உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தங்கர்பச்சான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தங்கர்பச்சான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 02, 2012

"தானே புயலின் அறுவடை" குறும்பட சி.டி. மத்திய அமைச்சரிடம் அளித்தார் இயக்குநர் தங்கர்பச்சான்


புயல் தொடர்பான குறும்பட சி.டி.யை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் வியாழக்கிழமை வழங்குகிறார் திரைப்பட இயக்குநர்  தங்கர்பச்சான்
      
           தானே  புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வி.நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோரை தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.  புயல் பாதித்த இடங்களில் மறுவாழ்வுத் திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எந்தப்பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.  கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய "தானே' புயல் பாதிப்பு குறித்த 35 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை தங்கர்பச்சான் தயாரித்து இயக்கி உள்ளார்.
 
          "தானே புயலின் அறுவடை' என்று அந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குறும்பட சி.டி-யை (குறுந்தகடு) தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரிடம் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் அளித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்தார். "தானே' புயல் பாதிப்பு பற்றி ஜெயந்தி நடராஜனிடம் விளக்கிய அவர் தமது குறும்பட சி.டி-யையும் அளித்தார். 
 
 பின்னர் தங்கர்பச்சான் அளித்த பேட்டி:  
 
            "தானே' புயலால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பலாப்பழம், தென்னை, புளியமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை மரங்கள் மீண்டும் வளர குறைந்தது ஆறு முதல் எட்டு வருடங்கள் ஆகும். இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களின் வருமானத்தை நம்பி அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் நடைபெற திட்டமிட்டிருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்த குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் இல்லை. அதனால் புயலால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளின் பள்ளிக்கூட கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.  தற்போது புயல் பாதித்த இடங்களில் நிலத்தடி நீர் 600 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. பிரச்னையின் தீவிரம் கருதி, கடலூர்-பரங்கிப்பேட்டை இடையே புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது.  மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
 
            அப்பணியில் பெண்கள் ஈடுபட்டு வருதால் காலதாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் புயல் பாதிப்பின் தாக்கம் தெரியவரும். மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வுத் திட்டங்களை அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வருகிறேன். அவர்களும் கனிவாக கேட்டு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியது நம்பிக்கை அளிக்கிறது என்று தங்கர்பச்சான் கூறினார்.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, பிப்ரவரி 25, 2012

தானே புயலின் அறுவடை குறும்படம் வெளியீடு

கடலூர்:

         இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய "தானே புயலின் அறுவடை' குறும்படம் கடலூரில் இன்று திரையிடப்படுகிறது.

          "தானே" புயல் பாதிப்புகளையும், அதன் துயரத்தையும் உலகில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் "தானே புயலின் அறுவடை' என்ற குறும்படத்தை (ஆவணப்படம்) இயக்குனர் தங்கர் பச்சான் தயாரித்து இயக்கியுள்ளார். அதன் வெளியீட்டு விழா கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் இன்று 25ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 35 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தை "தானே' புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெளியிடுகின்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர் தங்கர் பச்சான் பங்கேற்கின்றனர்.












Read more »

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

"தானே" புயலின் பாதிப்புகள் பற்றி தங்கர்பச்சானின் ஆவண படம்

     "தானே" புயலின் பாதிப்புகள் பற்றி டைரக்டர் தங்கர்பச்சான் ஒரு ஆவண படம் தயாரித்து, டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `தானே புயலின் அறுவடை' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

    35 நிமிடங்கள் ஓடுகிற இந்த ஆவண படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் தயாராகியிருக்கிறது. `தானே' புயலினால் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எத்தகையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்? என்பதை படம் சித்தரிக்கிறது.

படம் முடிந்தபின் டைரக்டர் தங்கர்பச்சான் கூறியது

         ’’கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விழுந்து கிடப்பவை எல்லாம் வெறும் மரங்கள் அல்ல. எங்கள் தாத்தா-பாட்டி. அப்பா-அம்மா. அவர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்து தண்ணீர் ஊற்றி வளர்த்தவை. மரங்கள் இருந்தால்தான் உயிரினங்கள் வாழும். இதை ஒரு மாவட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. நாட்டின் பிரச்சினையாக பார்க்க வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க, 8 ஏக்கருக்கு ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும். இந்த இரு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்தது 10 ஆண்டு காலம் ஆய்வு படிப்பு வரை, கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.
மக்களும், அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தால்தான் திட்டங்கள் வெற்றி பெறும். எனவே விவசாயிகளிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்’’ என்று கூறினார்.






Read more »

வியாழன், ஜனவரி 19, 2012

கடலூர் மாவட்ட தானே புயல் சேதம் பற்றிய குறும்படம் தயாரிப்பு

     கடலூர் தானே புயல் பாதிப்பு பற்றிய குறும்படத்தை தயாரித்து இருப்பதாக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.


இதுகுறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறியது

           கடலூர், விழுப்புரம் பகுதியில்  தானே' புயலால் ஏற்பட்டது பாதிப்பு அல்ல, பேரழிவு. அந்த பகுதி மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சேகரித்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், விவசாய அழிவுகளை குறும்படமாக படம் பிடித்து வந்திருக்கிறேன்.

            எல்லாவற்றுக்கும் சாட்சியாக இந்த படம் அமையும். அரசியல்வாதிகளுக்கும், தமிழக அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பும் விதமாக இந்த படம் அமையும். கடலூர் பகுதியில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் குறித்து முதல் அமைச்சரிடம் அதிகாரிகள் சரிவர சொல்லவில்லை என்பது தான் உண்மை.

குடிநீர், பால், மின்சாரம் எதுவும் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடையும் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் 100 சதவீதம் திறந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

              கடலூர், விழுப்புரம் பகுதியில் சிறப்பு செயலாக்கத்துறையை அமைத்து, இந்த பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறையும் இதை செயல்படுத்தி, மக்களின் நிலையை கண்காணிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் உயரும் வரை சலுகை விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.













Read more »

புதன், ஜனவரி 11, 2012

தானே புயல் நிவாரணம் அளிக்காததை கண்டித்து தங்கர்பச்சான் தலைமையில் சாலை மறியல்


மறியலில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானை அப்புறப்படுத்தும் போலீஸார்.
பண்ருட்டி:

          சாலை மறியலில் ஈடுபட்ட தங்கர்பச்சான் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
            பேரிடர் ஏற்பட்டுள்ள கடலூரை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், திரைப்பட இயக்குநருமான தங்கர்பச்சான் தலைமையில் கொள்ளுக்காரன்குட்டையில் செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 
 
முன்னதாக தமிழ்நாடு உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், திரைப்பட இயக்குநருமான தங்கர்பச்சான் பேசியது:
 
         புயலால் பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. பிச்சை போடுவது போல அரசு ரூ.2,500 வழங்குவதை ஏற்க முடியாது. வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த போதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததே சேதத்திற்கு முக்கிய காரணம். 
 
             இப்பகுதியில் குடிநீர், மின்சாரம், உணவு இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பொருளாதாரமே அழிந்த நிலையில், விவசாயிகள் பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பார்கள்? புயலால் பாதிக்கப்பட்டு தண்ணீர் கூட கிடைக்காத இப்பகுதியில் உள்ள சாராயக் கடைகளை தயவு செய்து மூடிவிட வேண்டும். அரசை நம்பி பயனில்லை என்பதால் விவசாய சங்கங்களை அழைத்து தமிழக உழவர் சங்கங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகியுள்ளேன். விவசாயம் தொடர்பாக அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்களில் எங்களை அழைத்துதான் பேச வேண்டும்.
 
             கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார். எழு ஏக்கருக்கு ஒரு போர் அமைத்து தரவேண்டும். நிலத்தை சுத்தம் செய்து, விதை, மருந்து, உரம் தரவேண்டும். அரசு உதவியாக ஆடு, மாடு, கோழிகளை கொடுத்தால் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினர். பின்னர் கும்பகோணம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்ட தங்கர்பச்சான் மற்றும் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட 59 பேரை போலீசார்  கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், மார்ச் 31, 2011

தமிழகத் தேர்தல் : திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பார்வையில்

தினமலருக்கு அளித்த பேட்டி










  
தமிழர்களின் நிலையைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றனர்! 
தங்கர்பச்சான் திரைப்பட இயக்குனர்

 இயற்பெயர் : தங்கராஜ், 
வயது : 49, 
சொந்த ஊர் : பண்ருட்டி அருகில் உள்ள பத்திரக்கோட்டை, 
படிப்பு : ஒளிப்பதிவில் டிப்ளமா, 
தொழில் : விவசாயம், 
எழுத்து : நான்கு நாவல்கள், 
விருது : தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர், 
போராட்டம் : தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியவை, 
அரசியல் அனுபவம் : இல்லை


                     அரசியல் கட்சிகளின் இலவச திட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு எதிராக கொதித்தெழுந்து, அறிக்கை விட்டு சமீபத்திய பரபரப்புக்கு தூபம் போட்டிருக்கிறார், சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட தங்கர்பச்சான். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள வீட்டிற்கு சென்றதும், தனது கிராமத்து தோட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு அடை, வாழைப்பழம் உபசரிப்புடன் துவங்கியது சந்திப்பு.

அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம் தான் சமீபத்திய புது அவதாரமா?

                 கடந்த 22 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். எனது பேச்சும், எண்ணமும், படைப்புகளும் ஆரம்பம் முதலே மொழி, இனம் மக்கள் சார்ந்த அக்கறையுடன் இருக்கும். ஜாதி, மதம் என்ற பெயரில், ஒவ்வொரு தமிழனின் தலையும் அரசியல் கூட்டணியிடம் அடமானம் வைக்கப்படுகிறது. மக்களை வியாபாரப் பொருளாக மாற்றியுள்ளனர். தமிழன் வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி, வெளியில் சென்றால் மதுக்கடை, திரையரங்கம் என அவனை சிந்திக்கவே விடுவதில்லை. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான், தேர்தல் அறிக்கைகளை விமர்சித்ததற்கான பிரதான காரணம்.

தி.மு.க., - அ.தி.மு.க., என்ற இரு பிரதான கட்சிகளுமே பூரண மதுவிலக்கு பற்றி வாய் திறக்கவில்லை. இந்நிலையில், வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

               தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் மீதும், பல விஷயங்களில் நன்மதிப்பு வைத்திருக்கிறேன். இரண்டு கட்சியும், வெவ்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டு என்னால், "ஜால்ரா' போட முடியாது. துணிந்து சொல்கிறேன், திருவள்ளுவரை வைத்து ஏமாற்றுவதை இனி அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில், பொதுப் பிரச்னைகளுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராடினர் என்ற வரலாறே கிடையாது. மொழிப்போர் பிரச்னையைத் தான் இன்னும் சொல்லிக் கொண்டி ருக்கின்றனர். இலவசங்கள் கிடைக்கவில்லை; சம்பள உயர்வு வேண்டும் என்பது போன்ற சுய நலம் சார்ந்த போராட்டங்களில் மட்டுமே பலதரப்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளாக, நாட்டையும், மாநிலங்களையும் சில குடும்பங்கள் மட்டுமே 50 ஆண்டாக ஆள்கின்றன. அப்படி என்றால் எகிப்து, லிபியாவில் நடந்து கொண்டிருக்கும் புரட்சி, எங்கு வெடித்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

             பா.ஜ.,வும், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகளும், தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளித்துள்ளன... இந்த மூன்று கட்சிகளுமே ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தி.மு.க., வெற்றி பெற்றால், அந்தக் கட்சி மட்டும் தான் ஆளப்போகிறது. கூட்டணிக் கட்சிகள், ஒரு ஓரத்தில் வேண்டுமானால் நிற்கலாம். இவர்கள் தி.மு.க, விற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து தான் கூட்டணியில் இடம் பிடித்துள்ளனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு குறித்து எதுவுமே சொல்லவில்லை. சொல்லப்படாத அந்த அறிக்கையில் இருப்பது என்ன வென்பது அனைவருக்குமே விளங்கும்.

பூரண மதுவிலக்கை எதற்காக அமல்படுத்த வேண்டும் என்கிறீர்கள்?

                  இன்று எடுக்கப்படும் மசாலா திரைப்படங்களும், மதுக்கடைகளும் தமிழனை மயக்கத்தில் வைக்கிற ஒரே பணியை செய்கின்றன. தமிழனுக்கென வரலாறு, கலாசாரம், திறமை இருக்கிறது. 10 கோடி பேர் உள்ள தமிழன், மதுப் பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறான். இந்நிலையை மாற்றத் தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, என்னைப் போன்றவர்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இளைஞர் முதல் முதியவர் வரை, "டாஸ்மாக்' கடையை முற்றுகையிடும் நிலையில், இதெல்லாம் சாத்தியமா?

                தமிழகத்தில் எந்தப் பெண்ணும், மது விற்பனையை ஆதரிக்கவில்லை. குடிப்பவனும், ஏதாவது காரணத்தை முன் வைத்து தான் குடிக்கிறான். மதுவிலக்கை அமல்படுத்தினால், அவனால் குடிக்க முடியாது. வாக்காளர்களில், மது குடிப்பவர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது என்பதற்காக, மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது. "மதுவிலக்கை அமல்படுத்தினால், அந்த வெறியில் பலர் இறந்துவிடுவர்' என்கின்றனர். மது குடித்தாலும், அவன் சாகத்தான் போகிறான். அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்தத் திட்டத்தை அறிவிக்கும் அரசியல் கட்சியை அனைத்து தரப்பு மக்களும், தூக்கி வைத்துக் கொண்டாடத் தயாராக இருக்கின்றனர். "மது நாட்டிற்கு வீட்டிற்கு, உயிருக்கு கேடு' என்று எழுதிவைத்துவிட்டு, அதை அரசாங்கமே விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுவிலக்கை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி.

தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய மூன்று கட்சித் தேர்தல் அறிக்கைகளிலும் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...

                இலவசங்கள் அறிவிப்பதே, தனி மனிதனின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல் தான். ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால், அவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும். இலவசங்களை வாங்கி, கண் முன்னே எரிக்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்யும் திருட்டுத்தனத்திற்கு மக்களை உடன் வைத்துக் கொள்ள, பணம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என நினைக்கின்றனர். வெளிநாடுகளைப் போல கல்வி, மருத்துவம் மட்டுமே இலவசமாக வழங்க வேண்டும். இந்த இரண்டை தனியாருக்கு கொடுத்துவிட்டு, மக்களை அழிக்கும் மதுவை அரசு விற்பது வேடிக்கை, வேதனை.

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான், அரசியல் கட்சிகளின் பிரசார பீரங்கிகளாக இருக்கின்றனர்...

               திரைத்துறையில் இருப்பவன், வயதாகும் வரை அதைப் பிழைப்பாக கருதுகிறான். சினிமாவில் இருக்கும் வரை, பொதுமக்களைப் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு, அரசியலுக்கு வந்தால், அதை தியாகம் என்கிறான். என்னைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதையும், பிழைப்பு என்றே கூறுவேன்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லையா?

              மதுக்கடைகளை விட மோசமான வேலையை, இந்த 100 நாள் வேலை திட்டம் செய்து கொண்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களை சோம்பேறிகளாக்கும், நிலங்களை மலடாக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கனவே மின் தட்டுப்பாட்டால், விவசாய உற்பத்தி படுத்துவிட்டது. விவசாய துறைக்காக நியமிக்கப்படும் அமைச்சர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை. விவசாய உற்பத்தியை மேம்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

முடிவாக என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

            காமெடி நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகளை, தொலைக்காட்சியில் பார்த்து நாம் சிரித்துக் கொண்டிருப்பது போல், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழனையும், தமிழகத்தின் நிலையையும் பார்த்து, அங்குள்ள மக்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர். இளைஞர்கள் விழித்தெழுந்தால் தான் நாடு மீண்டும் தலை நிமிரும். எனவே, இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி, போராட முடிவு செய்திருக்கிறேன்.


நன்றி: தினமலர் 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior