சிறுபாக்கம் : 
             வேப்பூர் பகுதியில் மரவள்ளியில் மஞ்சள் காரை நோய் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
              வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் குங்கும ரோஸ், பர்மா, வெள்ளை ரோஸ் ஆகிய மரவள்ளிகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பயிர்களை மஞ்சள் காரை நோய் தாக்கியதால் செடிகள் காய்ந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் தோட்டகலை துணை இயக்குனர் முகமது யாகியா தலைமையில் விருத்தாசலம் அறிவியல் நிலைய தலைவர் சுப்பிரமணியன், பேராசிரியர் இந்திராகாந்தி, வீரமணி ஆகியோர் மங்களூர், நல்லூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வேப்பூர், காட்டுமயிலூர், மாங் குளம், அடரி உள்ளிட்ட பகுதிகளில் 300 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில் மரவள்ளி பயிரிடப்பட்டிருந்த நிலங்களில் உள்ள மண்ணில் இரும்பு சல்பேட் (அன்னபேரி உப்பு) தாது சத்து குறைபாட்டினால் மஞ்சள் காரை நோய் தாக்கியுள்ளது தெரியவந்தது.
                 இதனையடுத்து விவசாயிகளிடம் 'நோய் தாக்கிய வயல்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் இரும்பு சல்பேட் (அன்னபேரி உப்பு) 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம் மற்றும் யூரியா 10 கிராம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் செய்து கை தெளிப்பான் மூலம் ஒரு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். அல்லது இரும்பு சல்பேட் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து மரவள்ளி செடிகளுக்கு அடியில் இடைவெளி விட்டு வைத்து நீர்பாய்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தினர். ஆய்வின்போது தோட்டகலை உதவி இயக்குனர்கள் அமிர்தலிங்கம், ரமணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக