2011

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை: நடவுப் பணிகள் பாதிப்பு


கடலூரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், குளம்போல் காட்சி அளிக்கும் மஞ்சக்குப்பம் மைதானம். (வலதுபடம்) கொட்டும் கனமழையின் பின்னணியில் தெரிவது மாவட்ட
கடலூர்:

           கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாண்டு கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும். 

                        இம்மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.தேவையான டி.ஏ.பி.உரம், பொட்டாஷ் கையிருப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.டெல்டா பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் நாற்று நடவுப் பணிகள் முடிவடைந்து விட்டது. வீராணம் பாசனப் பகுதிகள் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இனிமேல்தான் நடவுப் பணிகள் தொடங்க வேண்டும்.பெரும்பாலான பகுதிகளில், நாற்றுகள் 30 நாள் பயிராகி நடவுக்குத் தயாராக உள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், கடந்த 2 நாள்களாக டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் வயல்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. 

             எனவே நடவுப் பணிகளை விவசாயிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், தண்ணீப் பற்றாக்குறை தீர்ந்து விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள் .டெல்டா பாசனப் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில், நெல்பயிர் நட்டு 15 முதல் 25 நாள்கள் பயிராக உள்ளது. இப்பயிருக்கு தற்போது பெய்து வரும் மழை, உகந்ததாக இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். வீராணம் ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 44 அடியாக இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும், வீராணம் ஏரிக்கு வரும் காட்டாற்று வெள்ளத்தை நினைத்து, டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளிடம் அச்சம் ஏற்படுவது வாடிக்கை. எனினும் இவ்வாண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக முன்னரே பாசனத்துக்கு திறக்கப்பட்டதால், டெல்டா பாசனப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிகளை முடித்து விட்டது, பெரிதும் அச்சத்தைப் போக்கி இருக்கிறது.

இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

               "டெல்டா கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் நடைபெற வேண்டியது இருக்கிறது. மழை 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை சற்று ஓய்ந்து இருந்தால் நடவுப் பணிகள் முடிவையும். தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் டி.ஏ.பி. உரம் விவசாயிகள் கேட்கும் அளவுக்குத் தாராளமாகக் கிடைக்க வில்லை.டி.ஏ.பி. உரம் தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் அச்சம் உள்ளது.வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரியின் நீர் மட்டும் திடீரென உயரவும், உடனேயே அதிக அளவில் உபரிநீரைத் திறந்து விடும் நிலையும் ஏற்பட்டால் டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு சொல்லும் தரமன்று.

        எனவே வீராணம் ஏரி நீர் மட்டத்தை 44 அடிக்கு மேல் உயர்த்தாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.வீராணம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றார். 

கடலூரில் 77 மி.மீ                 

              வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கி விட்டதால், கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. செவ்வாய்க்கிழமையும் பலத்த மழை கொட்டியது.

செவ்வாய்க்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: 

              கடலூர் 77, பரங்கிப்பேட்டை 29, ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், சேத்தியாத்தோப்பு 25, காட்டுமன்னார்கோவில் 11, தொழுதூர் 18, விருத்தாசலம் 15, பண்ருட்டி 7.5, கொத்தவாச்சேரி 21, கீழ்ச்செறுவாய் 20, அண்ணாமலை நகர் 18, புவனகிரி 21, லால்பேட்டை, மேமாத்தூர் 10, வேப்பூர் 12, குப்பநத்தம் 23, லக்கூர் 14, பெலாந்துரை 22.










Read more »

செவ்வாய், அக்டோபர் 25, 2011

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர் அடித்து கொலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/8aba1341-2d5d-4d3d-a260-ec2b7679c256_S_secvpf.gif
சிதம்பரம்:

        சிதம்பரத்தில்  அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி யில் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதில் அசாமை சேர்ந்த துருபஜோதி தத்தா (வயது 21) பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த ராஜேஷ் ரோஷன் (19), அங்கித் குமார் (19) ஆகியோரும் படித்து வந்தனர்.

            அவர்கள் 3 பேரும் நண்பர்கள். துருபஜோதி தத்தா, அங்கித்குமார் ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள முத்தையா நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். ராஜேஷ் ரோஷன் இன்னொரு வீட்டில் நண்பருடன் தங்கி இருந்தார். இவர்கள் 3 பேருக்கும் போதை பழக்கம் இருந்து வந்தது. பேப்பரில் எழுத்தை அழிக்க உதவும் ஒயிட்னரை போதை மருந்தாக மாற்றி அதை பயன்படுத்தி வந்தனர். நேற்று இரவு துருபஜோதி தத்தா வீட்டுக்கு ராஜேஷ் ரோஷன் வந்தார். 3 பேரும் போதை மருந்தை பயன்படுத்தினார்கள்.

               அப்போது ராஜேஷ் ரோசன் போதை அதிகமாகி தகராறில் ஈடுபட்டார். இதனால் துருபஜோதி தத்தா, அங்கித்குமார் இருவரும் ராஜேஷ்ரோசனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டினார்கள். இன்று அதிகாலை 4 மணிக்கு ரோஜேஷ்ரோசன் மீண்டும் அங்கு வந்தார். வீட்டு கதவை எட்டி உதைத்து தகராறு செய்தார். இதனால் கோபம் அடைந்த துருபஜோதி தத்தா மரக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஆனால் ராஜேஷ்ரோசன் அந்த மரக்கட்டையை பறித்து துருபஜோதி தத்தாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துருபஜோதி கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திர் ஓடிவந்தனர். அவர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

                ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் ரோஷனை பிடித்து விசாரித்து வருகின்றனர். அங்கித்குமாரிடமும் விசாரணை நடக்கிறது. இன்று காலை வரையில் ராஜேஷ்ரோசன் போதை மருந்து மயக்கம் தெளியாமலேயே உளறியபடி இருந்தார்.

Read more »

கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு: 8 பேர் மீது வழக்கு பதிவு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/5e5311f4-e5a9-4ac2-bf0a-2fc20708cd4f_S_secvpf.gif
 
 
கடலூர்
 
           கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆரங்கியும், அருள்நாதனும் போட்டியிட்டனர். இதில் ஆரங்கி வெற்றிப்பெற்றார். தோல்வி அடைந்த அருள்நாதன் கோபம் அடைந்தார். நேற்று மாலை 4 மணிக்கு ஆரங்கியின் மருமகன் பழனிவேல் (32) எம்.புதூரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

            வெங்கடேஸ்வராநகர் அருகே அவர் வரும் போது அருள்நாதன் காரில் அங்கு வந்தார். டிரைவர் இளம்வழுதி காரை ஓட்டி வந்தார். பழனி வேலுவை அருள்நாதன் வழி மறித்து திட்டினார். உடனே பழனிவேல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக சென்றார். ஆனால் அருள்நாதனும் இளம் வழுதியும் வேகமாக காரை ஓட்டிச்சென்று பழனிவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.  இதில் கீழே விழுந்தத பழனிவேல் அங்கிருந்து தப்பி ஓடினார். அருள்நாதனும், இளம் வழுதியும் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக திருப்பாபுலியூர் போலீசில் அவர் புகார் செய்தார்.

              இதையொட்டி அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   இந்த நிலையில் எம்.புதூரில் ஆரங்கியன் வீட்டில் அவரது மனைவி குப்பு, உறவினர்கள் காந்தி, வெங்கடேசன், இளையபெருமாள், பூங்கொடி ஆகியோர் வீட்டில் இருந்தனர். மாலை 5.30 மணிக்கு அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன் உள்பட சிலர் வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டிலிருந்த டி.வி, மின்விசிறி, டியூப்லைட்டுகளை அடித்து உடைத்தனர்.

                இதை தடுத்த வெங்கடேசனை கத்தியால் குத்தினார்கள். குப்பு, காந்தி, இளையபெருமாள், பூங்கொடி ஆகியோரை இரும்பு குழாயால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்தும் திருப்பாபுலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன், சக்திவேல், சிவநாதன், ராஜீவ்காந்தி, வின்சென்ட், கண்ணன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior