கடலூர்:
              சிறுதொழில்களை அழிவில் இருந்து காப்பாற்ற தடையின்றி மின்சாரம்  வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் கோரிக்கை  விடுத்துள்ளது.   
கடலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் எஸ்.அசோக்,  செயலாளர் ஜி.ராமலிங்கம், பொருளாளர் டி.தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், வியாழக்கிழமை  கடலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:   
                சிறு மற்றும் குறுந்தொழில்கள் நிறுவனங்களுக்கு மின் தடையில் இருந்து  முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து  நிறைவேற்ற வேண்டும்.   தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வரை தமிழகத்தில் உள்ள என்.எல்.சி.  அனல் மின் நிலையம், கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களின் முழு  உற்பத்தியையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும். பிற மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது.   உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, மாலை 6 முதல் இரவு 10  மணி வரை உள்ள மின் தடையை ரத்து செய்ய வேண்டும். 
                மின் தடை நேரங்களில் டீசல்   ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு  10 சதவீதம் அரசு மானியம் வழங்க வேண்டும். ஜெனரேட்டர் மின்சாரத்துக்கு அதிகம் செலவிட  வேண்டியது இருப்பதால், உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் திறன் குறைந்து  விடுகிறது.   வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறும் வகையில், தென்னக கிரீடுகளின் திறனை  அதிகரிக்க வேண்டும். ஜெனரேட்டர்களுக்கான வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.  மின்சாரத்தை பயன்படுத்தாவிட்டாலும் குறைந்தபட்சக் கட்டணம் விதிக்கப்படுகிறது. 
              இதனால் பல நிறுவனங்கள் குறைந்தபட்சக் கட்டண அளவுக்கு மின்சாரத்தை வீணாகச்  செலவழிக்கின்றன. மின் வெட்டு அமலில் இருக்கும் காலத்தில் குறைந்தபட்சக் கட்டண  விதிப்பை ரத்து செய்து, பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் விதிக்க  வேண்டும்.   மின் பற்றாக்குறையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வெட்டை  அமல்படுத்த வேண்டும். சென்னையில் மின் வெட்டு இல்லை, அல்லது ஒரு மணி நேரம் என்றும்,  மாநிலத்தின் பிறபகுதிகளில் பல மணி நேரம் மின் வெட்டு என்ற இரட்டை நிலை கூடாது  என்றனர்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக