கடலூர் : 
             கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) போட்டித் தேர்வுக்கான வயது வரம்பு சலுகையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திடீரென ரத்து செய்ததால், பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
              தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்த 21ம் தேதி வெளியிட்டது. இதை பார்த்த முதிர்ந்த பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர் மரபினர், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் மற்றும் அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதைகள் பட்டதாரிகளாக இருப்பின், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பில்லையென இதுவரை தமிழக அரசு அறிவித்திருந்தது. டி.என்.பி.எஸ்.சி.,யும் அவ்வாறே அவர்களை தேர்வு எழுத அனுமதித்தது. கடந்த 2007ம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ., தேர்விலும் இச்சலுகை வழங்கப்பட்டது. 
               அதனால், அனைத்து பட்டதாரிகளும் தேர்வு எழுதினர். ஆனால், இப்போது அறிவித்துள்ள வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்புச் சலுகையை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு அடியோடு திடீரென ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வி.ஏ.ஓ., தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்பதால், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் இச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. 
                 டி.என்.பி.எஸ்.சி.,யின் இந்த திடீர் அறிவிப்பால், பல லட்சம் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் வயது வரம்பு சலுகை ஐந்தாண்டுகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருந்துகிறது. 45 வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வை எழுத முடியும். இன்று அரசு வேலை 40 வயது முதல் 50 வயது வரை தான் கிடைக்கிறது. அரசு ஊழியர்கள் போட்டித் தேர்வு எழுதி, 57 வயது வரை பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் பறிபோயுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக