இன்றைய செய்திகள்:

தினம் ஒரு திருக்குறள்

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நுழைவுச் சீட்டுகள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.  

            கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. எழுத்துத் தேர்வுகள் வரும் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது.  கடலூர் மாவட்டத்தில் 26,853 பேர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 12,835 பேர் மாணவர்கள், 14,018 பேர் மாணவிகள். இவர்களுக்கு புகைப்படம் அச்சிடப்பட்ட நுழைவுச் சீட்டுகள் கடலூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டன. மாவட்டத்திóல் 65 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடக்கிறது.  

             புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் வழங்கினார்.  ÷இந்த ஆண்டு முதல்முறையாக மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்படுவதற்குப் பதில், நுழைவுச் சீட்டிலேயே அச்சிடப்பட்டு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநகரம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டில் தேர்வு எழுதும் மாணவரின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருப்பதுடன், அவர்கள் எழுத இருக்கும் தேர்வுகள், குறியீட்டு எண்களுடன் தேதி வாரியாக அச்சிடப்பட்டு உள்ளது. இதனால் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் முறைகேடு, தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

            கடலூர் மாவட்டத்துக்கான பிளஸ்-2 தேர்வு வினாத் தாள்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட, 7 மையங்களில் சேகரித்து போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அன்று, தேர்வு நடத்தும் அலுவலர்கள் வந்து, வினாத்தாள்களைப் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் தெரிவித்தார்.  ÷பிளஸ்-2 தேர்வுகளை முறைகேடுகள் இன்றி நடத்தி முடிக்கவும், தவறிழைக்கும மாணவர்களைக் கண்டுபிடிக்கவும் கடலூர் மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 5 பறக்கும் படைகள் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் இயங்கும். 









இந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்க:

கடலூரில் புயல் மறுவாழ்வு கண்காணிப்பு அலுவலகம் திறப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்ட புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலகு அலுவலகத்தை, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கடலூரில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 

           டிசம்பர் 30-ம் தேதி கடலூர் மாவட்டத்தை புயல் மிகமோசமாகப் புரட்டிப் போட்டது. மக்ளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடலூர் மாவட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது.  சேதமடைந்த வீடுகளுக்கும், வேளாண் பயிர்களுக்கும் தமிழக அரசு, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. எனினும் முந்திரி, தென்னை, பலா உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை உடனே சரிசெய்துவிட முடியாது. எனவே அதற்கு நீண்டகால மறுவாழ்வுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து நிதியும் ஒதுக்கியுள்ளது.  இப்பணிகளை கண்காணிப்பதற்காக புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலகு என்ற புதிய அலுவலகம், வெள்ளக்கிழமை மாலை திறக்கப்பட்டுள்ளது.  இதற்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரராகவராவ், ஆட்சியர் முன்னிலையில் வெள்ளக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார்.  

புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திறந்து வைத்துப் பேசியது:  

          தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்த, புயல் மறுவாழ்வு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை, ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ஏதுவாக கடலூரை தலைமையிடமாகக் கொண்டு திட்ட கண்காணிப்பு அலகு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, 2-3-2012 முதல் செயல்படத் தொடங்கி உள்ளது. இதற்கு கொ.வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.  புயல் பாதித்த விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, விரைந்து செயல்படுத்த வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல் தோட்டக்கலை மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பு ஏற்றுள்ளனர்.  மேலும் விவசாயிகளின் வசதிக்காக, பண்ருட்டியில் ஒரு கள அலுவலகம் தொடங்குவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்த புயல் மறுவாழ்வு சிறப்பு தொகுப்பு திட்டங்களின் பல்வேறு அம்சங்களும், போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்க:

காட்டுமன்னார்கோவிலில் சோழர் காலத்து பழமையும், பெருமையும் வாய்ந்த வீரநாரயணப் பெருமாள் கோயில் பாதுகாப்பு கேள்வி குறி


சிதம்பரம்:

        கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சோழர் காலத்து பழமையும், பெருமையும் வாய்ந்த வீரநாரயணப் பெருமாள் கோயில் பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

            காட்டுமன்னார்கோவில் சன்னதி தெருவில் சோழர் காலத்து பழமை வாய்ந்த வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் முதலாம் பராந்தக சோழன், குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டதாகும். மதங்க மகரிஷி சாபவிமோசனம் பெற்ற கோயிலாகும்.நாலாயிர திவ்யபிரபந்தத்தை தொகுதி நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் ஆகியோர் பூஜித்த கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமியில் தேர், தெப்ப உற்சவம் நடைபெறும். ஆனி மாதத்தில் நாதமுனிகள் அவதார உற்சவம் நடைபெறும். இவையல்லாமல் 12 மாதங்களும் இக்கோயிலில் உற்சவம் நடைபெற்று வருகிறது.

            இக்கோயிலில் பழங்காலத்து 60 ஐம்பொன் சிலைகள், நகைகள் உள்ளன. இவைகள் விலைமதிக்க முடியாதவை எனக் கூறப்படுகிறது. 2008, 2009 ஆண்டுகளில் இக்கோயிலில் உள்ள வெள்ளி கிரீடங்கள், பாத்திரங்கள் திருடு போனது. 2009-ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கோயிலுக்கு இரவுக் காவலாளிகளை நியமிக்க வேண்டும் கோயில் முன்னாள் அறங்காவலர் எம்.தோத்தாத்திரி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மற்றும் கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு பல முறை மனுக்கள் கொடுத்துள்ளார்.பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மாவட்ட காவல்துறை பரிந்துரையின் பேரில் முன்னாள் ராணுவத்தினரை இரவு காவலாளியாக நியமிப்பது வழக்கம். 

          அண்மைக்காலமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அறநிலையத் துறை, கடலூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் ஆகியன இக்கோயிலுக்கு இரவுக் காவலாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளன
















இந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்க:

தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம் மாணவர் எம்.குருவிஷ்ணு

சிதம்பரம்:

           தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம் பள்ளி மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  

       தென்கொரியாவில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் 10 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.  இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான சிதம்பரம் மணலூர் எடிசன் ஜி.அகோரம் மெமோரியல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் எம்.குருவிஷ்ணு (10) பங்கேற்று உரையாற்றினார்.  

           புவிவெப்பமடைதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து கருத்தரங்கில் அவர் பேசினார். இக்கருத்தரங்கை சாம்சங் இன்ஜினியரிங், டுன்சா எக்கோ ஜெனரேஷன், கொரியா கிரீன் பௌண்டேஷன், கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் என்வயர்மென்டல் ஸ்டேடிஸ், சியோல் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின.  இம்மாநாட்டில் உலகிலுள்ள மற்ற நாடுகளிலிருந்து 400 பேரும், கொரியாவில் இருந்து 350 மாணவர்களும் பங்கேற்றனர். உலகளவில் 7 நாடுகளில் இருந்து 5 மாணவர்கள் அவர்களது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகள், கட்டுரைப்போட்டி மற்றும் டுன்சா எக்கோ ஜெனரேஷன் வளைதளத்தில் எழுதியதன் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

      டுன்சா எக்கோ ஜெனரேஷனின் 7-வது ஆசிய பசுபிக் இளம் தூதுவரான குருவிஷ்ணு தேர்வு செய்யப்பட்டவர்களில் வயதில் மிகவும் சிறியவராவார்.  உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றித் திரும்பிய மாணவரையும், அவரது பெற்றோர்கள் கே.மதிவாணன், ஏ.தரணி ஆகியோரையும் பள்ளித் தாளாளர் கீதாஅகோரம், முதல்வர் கல்யாணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
















இந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்க:

"தானே புயலின் அறுவடை" குறும்பட சி.டி. மத்திய அமைச்சரிடம் அளித்தார் இயக்குநர் தங்கர்பச்சான்


புயல் தொடர்பான குறும்பட சி.டி.யை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் வியாழக்கிழமை வழங்குகிறார் திரைப்பட இயக்குநர்  தங்கர்பச்சான்
      
           தானே  புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வி.நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோரை தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.  புயல் பாதித்த இடங்களில் மறுவாழ்வுத் திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எந்தப்பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.  கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய "தானே' புயல் பாதிப்பு குறித்த 35 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை தங்கர்பச்சான் தயாரித்து இயக்கி உள்ளார்.
 
          "தானே புயலின் அறுவடை' என்று அந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குறும்பட சி.டி-யை (குறுந்தகடு) தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரிடம் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் அளித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்தார். "தானே' புயல் பாதிப்பு பற்றி ஜெயந்தி நடராஜனிடம் விளக்கிய அவர் தமது குறும்பட சி.டி-யையும் அளித்தார். 
 
 பின்னர் தங்கர்பச்சான் அளித்த பேட்டி:  
 
            "தானே' புயலால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பலாப்பழம், தென்னை, புளியமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை மரங்கள் மீண்டும் வளர குறைந்தது ஆறு முதல் எட்டு வருடங்கள் ஆகும். இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களின் வருமானத்தை நம்பி அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் நடைபெற திட்டமிட்டிருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்த குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் இல்லை. அதனால் புயலால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளின் பள்ளிக்கூட கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.  தற்போது புயல் பாதித்த இடங்களில் நிலத்தடி நீர் 600 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. பிரச்னையின் தீவிரம் கருதி, கடலூர்-பரங்கிப்பேட்டை இடையே புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது.  மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
 
            அப்பணியில் பெண்கள் ஈடுபட்டு வருதால் காலதாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் புயல் பாதிப்பின் தாக்கம் தெரியவரும். மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வுத் திட்டங்களை அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வருகிறேன். அவர்களும் கனிவாக கேட்டு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியது நம்பிக்கை அளிக்கிறது என்று தங்கர்பச்சான் கூறினார்.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்க:

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 3 வரை ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கலாம்

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளைப் புதுப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம், மார்ச் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  தெரிவித்துள்ளார். 

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

          தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை, 1-1-2012 முதல் 31-12-2012 வரை, மேலும் ஓராண்டிற்கு நீடித்து அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. 30-12-2011 அன்று புயல் வீசிய காரணத்தால் கடலூர் மாவட்டத்தில், பிப்ரவரி முதல் தேதியில் இருந்து, குடும்ப அட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையாத காரணத்தால், 10-3-2012 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. 

            எனவே இதுவரை குடும்ப அட்டைகளை புதுப்பிக்காதவர்கள், 10-3-2012-க்குள் தங்களது குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 10-3-2012-க்குள் புதுப்பிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட மாட்டாது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.








இந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்க:

Search

பிரபலமான இடுகைகள்