கடலூர்:
கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் இந்த ரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில்பாதை திட்டப் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், திருப்பாப்புலியூர், துறைமுகம் நகர் சந்திப்பு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், ரயில் நிலையத்தை சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி இருக்கிறது.
திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின் தண்டவாளங்களுக்கு மேற்குப் பகுதியில் பயணிகள் முன்பதிவு மையமும், கிழக்குப் பகுதியில் டிக்கெட் கௌன்டர்களும் செயல்படுகிறது. டிக்கெட் கௌண்டர் கட்டடத்தில் பெரும்பாலும் விளக்குகள் எரிகின்றன. ஆனால் கணினி முன் பதிவு மையம், சரக்கு அலுவலகம் மற்றும் மாடியில் நிரந்தர ஓய்வறைகள் உள்ள மேற்குப் பகுதி கட்டடத்தில், மாலை 5 மணிக்கு மேல் மின் விளக்குகள் எரிவதில்லை. திருப்பாப்புலியூர்- விழுப்புரம் மார்க்கத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் வரை பிளாட்பாரம் அரை வட்ட வடிவில் நீண்டு கிடக்கிறது.
ஆனால் இந்த அரை கி.மீ. தூரம் உள்ள இந்த பிளாட்பாரத்தில், இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை. மின் விளக்குகளுக்கான ஃபிட்டிங்குகளே பொருத்தப்படவில்லை. இதை அடுத்துள்ள போடிச்செட்டித் தெரு, திரௌபதி அம்மன் கோயில் அருகே நகராட்சி ஹைமாஸ் விளக்கு உள்ளது. அதில் இருந்து கிடைக்கும் வெளிச்சமே பிளாட்பாரத்துக்குக் போதுமானது, பிளாட்பாரத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை என்று, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து விட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பஸ் நிலையம், பெரிய அங்காடி ஆகியவற்றின் மத்தியில், திருப்பாப்புலியூர் பஸ் நிலையம் அமைந்து இருக்கிறது. இதனால் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகள் யாரையாவது கண்டுபிடித்துத் துரத்தினால், அவர்கள் ஓடிவந்து எளிதில் பதுங்கிக் கொள்ள ஏதுவாக, இருண்டு கிடக்கும் ரயில் நிலையம் வசதியாக இருப்பதாக போலீஸôர் தெரிவிக்கிறார்கள்.
மேலும் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட்டில் இருந்து சிதம்பரம் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்களின் ஒருபுறம் பஸ் நிலையமும், மறுபுறம் மார்க்கெட்டும் இருப்பதால் இரவு, பகல் எந்த நேரமும், மக்கள் அடிக்கடி தண்டவாளத்தை நடந்து சென்று கடக்கிறார்கள். கடந்த 4 மாதங்களில் மட்டும், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி இறந்து உள்ளனர். கணினி முன்பதிவு மையத்துக்கு அருகில் உள்ள 14 ரயில்வே குடியிருப்புகளில் 9-ல் மட்டும் ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கிறார்கள். மற்றவை சேதம் அடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது.
இப்பகுதியும் அதை ஒட்டியுள்ள இருண்டு கிடக்கும் பிளாட்பாரமும், இரவு நேரங்களில் மது அருந்துவாருக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும் மிகவும் வசதியான பாதுகாப்பான இடமாக உள்ளது.
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது விளக்குகளுக்கு, தனித்தனி ஸ்விட்சுகள் இருந்தன. தற்போது திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் முழுவதும் 3 ஸ்விட்ச்களின் கட்டுப்பாட்டில் அடங்கி விடுகிறது. இரவு 8-30 மணிக்கு பயணிகள் ரயில் கடந்து சென்றதும், இரவு 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. அதிலும் 2 ரயில்கள் மட்டுமே இங்கு நின்று போகின்றன. எனவே இரவு 12 முதல் 3 மணி வரை பிளாட்பாரத்தில் விளக்குள் எரிய விடப்படுகிறது. மற்ற நேரங்களில் சிக்கன நடவடிக்கை கருதி விளக்குகள் எரிவதில்லை' என்றார்.
இதுபற்றி தென் ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கூறுகையில்,
"திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் விளக்குகள் எரியாமல் இருப்பது, மின் விளக்குகள் பொருத்தப்படாத பிளாட்பாரம் மற்றும் இரவு நேரங்களில் பிளாட்பாரம் இருண்டுகிடப்பதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பது ஆகியவை குறித்து ரயில்வே பொது மேலாளருக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறேன். நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார்.