ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்  சார்பில் உருவாக்கப்பட்ட தில்லஞ்செடி காடுகள். (உள்படம்) ஆலமரம்  அமைப்பினரால் நடப்படும் சுரபுன்னை விதைகள்.
கடலூர்:
            கடலூர் அருகே ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்  சார்பில், தில்லஞ்செடி என்ற மரங்களை பெருமளவில் வளர்த்து சதுப்பு நிலக்  காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 
                தமிழகத்தில் சிதம்பரத்தை அடுத்த  பிச்சாவரத்தில், சதுப்பு நிலங்களில் மாங்குரோவ் காடுகள் அதிகளவில் உள்ளன.  அலையாத்தி காடுகள் என்றும் அழைக்கப்படும், இக்காடுகள் சுற்றுலாப் பயணிகளை  வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் அரிப்பு,  மீன் வளம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் சதுப்பு நிலக்காடுகளால் விளைகின்றன.  கடலூர் மாவட்டத்தில் உப்பங்கழிப் பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள்  பெருமளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் பராமரிப்பு இன்மை, ஆடு,  மாடுகளால் சேதம், இயற்கை மாற்றங்கள், ரசாயனத் தொழிற்சாலைகளின்  சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சதுப்பு நிலக்  காடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. 
               எனவே கடலூர், சுற்றியுள்ள  பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகளை வளர்ப்பதில் ஆலமரம் என்ற சுற்றுச்சூழல்  பாதுகாப்பு அமைப்பு ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறது. சதுப்பு நிலக் காட்டு  மரங்களில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கடலூர் அருகே  நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, குடிகாடு, ஈச்சங்காடு,  ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம் பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகளில் வளரும்  தில்லஞ்செடி என்ற வகை மரங்கள் பெருமளவில் இருந்தன. அவைகள் தற்போது  பெரும்பாலும் அழிந்து கொண்டு இருக்கின்றன. உப்பனாற்றங்கரைகளில்,  உப்பங்கழிகளில் தில்லஞ்சடிகள் அதிகம் இருந்தால், அவற்றின் வேர்  பகுதிகளில் கிலோ ரூ. 400 வரை விலை போகும் கல்நண்டு வகைகள், உயர் ரக  இறால்கள், உப்பங்கழிப் பகுதி மீன்கள் பெருமளவில் உற்பத்தியாகும் என்றும்,  மற்ற மரங்கள், செடிகளைவிட தில்லஞ்செடிகள், 3 மடங்கு அதிகமாகக் காற்றில்  உள்ள கார்பன் வாயுக்களை உருஞ்சும் தன்மை கொண்டவை என்று ஆய்வில்  கண்டறியப்பட்டு இருப்பதாகவும் ஆலமரம் அமைப்பின் நிர்வாகியும், சமூக  சேவகருமான தியாகவல்லி இளையராஜா தெரிவித்தார்.
                உப்பனாற்றில் சிப்காட்  ரசாயன ஆலைக் கழிவுகள் கலப்பதாலும், ஆடு-மாடுகள் மேய்ச்சல், விறகுக்காக  காடுகளை அழித்தல் போன்ற செயல்களால், தில்லஞ் செடிகள் பெருமளவு அழிவைச்  சந்தித்து உள்ளன.இதனால் தில்லஞ்செடிகளை விதை போட்டு வளர்க்கும் முயற்சியில், சில ஆண்டுகளாக ஆலமரம் அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்  விளைவாக தியாகவல்லி, தோணித்துறை பழத்தோட்டம் பகுதிகளில் அதிகளவில்  தில்லஞ்செடிகள் வளர்ந்து இருப்பதாக இளையராஜா தெரிவித்தார். மேலும்  இச்செடிகளை யாரும் அழித்து விடாதவாறு பாதுகாக்கும் முயற்சியிலும் இந்த  அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப் பகுதிகளில்  தற்போது கல் நண்டு, இறால்கள், மீன்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  மேலும் எண்ணிக்கை பெருகிய பிறகு மீன்கள், இறால்கள் மற்றும் கல்நண்டுகளை  பிடிக்க, உப்பனாற்று மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆலமரம்  அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 
            மேலும் தியாகவல்லி, நொச்சிக்காடு  பகுதிகளில் உள்ள உப்பங்கழிகளை அடுத்துள்ள கரைகளில், சுரபுன்னை மரங்களின்  பல்வேறு வகைகளின் விதைகளை நட்டு, பாதுகாக்கும் பணியிலும் இந்த அமைப்பு  ஈடுபட்டு வருகிறது.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக