உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 03, 2012

கடலூர் மாவட்டத்தில் நீலம்' புயலில் 500 ஏக்கர் வாழை சேதம்

கடலூர்:

         நீலம் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (30/10/2012) வீசிய சூறைக் காற்றில் 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

             கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலூர் அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நீலம் புயல் காரணமாக மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாவட்டமே வெள்ளக்காடானது. மேலும், ஒரு லட்சம் ஏக்கரில் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இந்நிலையில் கடலூர் அரகே மையம் கொண்ட நீலம் புயல் காரணமாக மாவட்டத்தில் சூறைக்காற்று வீசியது. மாலை 5 மணிவரை திடீர், திடீரென வீசிய காற்றினால் வாழைத் தோட்டங்கள் சேதத்திற்குள்ளாகின.

               மாவட்டத்தில் 78 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர் மழைக் காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தற்போது மழை நின்று விட்டதால், வயலில் சூழ்ந்த மழை நீர் வடியத் துவங்கியுள்ளது. மழை நீர் வடிந்த பிறகேசேத மதிப்பு தெரிய வரும். அதேப்போன்று மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. அதில் கடந்த செப்டம்பர் மாதம் வீசிய சூறைக்காற்றில் 300 ஏக்கர் வாழைத் தோட்டம் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து 8,000 ஆயிரம் ஏக்கர் வாழை அறுவடை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு அறுவை செய்ய தயாராக இருந்த 1,500 ஆயிரம் ஏக்கர் வாழையில், நேற்று முன்தினம் வீசிய நீலம் பயலில் 500 ஏக்கர் வாழைகள் சேதமடைந்தன என்றனர்.

Read more »

வியாழன், அக்டோபர் 18, 2012

கடலூரில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

கடலூர்:


    இலவச ஆம்புலன்ஸ் பிரிவில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்காணல் முகாம் வரும் 19ம் தேதி கடலூரில் நடக்கிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 


      தமிழகத்தில் இயங்கி வரும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 19ம் தேதி கடலூரில் நடக்கிறது.

         ஓட்டுனர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும், 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், 162.5 செ.மீ., உயரமுடையவராகவும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து ஐந்தாண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., நர்சிங், விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, உயிரியல் , லைப் சயின்ஸ் அல்லது ஜி.என்.எம்., - ஏ.என். எம்., - டி.என்.ஏ., - டி.எம். எல்.டி., - டி.பார்ம் முடித்தவராகவம், 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


         மேற்கண்ட தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் பிற சான்றிதழ்களுடன் வரும் 19ம் தேதி கடலூர், பீச் ரோட்டில் உள்ள ரோட்டரி அரங்கில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். டிரைவர் பணிக்கு எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண் பார்வை சோதனை மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வு நடைபெறும். தேர்வு பெறுபவர்களுக்கு எட்டு நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு, உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

  இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் 044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.



Read more »

புதன், அக்டோபர் 10, 2012

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ தேர்வில் பங்கேற்கவுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி

கடலூர்:

நெய்வேலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் பங்கேற்கவுள்ள மாவட்ட இளைஞர்களுக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


        இந்திய ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நெய்வேலி, பாரதி விளையாட்டரங்கில் நடக்கிறது. இந்த முகாமில் சிப்பாய், நர்சிங் உதவியாளர், எழுத்தர் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு பெற்ற மற்றும் பதினேழரை வயதிலிருந்து 23 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு கலெக்டர் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் படி நெய்வேலியில் நடைபெறவுள்ள ராணுவ ஆள் தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பம் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

          அதேப்போன்று எழுத்து தேர்விற்கான பயிற்சி முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது.ராணுவ ஆள் தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள், சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் 15ம் தேதி மாலை 4 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ஆஜராகி பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறியுள்ளார். .

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior