உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

பி.காம். படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு

               பி.காம். படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிளஸ்-2 தொழிற்பிரிவு (ஒக்கேஷனல்) மாணவர்களுக்கு அந்தப் பிரிவில் இடம் தர சில கல்லூரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.  

              பிளஸ்-2-வில் அதிக அளவிலான மாணவர்கள் முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 மற்றும் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கும் காரணத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இம்முறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

                சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளில் மொத்தம் 2 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தக் கல்லூரிக்கு இப்போது 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் அதே பகுதியில் உள்ள மற்ற கல்லூரிகளிலும், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளது.  இந்த கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளைக் காட்டிலும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய பி.காம். பட்டப் படிப்புக்கே மாணவ, மாணவிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.  

                இதை பயன்படுத்திக் கொண்டு, சில கல்லூரிகள் அரசு உதவி பெறும் திட்டத்தின் கீழ் வரும் சில படிப்புகளையும், சுயநிதி படிப்புகளாக மாற்றி லாபம் சம்பாதித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, பிளஸ்-2-வில் தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு, சில கல்லூரிகள் பி.காம். படிப்பில் இடம் தர மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  அமைந்தகரையைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, பிளஸ்-2-வில் தொழில் பிரிவில் படித்துள்ளார். 1200-க்கு 930 மதிப்பெண் பெற்ற இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில், பி.காம். படிப்பில் சேர விரும்பி விண்ணப்பம் கோரியுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகிகள் பிளஸ்-2 தொழில் பிரிவுக்கு பி.காம். பிரிவில் இடம் கிடைக்காது. எனவே, வேறு பிரிவை தேர்வு செய்யுமாறு கூறியுள்ளனர்.  

இதுகுறித்து சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி வணிகப் பிரிவு பேராசிரியர் ரவி கூறியது: 

              அரசு ஆணையின்படி, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு, பி.காம். படிப்பில் 20 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆணையை தமிழக அரசு பிறப்பித்து வருகிறது.  இம்முறை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆணையை பிறப்பிக்க தாமதமாகலாம். இருந்தபோதும், 2010-11 கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணையையே கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்.  ஆனால், கல்லூரிகள் அரசு உத்தரவை மதிப்பதே இல்லை. லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.  சில அரசு கல்லூரிகளும், தங்களுடைய தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, தொழிற்பிரிவு மாணவர்களை பி.காம். படிப்பில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகின்றன. பல்கலைக்கழகமும் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் முடிவதற்குள், உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி மறுபதிப்பு

            சென்னைப் பல்கலைக்கழத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.  

              ஆங்கிலம் - தமிழ் அகராதிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகராதிக்குச் சிறப்பான இடம் உண்டு. டாக்டர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் தலைமையிலான ஆசிரியர் குழுவால் இந்த அகராதி 1963 - ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. முதலில் மூன்று தொகுதிகளாக வெளியாகி, பின்னர் 1965, 1977,1981,1992-ஆம் ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டபோது ஒரே தொகுதியாக வெளியானது.  இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.திருவாசகத்தின் முயற்சியால் இப்போது மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 

             கெட்டியான அட்டையுடன் தயாரிக்கப்பட்ட அகராதியின் விலை ரூ.400, சாதாரண அட்டையுடன் கூடிய அகராதியின் விலை ரூ.350 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அறிமுகச் சலுகையாக 25 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அகராதியை வாங்க விரும்புவோர் சென்னைப் பல்கலைக்கழக பதிப்பு பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு... 

044-25399520

Read more »

நவரத்னா தகுதியால் என்.எல்.சி.க்கு தன்னாட்சி அதிகாரம் அதிகரிப்பு: ஏ.ஆர்.அன்சாரி




செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி (வலமிருந்து 3-வது). உடன் (இடமிருந்து) இயக்குநர்கள் எஸ்.கே.ஆச்சார்யா, ஆர்.கந்தசாமி
 
நெய்வேலி:
 
            என்.எல்.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளதால், இந் நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.  
 
 நெய்வேலியில் என்.எல்.சி. லைவர் ஏ.ஆர்.அன்சாரி கூறியது:  
 
                என்.எல்.சி. நிறுவனம் மினி ரத்னா என்ற தகுதியிலிருந்து தற்போது நவரத்னா என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இது எங்களது செயல்பாட்டுக்கு கிடைத்த கெüரவமாக கருதுகிறோம். மத்திய அரசு வழங்கியுள்ள இப் பதக்கம் எங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்.  இத்தகைய தகுதியை பெற நிறுவனத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் எனது சக இயக்குநர்களும் காரணமாவர்.  2008-ம் ஆண்டு இந்நிறுவனத் தலைவராக நான் பொறுப்பேற்கும் போது, 3 இலக்குகளை மையமாக வைத்து செயல்படுவோம் என்று கூறினேன்.
 
              அதன்படி இந்நிறுவனத்தின் மின்னுற்பத்தித் திறனை 2,490 மெகவாட்டிலிருந்து 10 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்துவது, மினி ரத்னா தகுதியிலிருந்து நவரத்னா தகுதியை எட்டுவது, மாற்று மின்னுற்பத்தி திறன்களில் ஈடுபடுவது என கூறியிருந்தேன்.  அதன்படி அடுத்த ஆண்டு 10 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் பணி தொடங்கவுள்ளது.  தற்போது நவரத்னா என்ற தகுதியை எட்டியிருக்கிறோம். அடுத்ததாக மாற்று மின் சக்தி உற்பத்தியை தொடங்க இடம் தேர்வு செய்துள்ளோம். அது விரைவில் முடிவடையும் என்றார். 
 
                நெய்வேலியில் தற்போது கட்டுமானம் நடைபெறும் 2-ம் அனல் மின் நிலை விரிவாக்கத்தில் 250 மெகாவாட் மின்னுற்பத்தி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. எஞ்சிய 250 மெகா வாட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். நிறுவனத்தின் நிதிநிலையும் நல்ல நிலையில் உள்ளதால் புதிய திட்டங்கள் விரைவில் நிறைவேற வாய்ப்புண்டு.  மாநில அரசுக்கு தற்போது 1,000 மெகா வாட் மின்சாரம் தடையின்றி வழங்கிக் கொண்டிருக்கிறோம். புதிய மின் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
 
            இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. பத்திரிகைகளின் பலம் என்ன என்பதை அனைவரும் அறிவோம். எனவே ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஏ.ஆர்.அன்சாரி கேட்டுகொண்டார்.  பேட்டியின் போது என்.எல்.சி. இயக்குநர்கள் பி.சுரேந்திரமோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜே.மகிழ்செல்வன் மற்றும் எஸ்.கே.ஆச்சார்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior