உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 28, 2012

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க கோரிக்கை

கடலூர்:

   அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், கடலூரில் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 

    அடிக்கல் நாட்டப்பட்ட கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். நிதி ஒதுக்கப்பட்டும் தொடங்கப்படாமல் இருக்கும் கடலூர் புறவழிச் சாலை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கிடப்பில் போடப்பட்டு உள்ள சரவணன் நகர் இணைப்புச் சாலைத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்வதால், மக்களுக்கு பல்வேறு இன்னல்களை தந்து வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, விரைந்து முடிக்க வேண்டும். கடலூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும்.



       நெடிய போராட்டத்துக்குப் பின், தொடங்கப்பட்ட கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணி, புதிது புதிதாக காரணங்களைச் சொல்லி, தொடராமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கடலூர் பஸ்நிலையம் அருகே தெருமுனைப் பிரசாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.சேகர் தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், இணை ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

     தெருமுனைப் பிரசாரம், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம், போடிச் செட்டித் தெரு, முதுநகர், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே பிரசாரத்தை, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் முடித்து வைத்துப் பேசினார்.
 

Read more »

வியாழன், மே 19, 2011

கடலூரில் அழிக்கப்படும் மலைப்பகுதி

கடலூர்:
            கடலூரில் இருந்து 12 கி.மீ. தென் மேற்காக அமைந்து இருப்பது ஒüஷதகிரி என்னும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கும் மலைப் பகுதி. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரே மலைப்பகுதி ஒஷ்தகிரிதான்.  
              மா, பலா, முந்திரி, தேக்கு மரங்களால் சூழப்பட்டு பார்க்கும் போது, பச்சை பசேலென்று அழகு கொஞ்சும் பச்சை மலையாகக் காட்சி அளிப்பது ஒüஷதகிரி. இந்த அழகுமிகு ஒஷ்தகிரியில்தான் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் ஆகியவை அமைந்து உள்ளன.  மேற்குப் பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்து இருக்கும் பகுதி கேப்பர் மலை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் மத்திய சிறைச்சாலை மட்டுமே அமைந்து இருந்த கேப்பர் மலைப் பகுதி, இன்று 40 கிராமங்களைக் கொண்டதாக மாறி, வாழைத் தோட்டங்கள், மலர்த் தோட்டங்கள், கரும்பு வயல்கள் என மாறி, வேளாண்மையின் செழிப்பைக் காண முடிகிறது.  
            ஒய்தகிரியைக் கிழித்துக் கொண்டு கெடிலம் ஆறு ஓடுகிறது. கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய கொண்டங்கி ஏரி உள்ளது. இந்த மலைப் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் நல்ல சுவை நிறைந்தது. எனவே கடலூர் நகருக்குத் தேவையான குடிநீர், ஒய்தகிரியில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.  ஆனால் இந்த அழகு கொஞ்சும் மலைப் பகுதி, அரசுத் துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, இயற்கை எழிலும் சுற்றுச்சூழலும் வெகுவாகச் சிதைக்கப்பட்டு வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.  
               கடலூர் மத்திய சிறை அருகே பெண்கள் சிறை 10 ஏக்கரில் அண்மையில் உருவாக்கப்பட்டது. சிறைக் காவலர்களுக்காக ஏற்கெனவே ஓடுகள் வேயப்பட்ட 50 வீடுகள் இருந்தன. அவைகள் சிதைந்து கிடக்கும் நிலையில் புதிய இடங்களைத் தேர்வு செய்து, ஏராளமான மரங்களை வெட்டி வீழ்த்தி, அடுக்குமாடி வீடுகள் பல அண்மையில் கட்டப்பட்டன.  மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துடன் துணை மின் நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அரசுத் துறைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, இந்த மலைப் பகுதியில், தற்போது சுமார் 40 நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.  
               இதற்காக எவ்விதத் தடையுமின்றி வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் ஆயிரம் ஆயிரமானவை. இதற்கு வனத்துறை அனுமதி கோரப்பட்டதா என்று தெரியவில்லை.  இந்த மலைப் பகுதியில் இருந்து, பெருமளவில் சரளைக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கடலூர் மாவட்டம் மட்டுமன்றி, புதுவை மாநிலத்துக்கும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு போகப்படுகின்றன.  இந்நிலையில் இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அரசு மருத்துவக் கல்லுரிக்கான இடமும் இங்குதான் தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. இதற்காக மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.  
              மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் அங்கு கொண்டு செல்லவும் திட்டம் இருக்கிறதாம். அரசுத் துறைகளின் படையெடுப்பாலும், அவர்களின் தயவால் நுழைந்து இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களால் பேராசையாலும் அங்கு விரைவில் ஒரு டவுன்ஷிப் உருவாகும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.  இதற்காக இன்னும் எத்தனை ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஒüஷதகரி மலைப் பகுதி முழுவதும் விரைவில் மரங்கள் அற்ற மொட்டை மலையாகி விடும் என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்த மலைப் பகுதி முழுவதும், ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வருவதால், கேட்பாரின்றி மரங்களை வெட்டிக் குவிப்பதும், அலுவலகங்களையும், குடியிருப்புகளையம் தாராளமாகக் கொண்டுவந்து குவித்து வருவதும், நிச்சயம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.  
               அங்கு மேற்கொண்டு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்காத வகையில், குறைந்தபட்சம், அரசு மருத்துவக் கல்லூரியையாவது, கடலூரை அடுத்த நத்தப்பட்டு அருகேயுள்ள, அரசுக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலத்துக்கு மாற்றலாம் என்கிறார் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன்.  
              அங்கு மருத்துவக் கல்லூரி அமைந்தால் ஒüஷதகிரியில் கட்டுமானங்கள் பெருமளவில் அதிகரிக்கும். கடலூர் பகுதியில் இருந்து நோயாளிகள் சென்று வருவதும் மிகவும் சிரமமாக இருக்கும். நத்தப்பட்டு பகுதியில் மருத்தவக் கல்லூரி அமைந்தால், கடலூர் புறவழிச் சாலை, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அகியவற்றின் அருகாமையில் இருப்பதால், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் வசதியாக இருக்கும். அத்துடன் அழகிய ஒüஷதகிரி மலை, ஒரு டவுன்ஷிப்பாக மாற்றப்பட்டு, மொட்டை மலையாவதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.

Read more »

திங்கள், ஏப்ரல் 04, 2011

கடலூர் மருத்துவக் கல்லூரியை நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத்

கடலூர் : 

              ""கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை பொதுமக்களின் வசதிக்காக நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்'' என அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் கூறினார். 

இதுகுறித்து அ.தி. மு.க., வேட்பாளர் சம்பத் கூறியது: 

             அ.தி.மு.க., ஆட்சி பெறுப்பேற்றால் கடலூரில் தரமின்றி நடந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கி தரமாக அமைக்கவும், நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கவும், நகர மேம்பாட்டை கருத்தில் கொண்டு கரும்பு ஆராய்ச்சி பண்ணையில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தொலைநோக்கு பார்வையோடு குடிநீர் திட்டங்களை கொண்டு நகராட்சி பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், மீன்களை இருப்பு வைக்க குளிர்பதன குடோன் அமைக்கப்படும். 

              கடலூர் நகர பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தி முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன். தேர்தல் அறிக்கையில் ஜெ., அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தை பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் விடுதி வசதியுடன் ஏற்படுத்துவேன். மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மக்களின் நலன் கருதி நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். 

                கடலூர் நகரையொட்டியுள்ள பாதிரிக்குப்பம், கோண்டூர், சாவடி, உண்ணாமலை செட்டிச்சாவடி, குண்டுஉப்பலவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவேன். இவ்வாறு சம்பத் கூறினார்.

Read more »

சனி, பிப்ரவரி 26, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி 300 மாணவர்கள் படிக்கும் வசதியுடன் அமையும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர்:

             300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அமையும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  

             கடலூர் அருகே வெள்ளக்கரை, ஆயிபுரம் கிராமங்களில் தலா ரூ. 21.79 லட்சத்தில் கட்டப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் புதன்கிழமை திறந்து வைத்தார். 

விழாவில் அமைச்சர் பேசியது:  

                கடலூர் மாவட்டத்தில் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கடலூரில் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் கட்டடங்கள் கட்டப்படும்.  இது 300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக அமையும். எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வரும் முதல்வர் கருணாநிதிக்கு, மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.  கடலூர் அருகே ராமாபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனையும், குடிகாடு, ஊராட்சி ஈச்சங்காடு, சேடப்பாளையம் கிராமங்களில் அங்கன்வாடி மையங்களையும், பிள்ளையார்மேடு கிராமத்தில் ரேஷன் கடையையும் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.  

சின்னகாரைக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.03 கோடியில் கட்டப்பட இருக்கும் 15 வகுப்பறைக் கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:  

               கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 29 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 25 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.  81 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்டு உள்ளன. முதல்வர் ஆண்டுதோறும் 100 பள்ளிகளைத் தரம் உயர்த்த உத்தரவு பிறப்பித்து வருகிறார் என்றார் அமைச்சர்.  நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா, மருத்துவத் துறை இணை இயக்குநர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

            கடந்த தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், வழங்காத உறுதிமொழிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். 

           கடலூர் அருகே வண்டிக்குப்பம் கிராமத்தில் சமத்துவபுரத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் ரூ. 100 கோடியில் அமையவுள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். அந்த விழாவில் 2 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, 400 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். மேலும் ரூ. 32.88 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

         அத்துடன் ரூ. 133.15 கோடிக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 25.29 கோடிக்கான அரசு நல திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இவ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது: 

            பல அரசு விழாக்களில் நல திட்ட உதவிகளை முழுமையாக வழங்குவதில்லை. சிலருக்கு வழங்கிவிட்டு பின்னர் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ள செய்வார்கள். அதுதான் மரபாக இருந்துவருகிறது. ஆனால் நான் நல திட்ட உதவிகள் வழங்குவதில் மாற்றத்தைக் கொண்டுவந்தேன். நல திட்ட உதவிகளை அனைவருக்கும் வழங்கிவிட்டு, அதன் பின்னரே மேடையைவிட்டு இறங்குகிறேன்.  தற்போது இங்கு நல திட்ட உதவிகள் வாங்குவோர், அவற்றை வாங்கும்போதே புகைப்படம் எடுத்து, அவர்கள் மீண்டும் இருக்கையில் சென்று அமரும்போது அந்த புகைப்படம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    இவ்வாறு பல மணி நேரம் நின்று நல திட்ட உதவிகளை வழங்குவதன் காரணம்,  நல திட்ட உதவிகளைப் பெறும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். 

          திட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைகிறது என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்படுகிறது. இதுவரை மொத்தம் 125 மணி நேரம் செலவிட்டு நல திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது.  1996-ல் பெரியார் சமத்துவபுர திட்டம் தொடங்கப்பட்டது. 2001 வரை 148 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமத்துவபுரங்கள் கட்டப்படவில்லை. 2006-க்கு பின்பு மீண்டும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

           95 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன.அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.   இங்கே இந்த விழாவில் ஆண்கள் இடம்தர மறுத்ததால் பெண்கள் பின்னால் அமர்ந்து இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பெண்கள் இல்லாமல் ஆண்கள் வெற்றிபெற முடியாது. கடந்த தேர்தலின்போது அளித்த, அளிக்காத உறுதிமொழிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார் ஸ்டாலின். விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வரவேற்றார். 

              மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், தி.வேல்முருகன், துரை.ரவிக்குமார், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்பாராஜ் ஆகியோர் பேசினர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வியாழன், பிப்ரவரி 10, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர் : 

         கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

               துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி மாலை கடலூர் அடுத்த ராமாபுரத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை திறந்த வைக்கிறார். பின்னர் எம்.புதூரில் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்த வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். இவ்விழாவிற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. 

              நேற்று முன்தினம் மாலை அமைச்சர் பன்னீர்செல்வம், விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு 9 மணிக்கு எம்.புதூரில் அமைக்கப்படும் மேடை மற்றும் பந்தல் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கி விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பின்னர்அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது: 

            பட்ஜெட்டில், கடலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட தலா 100 கோடி ரூபாய் வீதம் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரும் 13ம் தேதி மாலை 4 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். டெண்டர் விடப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிக்கு அருகிலேயே மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

             பேட்டியின் போது கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் வீரராகவராவ், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மனோகர், டி.எஸ்.பி., பாண்டியன், சேர்மன் தங்கராசு, ஒன்றிய செயலர் ஜெயபால், ராமாபுரம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior