சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம்  சார்பில் பேரவைத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பை பேராசிரியர்  ராஜநாயகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர் 
               தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு  சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகளும் உள்ளதாக  சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்  கணிப்பில் தெரியவந்துள்ளது.மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
            லயோலா  கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் சார்பில் தமிழகம் முழுவதும் 117 பேரவைத்  தொகுதிகளில் மார்ச் 21 முதல் 29 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.  ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் மூன்று பேரவை தொகுதிகள் வீதம் மொத்தம் 117  தொகுதிகளில் 3,171 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.பேராசிரியர் ச.ராஜநாயகத்தின் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட 30 பேர் இதில் ஈடுபட்டனர்.சென்னை  லயோலா கல்லூரியில் பேராசிரியர் ச.ராஜநாயகம் இந்தக் கருத்துக் கணிப்பு  முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட, கல்வியாளர் ஹென்றி ஜெரோம்  பெற்றுக்கொண்டார்.
கருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்: 
                தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 48.6  சதவீதம் பேர் அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.  41.7 சதவீதம் பேர் தி.மு.க. அணிக்கும், பிற கட்சிகளுக்கு 1.5 சதவீதம்  பேரும், முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.அதிமுக  அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேரும் ,  தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என 36.7 சதவீதம் பேரும்  கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. புறக்கணிப்பால் பாதிப்பில்லை: 
             ம.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு  இருக்காது என்று பெரும்பான்மையானோர் (53.6 சதவீதம்) கருத்து  தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அதிமுக அணி பாதிக்கப்படும் என நான்கில்  ஒருவர் (25.4 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வுக்குத்தான்  பாதிப்பு என 7.4 சதவீதத்தினரும், தி.மு.க. அணியைப் பாதிக்கும் என 3.8  சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.
மின்வெட்டு முக்கியப் பிரச்னை: 
                   தங்கள் தொகுதியின் மிக முக்கியப் பிரச்னையாக மின்வெட்டை (25.2 சதவீதம்)  பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விலைவாசி உயர்வு, குடிநீர்,  போக்குவரத்துப் பிரச்னை, ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் அடுத்தடுத்த முக்கியப்  பிரச்னைகளாக மக்கள் தெரிவித்துள்ளனர். எந்த அணியின் வேட்பாளர்  ஜெயித்தாலும் தொகுதியின் பிரச்னை தீராது என 42.5 சதவீதம் பேர்  தெரிவித்துள்ளனர். தங்களது தொகுதியில் உள்ள பிரச்னைகளை தி.மு.க. அணியினரோடு  ஒப்பிடும்போது அ.தி.மு.க. அணியினரால் தீர்க்க முடியும் என்று சற்று  அதிகமானோர் (33.7) கருதுகின்றனர்.
வாக்களிக்கப் பணம்: 
               பணம்  வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறு என்று 80 சதவீதத்தினர்  தெரிவித்திருந்தாலும், கடந்த தேர்தல்களில் ஒருமுறையாவது பணம் பெற்றதாக 47.9  சதவீதம் பேர் ஒத்துக்கொள்கின்றனர். பணம் வாங்கிக்கொண்டு தான் விரும்பும்  வேறொருவருக்கு வாக்களிப்பது தவறல்ல என 31.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.
அதிமுக அணிக்கு 105 தொகுதிகள்: 
               இந்த ஆய்வு நடத்தப்பட்ட காலக்கட்டத்தில், 5 சதவீதத்துக்கும் அதிகமான  வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை  உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59  தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது. கடுமையான போட்டி  நிலவும் தொகுதிகள் எந்த அணிக்குச் செல்லும் என்பது வாக்குப் பதிவுக்கு  முன்பாக மதிமுக எடுக்கும் நிலைப்பாடு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களைப்  பொருத்து அமையும்.தேர்தல் வியூகத்தில் தி.மு.க. முன்னிலை: தேர்தல்  வியூகத்தை சிறப்பாகச் செயலாக்கி வருவதில் தி.மு.க. அணி முன்னிலைப்  பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை, சுமூகமான தொகுதிப் பங்கீடு, சரியான  வேட்பாளர்கள் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம்,  தெருமுனைக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் ஆகியவற்றில் தி.மு.க. அணி  முன்னிலை பெற்றுள்ளது.உள்கட்சிப் பூசல் இன்மை, சுவரொட்டி, பேனர்  விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க. அணி  முன்னிலை பெற்றுள்ளது.
கள அனுபவம், திகட்டும் சலுகை அறிவிப்புகள்:
            சலுகைகள், இலவச அறிவிப்புகள் குறித்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்  மக்களைத் திகைத்துப்போக வைத்துள்ளன. அதேபோல், அனைத்துத் தொகுதிகளிலும்,  அனைத்துக் கட்சிகளிலும் பூசல்கள் மலிந்துள்ளன. சில சூழல்களில்  மனக்கசப்பாகவும், சில சூழல்களில் வெளிப்படையான எதிர்ப்பாகவும் அவை உள்ளன.
தடை உத்தரவு போன்ற சூழல்: 
               தேர்தல் ஆணையத்தின் கடுமையான செயல்பாடுகளால், வழக்கமாகத் தேர்தல்  காலங்களில் காணப்படும் திருவிழாச் சூழல் எங்கும் காணப்படவில்லை. பல  இடங்களில் உள்ள வெளி மாநிலக் காவலர்களால் தடை உத்தரவு போடப்பட்டுள்ளதைப்  போன்ற இறுக்கம் நிலவுகிறது.சுவர் விளம்பரத்துக்கு காட்டப்படும்  கெடுபிடிகளால் சிறுகட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குறித்த எந்த  விவரமும் வாக்காளர்களுக்குத் தெரியவில்லை. எனினும், தேர்தல் ஆணையம்  மிகப் பொறுப்பாக செயல்படுவதாக 60.5 சதவீதம் பேரும், தன்னுடைய அதிகார வரம்பை  மீறிய கண்டிப்புடன் செயல்படுவதாக 24.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
தே.மு.தி.க. வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது: பேராசிரியர் ராஜநாயகம்
               வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது என்று பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார். லயோலா  கல்லூரி சார்பில் கடந்த தேர்தல்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில்  தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருப்பதாக கூறப்பட்டது.  இந்த முறை தே.மு.தி.க. அ.தி.மு.க. அணியில் இணைந்திருக்கிறது. இது அந்தக்  கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:தே.மு.தி.க.  தனித்துப் போட்டியிட்டதால் அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி உருவாகியுள்ளது.  கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்கு வங்கியில் சிறிய சிராய்ப்பு  ஏற்படலாம். ஆனால், பெரிய சேதம் ஏற்படாது. அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.  இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்
2-ஜி ஸ்பெக்ட்ரம் - கேட்கவில்லை:
                2-ஜி  ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி ஆகிய கேள்விகள்  எங்களது கேள்விப்பட்டியலில் இடம்பெறவில்லை. மக்களைப் பாதிக்கும் விஷயங்களை  அவர்களாகவே முன்வந்து தெரிவித்திருந்தார்கள்.மணல் கொள்ளை,  திருப்பூர் சாயப்பட்டறை போன்ற பகுதிகள் சார்ந்த பிரச்னைகளை மக்கள்  தாங்களாகவே முன்வந்து தெரிவித்தனர். 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரமும் மக்களைப்  பாதிக்கும் பிரச்னையாக இருந்தால் அவர்களாகவே தெரிவித்திருப்பார்கள். இது  ஊடகங்களால் திணிக்கப்பட்ட பிரச்னையாகவே களத்தில் தெரிகிறது என்றார்  ராஜநாயகம்.
             ஏற்கெனவே உங்களது கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டதா என்ற  கேள்விக்கு, என்னுடைய நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு இது  ஒன்றுதான் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக