உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வேப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 01, 2012

வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/c54620e4-afb5-4818-9eb3-6f8d25c3a37f_S_secvpf.gif 



திட்டக்குடி:


         வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 34 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்கு பிப்ரவரி 27  ம்  தேதி  இரவு பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பரமக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.
 
        வேப்பூரை அடுத்த பில்லூர் கைகாட்டி அருகே பிப்ரவரி 28  அதிகாலையில் அந்த பஸ் வந்தபோது திடீரென நிலை தடுமாறியது. டிரைவர் பாலகிருஷ்ணன் அதனை கட்டுப்படுத்த முயன்றும் பயனின்றி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த சசிரேகா, திரவியம் மற்றும் புஷ்பா, அவரது மகன் நாகராஜன் (29) உள்பட 34 பேர் படுகாயமடைந்தனர். ஒரு பயணி காயமின்றி தப்பினார்.
 
      விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார், நெடுஞ்சாலை இரவு ரோந்து படையினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்கும் பணி நடந்தது. 
 
 
 

Read more »

வியாழன், ஆகஸ்ட் 05, 2010

சிறுபாக்கம் பகுதியில் பருவமழை தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்


சிறுபாக்கம்:

              சிறுபாக்கம், வேப்பூர் மானாவாரி விவசாயிகள் நிலத்தினை உழுது, பருவமழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

             சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கழுதூர், அரியநாச்சி, சேப்பாக்கம், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், அரசங்குடி, ஒரங்கூர் உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மானாவாரி விவசாயிகள் தொடக்க காலத்தில் ஆடிப்பட்டத்திற்கு ஏற்றவாறு, தங்களின் மானாவாரி நிலங்களில் வரகு, சோளம், மணிலா பயிர் கள் விளைவித்து வந்தனர்.

                   கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் காலம் தவறிய மழை, கடுமையான வெயில் ஆகியவற்றால் பயிர்களை மாற்றி, பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை விளைவித்து வருகின்றனர். "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப முன்னதாக பயிரிட்ட நிலத்திலுள்ள கழிவுகள், களைகளை அகற்றி 4 முறை டிராக்டர் கொண்டு உழவு செய்து நிலத்தினை தயார் செய்தனர். ஆனால் இந்த ஆண்டும் பருவமழை பெய்யாமல் கடந்த ஒரு மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதால் மானாவாரி விவசாயிகள் பரிதவிப்புடன் பருவமழையை எதிர்பார்த்து காத்துள் ளனர்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிறுபாக்கம், வேப்பூர் விவசாயிகள் மஞ்சள் விளைவிப்பதில் ஆர்வம்


சிறுபாக்கம்:

           வேப்பூர், சிறுபாக்கம் விவசாயிகள் போதிய விலை கிடைக்கும் மஞ்சள் பயிரை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

           வேப்பூர், சிறுபாக்கம் உட்பட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் பண தேவைகளுக்காக நீர்ப்பாசன நிலங்களில் ஒரு ஏக் கர் முதல் இரண்டு ஏக்கர் வரை மஞ்சள் பயிர்களான சேலம் 1, ஈரோடு 2, பனங் காளி, எருமதாளி, நுர ஆகிய மஞ்சள் ரக பயிர்களை விளைவித்து வந்தனர்.கடந்த ஆண்டு ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் மார்க்கெட்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு குவிண்டால் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை நல்ல விலைக்கு எடுக்கப்பட்டது. 

               கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குவிண்டாலுக்கு 16 ஆயிரம் வரை மஞ்சளுக்கு விலை வழங்கப்பட்டு வருகிறது.இதனால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் மஞ்சள் விளைவித்த 30 சதவீத விவசாயிகளை தொடர்ந்து தற்போது 90 சதவீத விவசாயிகள் மஞ்சள் பயிர் விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read more »

திங்கள், ஜூலை 26, 2010

வேலைப்பளு, நோய் தாக்குதல் இல்லை : பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சிறுபாக்கம்:

          வேலைப்பளு மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் பூக்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

             வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன விளை நிலங்களில் அண்மைக் காலமாக குறைவான பருவ மழையைக் கொண்டு காய்கறிகளை விளைவித்து வந்தனர்.ஆனால் பருவநிலை மாற்றத்தாலும், நோய் தாக்குதல், பணியாளர்கள் தட்டுப்பாடு, கொள் முதல் நிலையங்களுக்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாத நிலை ஆகியவற்றால் காய் கறிகளை பயிரிடுவதில் தயக்கம் காட்டி வந்தனர். 

                  கடந்த இரண்டு ஆண்டுகளாக விளை நிலங்களில் உள்ள தரை கிணற்றில் கிடைக்கும் குறைவான நீரைக் கொண்டும் அதிக வேலைப்பளு, நோய் தாக்குதல்கள் இல்லாததாலும் கோழிக் கொண்டை, சம்பங்கி, டில்லி கனகாம்பரம், மல்லிகை, மரிக்கொழுந்து, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விளைவிக்கின்றனர்.கிடைக்கும் பூக்களை அருகிலுள்ள விருத்தாசலம், சேலம், ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளிலுள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி கணிசமான வருவாயை பெற்று வருகின்றனர். இதனால் விவசாயிகள் அதிகளவு பூக்களை பயிரிவதில் ஆர் வம் காட்டுகின்றனர்.

Read more »

புதன், ஜூலை 21, 2010

வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரிகலெக்டருக்கு மனு

சிறுபாக்கம்: 

           வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரி நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

நேரு இளைஞர் மன்றத் தலைவர் கணேஷ்ராம், கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு:

              பெரியநெசலூர் ஊராட்சியில் விவசாயத்திற்கும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக விளங்கி வரும் பெரிய ஏரியாகும். இதனைச் சுற்றியுள்ள விளம்பாவூர், களத்தூர், குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி தூர்ந்து காணப்படுவதால் மழைக் காலங்களில் உடனுக்குடன் நீர் வெளியேறுவதால் ஏரி வறண்டு விடுகிறது. இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு அறுவடை காலத் திற்கு நீர் இல்லாமல் அவதியடைகின்றனர். ஏரியின் கண்மாய்கள் தூர்ந்துள்ளதால் அதிகளவு நீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே ஏரியை ஆழப்படுத்தியும், மதகுகள் மற்றும் கண் மாய்களை சீரமைத்துத் தர வேண்டும் என  மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், ஜூலை 20, 2010

இடிந்து விழும் ஆபத்தான நிலையில் விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டடம்

விருத்தாசலம் : 

          விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
 
              விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையின் அருகே விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடலூர்- திருச்சி, விழுப்புரம் - திருச்சி பாசஞ்சர் ரயில்கள் நின்று போகும். இந்த ஸ்டேஷனில் இருந்து நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த டவுன் ஸ்டேஷனுக்கான அலுவலகக் கட்டடம் 1994ம் ஆண்டு கட்டப்பட்டது.  இதில் டிக்கெட் கவுன்டர், அலுவலக அறை, பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இந்த கட்டடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 

           கட்டடத்தின் மேலே ஆலமரம் வளர்ந்து அதன் வேர்கள் கட்டட சுவற்றுக்குள் சென்றதால் ஆங்காங்கே சுவரில் விரிசல் காணப்படுகிறது. இதனால் எப்போது இடிந்து விழும் என தெரியாத அபாய நிலை உள்ளது. மக்கள் தினமும் அலுவலக அறைக்குச் சென்று டிக்கட் எடுக்க பயன்படுத்தும் இந்தக் கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் கட்டடத்தின் மேல் உள்ள மரத்தினை அகற்றி, கட்டடத்தை முறையாக பராமரிக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வெள்ளி, ஜூலை 16, 2010

கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை: வேப்பூரில் எம்.பி., அழகிரி பேச்சு

சிறுபாக்கம் : 

              கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை படைத்துள்ளதாக எம்.பி., அழகிரி பேசினார். வேப்பூர் பஸ் நிலையத்தில் காமராஜர் 108வது பிறந்த நாள் விழா நடந்தது. காங்., மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நீதிராஜன் முன்னிலை வகித்தார். 

பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் மற் றும் கல்வெட்டினை திறந்து வைத்து கடலூர் எம்.பி.,அழகிரி பேசியதாவது:

               கடந்த காலங்களில் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதை அறிந்த அப்போதைய முதல்வர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து புரட்சி செய்தார். இதனால் ஏழைகள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். அவரது ஆட்சியில் நான் கில் ஒரு பங்கு நிதியை கல்விக்காக ஒதுக்கீடு செய்தார்.

                இன்று விவசாயிகளுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை காங்., தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பொதுத் துறை வங்கிகள் மூலம் 42 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது. இந்தியாவில் கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மன்மோகன்சிங் அரசு சாதனை படைத் துள்ளது.ஏழை மக்கள் வறுமையில் வாடுவதை நினைத்து தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தினை சட்டமாக இயற்றியுள்ளது. இதனால் வயதானவர்களும் வாழ்வில் ஏற்றம் பெற்றுள்ளனர்.

                  இவ்வாறு எம்.பி., அழகிரி பேசினார். விழாவில் மாவட்ட இளைஞர் காங்., வனிதா, ராகுல்காந்தி பேரவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காங்., நிர்வாகிகள் வேதமாணிக்கம், மதார்ஷா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

வெள்ளி, ஜூலை 02, 2010

வேப்பூர் அடுத்த கழுதூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு நேர்காணல் முகாம்

சிறுபாக்கம்: 

               வேப்பூர் அடுத்த கழுதூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம், சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை, தி சென்னை சில்க்ஸ் இணைந்து நடத்தியது. தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கோவை யூகமூர்த்தி, தாசில்தார் கண்ணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்வி அறக்கட்டளை தாளாளரும், முன்னாள் எம்.பி.,யுமான கணேசன் துவக்கி வைத்து பேசினார்.முகாமில் மங்களூர் தொகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பிற் கான நேர்காணலில் கலந்து கொண்டனர்.  துயர்துடைப்பு தாசில்தார் சையத்ஜாபர், மண்டல துணை தாசில்தார் பாலு, தேர்தல் பிரிவு அண் ணாத்துரை, எழுத்தாளர் இமயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

திங்கள், ஜூன் 21, 2010

எஸ்.பி., கார் விபத்து: பஸ் டிரைவர் கைது

சிறுபாக்கம் : 

             கடலூர் எஸ்.பி., கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியின் போது விருத்தாசலம், மங்கலம்பேட்டை வழியாக உளுந்தூர் பேட்டை சென்றவர் பின்னர் வேப்பூர் சென்றார். அதிகாலை 3.30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஐவதுகுடி அருகே சேப்பாக்கம் மேம்பாலத்தில் கட்டுமான பணி காரணமாக திருப்பி விடப்பட்ட ஒரு வழி பாதையில் சென்ற போது திருச்சியில் இருந்து சென்னைக்கு அதிவேகமாக சென்ற அரசு பஸ் (டி.என். 32- என் 2527) எஸ்.பி.,யின் கார் மீது மோதுவது போல் சென்றது.

                இதனால் பதட்டம் அடைந்த எஸ்.பி., யின் கார் டிரைவர் சமயோசிதமாக காரை வளைத்து சாலையோர தடுப்புக் கட்டை மேல் ஏற்றினார். இதில் எஸ்.பி., காயமின்றி தப் பினார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து திருத்தணியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஞானபிரகாசத்தை (46) கைது செய்தனர்.

Read more »

வியாழன், ஜூன் 03, 2010

வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் தொடர் மின் வெட்டு: விவசாயிகள் பாதிப்பு

சிறுபாக்கம் : 

                     வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வேப்பூர், சிறுபாக்கம், கழுதூர், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், ஒரங்கூர், அடரி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு அறிவித்த மின் தடையை விட அதிகளவு மின் வெட்டு இருப் பதால் அலுவலகங்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம், அரசு அலுவலகங்கள் செயலிழந்து போகின்றன. அரசு நாளொன்றுக்கு 3 மணி நேரமாக இருந்த மின் வெட்டினை 2 மணி நேரமாக குறைத்தும் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Read more »

செவ்வாய், மே 18, 2010

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு: மூன்று பேர் கைது: வேன் பறிமுதல்

சிறுபாக்கம்: 

                       சிறுபாக்கம் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்து தப்பியோடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த குமராட்சி தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை மகன் தமிழ்ச்செல்வன் (25). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு டி.என்.28 ஏ.7599 எண் கொண்ட லாரியில் சவுக்கு லோடு ஏற்றிக் கொண்டு குள்ளஞ்சாவடியிலிருந்து ஈரோடு சென்றார். வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சி கைகாட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த டி.என்.32 ஆர்.3611 பதிவெண் கொண்ட மகிந்திரா வேன் திடீரென லாரியின் முன்புறம் வேகமாக சென்று குறுக்கே நின்றது. வேனிலிருந்து இறங்கிய வேப்பூர் அடுத்த நரையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மாதேஸ்வரன் (30). அவரது ஆதரவாளர்கள் தண்டபாணி, கோவிந்தசாமி ஆகியோர் லாரி டிரைவர் தமிழ்ச் செல்வனை தாக்கி அவர் வைத்திருந்த 1,300 ரூபாயை பறித்து தப்பியோடினர். இது குறித்து தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், அரிகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிந்து லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்து சென்ற மாதேஸ்வரன், தண்டபாணி, கோவிந்தசாமி ஆகிய மூவரையும் நயினார் பாளையம் அருகே பிடித்து கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.

Read more »

திங்கள், மே 17, 2010

சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

சிறுபாக்கம் : 

                சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுபாக்கம், மங்களூர், வேப்பூர் பகுதிகளில் நேற்று காலை 7.10 மணியளவில் பலத்த சத்தத்துடன் விமானம் ஒன்று சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. வழக்கத்திற்கு மாறாக திடீரென விமானம் தாழ்வாக பறந்து சென்றதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிசயத்துடன் விமானத்தை ஆர்வமாக பார்த்து ரசித்தனர். இதனால் கிராம மக்களிடையே நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

வெள்ளி, மே 14, 2010

தீ விபத்தில் 20 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் : 

               வேப்பூர் அடுத்த ஐவதுகுடியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன், விவசாயியான இவரது வீட்டின் பின்புறம் ஐந்து வைக்கோல் போர் இருந்தது.  நேற்று முன்தினம் மதியம் திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழமலை (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். சேதமதிப்பு 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Read more »

வியாழன், மே 13, 2010

மரவள்ளியில் மஞ்சள் காரை நோய்: அதிகாரிகள் ஆய்வு

சிறுபாக்கம் : 

             வேப்பூர் பகுதியில் மரவள்ளியில் மஞ்சள் காரை நோய் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

              வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் குங்கும ரோஸ், பர்மா, வெள்ளை ரோஸ் ஆகிய மரவள்ளிகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பயிர்களை மஞ்சள் காரை நோய் தாக்கியதால் செடிகள் காய்ந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் தோட்டகலை துணை இயக்குனர் முகமது யாகியா தலைமையில் விருத்தாசலம் அறிவியல் நிலைய தலைவர் சுப்பிரமணியன், பேராசிரியர் இந்திராகாந்தி, வீரமணி ஆகியோர் மங்களூர், நல்லூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வேப்பூர், காட்டுமயிலூர், மாங் குளம், அடரி உள்ளிட்ட பகுதிகளில் 300 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில் மரவள்ளி பயிரிடப்பட்டிருந்த நிலங்களில் உள்ள மண்ணில் இரும்பு சல்பேட் (அன்னபேரி உப்பு) தாது சத்து குறைபாட்டினால் மஞ்சள் காரை நோய் தாக்கியுள்ளது தெரியவந்தது.

                 இதனையடுத்து விவசாயிகளிடம் 'நோய் தாக்கிய வயல்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் இரும்பு சல்பேட் (அன்னபேரி உப்பு) 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம் மற்றும் யூரியா 10 கிராம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் செய்து கை தெளிப்பான் மூலம் ஒரு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். அல்லது இரும்பு சல்பேட் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து மரவள்ளி செடிகளுக்கு அடியில் இடைவெளி விட்டு வைத்து நீர்பாய்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தினர். ஆய்வின்போது தோட்டகலை உதவி இயக்குனர்கள் அமிர்தலிங்கம், ரமணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

செவ்வாய், மே 11, 2010

பூத்துக்குலுங்கும் புதிய ரக 'எள்' சிறுபாக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் : 

             சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் புதிய ரக எள் சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிறுபாக்கம் மற்றும் வேப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களான சேப்பாக்கம், நல்லூர், பெரியநெசலூர், காட்டுமயிலூர், கழுதூர், அடரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரும்பு, மரவள்ளி அறுவடை செய்தனர். பின்னர் குறைவான நீரைக்கொண்டு புதிய ரக 'எள்' பயிரான திண்டிவனம் 4, திண்டிவனம் 2, வெள்ளை எள் ஆகியவற்றை பயிரிட்டனர். கடந்த ஆண்டு 80 கிலோ எள் மூட்டை ஒன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது விவசாயிகள் விதைத் துள்ள 'எள்' பயிர் ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். பூக்கள் பூத்துக் குலுங் கிய எள் பயிரால்   நல்ல விலை கிடைக்குமென விவசாயிகள் மகிழ்ச் சியில் உள்ளனர்.

Read more »

வியாழன், மே 06, 2010

திட்டக்குடி - சிறுபாக்கம் 30 கி.மீ., சாலை 'டர்...'


திட்டக்குடி:

             திட்டக்குடி - சிறுபாக்கம் வரையிலான 30 கிலோ மீட்டர் தார் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

             திட்டக்குடியை தாலுக்காவின் தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிறுபாக்கம் குறுவட்டம் 32 கிலோ மீட்டர் தொலைவில், மாவட்டத்தின் கடைசியில் அமைந்துள் ளது. இங்குள்ள பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். மங்களூர் ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூர் வழியாக சிறுபாக்கம் வரை செல்ல கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் 30 கி.மீ., தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது.

                இவ்வழியாக முப்பதுக்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் போக்குவரத்து வசதி பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதி விளை பொருட்களான கரும்பு, நெல், மணிலா, மக்காச் சோளம், எள், பருத்தி ஆகியவற்றை வியாபாரத்திற்காக திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் சந்தைகளுக்கு நேரடியாக எடுத்து செல்கின்றனர். தவிர பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என பல தரப்பினரும் இவ்வழியை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வலுவிழந்து போக்குவரத்து துண் டிக்கப்படும் நிலைக்கு மாறுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக 'பேட்ஜ் ஒர்க்' செய் யாத காரணத்தால் சைக் கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைகின்றனர்.

                இந்த சாலை கடந்த 2008ல் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து 94.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டக்குடி - சிறுபாக்கம் வரை பழுதடைந்த தார் சாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சீரமைக்கப்பட் டது. பிரதான சாலைக்கே பணிகள் சரியாக நடைபெறாத நிலையில் சிறுபாக்கம் வரையிலான குக்கிராமத்திற்கு செல்லும் சாலைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

              திட்டக்குடி- சிறுபாக்கம் தார் சாலையை முழுவதுமாக சீரமைத்து இருவழிப்பாதையாக மாற்றினால் கள்ளக்குறிச்சி, சேலம், ஆத்தூர், பெங்களூரு, ஓசூர் உள் ளிட்ட பெரு நகரங்களுக்கு ராமநத்தம் வழியாக சென்று கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இப்பகுதி வழியாக திருப்பி விடலாம். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளும் குறைந்து உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவதோடு வேப்பூர், ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தினால் நீண்ட நேரம் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பினை தவிர்க்க இந்த சாலையை மாற்று வழியாகவும் பயன்படுத்தலாம்.

               குறிப்பாக திட்டக்குடியிலிருந்து ராமநத்தம், ஆவட்டி, வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் நேரத்தை காட்டிலும் திட்டக்குடி, ஆவட்டி, மங்களூர், சிறுபாக்கம், சின்னசேலம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் போது குக்கிராம மக்கள் பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை மாறும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பெண்களிடம் நகை திருட்டு மூவர் கைது; நகைகள் பறிமுதல்


திட்டக்குடி : 

              தூங்கிய பெண்களிடம் நகை திருடிய மூவரை போலீசார் கைது செய்து 130 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

            கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் தர்மகுடிகாடு, தொளார், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி பகுதிகளில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் நகைகளை பறிக்கும் சம்பவம் தொடர்ந்தது. இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் தனிப்படை மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெலிங்டன் ஏரியின் கடைகால் ஷட்டர் அருகே நின்றிருந்த மூவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

               இதில் மங்களூர் பாஞ்சாலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மஞ்சநாதன் என்கிற ராஜூ (32), கேரள மாநிலம் மணப்புரம் நாகராஜ் மகன் ராஜா (28), வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் சின்னையன் மகன் ராஜதுரை (28) என்பதும், திட்டக்குடி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 130 கிராம் எடையிலான செயின், தாலிச்சரடு, மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புதன், மே 05, 2010

கோடை மழையால் மரவள்ளி கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

 சிறுபாக்கம்:  

                   சிறுபாக்கம், வேப்பூர் பகுதி விவசாயிகள் கோடை மழையால் மகிழ்ச்சியடைந்தனர். சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளிலுள்ள நீர்ப்பாசன விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை கொண்டு மரவள்ளி, கரும்பு பயிர்களை கடந்த ஜனவரி மாதம் முதல் விளைவித்தனர். கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் விளைவித்த பயிர்களை காப்பாற்ற முடியாமலும், நீர் தட்டுப்பாட்டினாலும் பயிர்கள் வாடின. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கோடை மழையால் மரவள்ளி, கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், மே 04, 2010

வேப்பூர் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம்: பயணிகள் எதிர்பார்ப்பு


சிறுபாக்கம்: 

                      விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் வேப்பூர் கூட்ரோட்டில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வியாபாரம், மருத்துவ சிகிச்சைக்காக சென்று பயனடைகின்றனர். இந்த பஸ்கள் வேப்பூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி, பின்னர் கூட்டுரோடு வழியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் செல்கிறது. சர்வீஸ் ரோடு வழியாக வந்து, கூட்ரோட்டில் நிற்கும் பயணிகளை ஏற் றாமல் நேரடியாக மேம் பாலத்தில் ஏறி செல்கிறது. இதனால் பெரியநெசலூர், சிறுநெசலூர், அரியநாச்சி, என்.நாரையூர் உள்ளிட்ட குக்கிராம மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வேப்பூர் கூட்ரோட்டில் சர்வீஸ் ரோடு வழியாக நிறுத்திச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திங்கள், மே 03, 2010

வேப்பூரில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு


சிறுபாக்கம் : 

                 வேப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

                திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான பெரியநெசலூர், சேப்பாக்கம், நல்லூர், நிராமணி, கண்டப்பங்குறிச்சி, பூலாம் பாடி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெருமளவு பி.எஸ். என்.எல்., சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அவசர ஆம்புலன்ஸ் 108, போலீஸ் ஸ்டேஷன் 100, தீயணைப்பு நிலையம் 101 ஆகியன இலவச எண் இணைப்புகளை தொடர்பு கொண்டால் 'உபயோகத்தில் இல்லை, மீண்டும் சரிபார்க்க' வேண்டுமென என பதில் வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருவதால் அடிக்கடி நெடுஞ்சாலையில் நிகழும் விபத்து குறித்து கூட அவசர எண்ணிற்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய கிராம மக்கள் தீ விபத்து, ஆம்புலன்ஸ், போலீஸ் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்துள்ளனர். வேப்பூர் பகுதிகளில் குறிப்பிட்ட இலவச சேவை எண்கள் பழுதானதை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் தனிக்கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior