உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

சிதம்பரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
சிதம்பரம்:

              சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் பிச்சாவரம் வனப்பகுதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அதிகரித்துள்ளது.

                கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளும், ஆயிரக்கணக்கான உள்நாட்டுப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு சென்று, அங்கு படகு சவாரி மூலம் மாங்குரோவ் காடுகளை கண்டு ரசிக்கின்றனர். 

               ""கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நடராஜர் கோயிலை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். நிகழாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி ஜி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

            மேலும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பஸ்களில் செல்ல விரும்புவோரும், ஊட்டி, கொடைக்கானல், முதுமலை, ஏற்காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் தங்கம் விரும்புவோரும் சிதம்பரத்தில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 

       04144 238739

செல்போன்: 

          96594 96446.

Read more »

கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பஸ்கள்


கடலூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் ஓரமாக உள்ள சேவைச் சாலை ஒருவழிப் பாதையில், விதிகளுக்கு மாறாக இரு பஸ்கள் எதிரும் புதிருமாக வந்ததால், மோதி கொள்ளும் நிலை
 
கடலூர்:

             கடலூரில் போக்குவரத்து விதிகளை தனியார் பஸ்கள் தொடர்ந்து மீறுவதால், பொதுமக்கள், பஸ் பயணிகள் தினமும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

                கடலூர் மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேல் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  அரசு பஸ்கள் பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட நீண்ட தூரப் பகுதிகளுக்கு இயக்கப் படுகின்றன. மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பஸ்கள் மற்றும் புதுவை- கடலூர் இடையே இயக்கப்படுபவைகளில், தனியார் பஸ்கள்தான் அதிகம். இதனால் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்தில் பெரும்பாலான நேரங்களில் காணப்படுவது தனியார் பஸ்கள்தான். இந்த தனியார் பஸ்கள் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்துக்குள் அவற்றுக்கான இடங்களில் முறையாக நிறுத்துவது இல்லை.

                   இதனால் எந்த ஊருக்குச் செல்லும் பஸ், எந்த இடத்தில் நிற்கிறது என்று கண்டுபிடிப்பதே பயணிகளுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது. தனியார் பஸ்கள் ஒன்றுக்கொன்று, போட்டி போட்டுக் கொள்வதும், பஸ் புறப்படும் நேரங்கள் தொடர்பாக தினமும் மோதிக் கொள்வதும் பயணிகளை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. பயணிகள் பலர் இதனால் விபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. இதனால் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில், பஸ்களை அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தவதற்காகவே, ஒலிபெருக்கி மூலம் ஒழுங்குப்படுத்தும் பணியை, 24 மணி நேரமும் போலீசார் மேற்கொள்ள நேர்ந்துள்ளது.

               பஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் ஒழுங்கீனமாக செயல்படும் நிலை, பிற நகரங்களைவிட, கடலூரில் மிகவும் மோசம் என்று போலீசார்  தெரிவிக்கிறார்கள். டைமிங் பிரச்னைகளால் ஏற்பட்ட மோதல்களில் பஸ் ஊழியர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர். கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள், ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலைகள் வழியாக வெளியேறுகின்றன. இரு சாலைகளில் ஒன்று வெளியேறுவதற்கும் மற்றொன்று உள்ளே வருவதற்குமாக உள்ளது.

                    இதில்கூட தனியார் பஸ்கள் விதிகளைக் கடைபிடிப்பது இல்லை. ஒரு பஸ்ûஸ முந்திச் சென்று, கூடுதல் பயணிகளை ஏற்றி கலெக்ஷனை பார்க்க வேண்டும் என்ற வேகத்தில், போக்குவரத்து விதிகளை மீறி, இச்சாலைகளில் புகுந்து விடுகின்றன. இதனால் குறுகலான சர்வீஸ் சாலைகளில் எதிரும் புதிருமாக பஸ்கள் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அங்கேயே இரு பஸ்களின் ஊழியர்களும் பஸ்களை விட்டு இறங்கி நின்று, சண்டை போட்டுக் கொள்ளும் நிலை பயணிகளை வெகுவாகப் பாதிக்கிறது. ஏதாவது ஒரு பஸ் பின்னோக்கி சென்றால்தான் பிரச்னை தீரும் என்ற நிலை, அன்றாட நிகழ்வாகி விட்டது. 

                தனியார் பஸ்களின் ஒழுங்கீனங்களை போலீசார்  கண்டு கொள்வதில்லை. மேலும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டு இருக்கும், காற்று ஒலிப்பான்களால், எழுப்பப்படும் ஒலிகள் கர்ணகொடூரமாக, காதுகளை கிழிப்பதாக உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை, போக்குவரதத்து விழிப்புணர்வு வாரத்தின்போது மட்டும் சம்பிரதாயத்துக்காக, காற்று ஒலிப்பான்களை அகற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. காற்று ஒலிப்பான்கள் விதிகளின்படி நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். அவற்றைப் பொருத்தும் பஸ்களுக்கு, கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கடலூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கன மழை பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு : அடித்துச் செல்லப்படும் மணல் குன்றுகள்

பரவனாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், கடலூரை அடுத்த திருச்சோபுரம் பகுதியில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் புகழ்பெற்ற மணல் குன்றுகள்.
கடலூர்:

             பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூர் அருகே புகழ் வாய்ந்த மணல் குன்றுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன.

               வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. வியாழக்கிழமை பகல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. கன மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி, உபரிநீர் பெருமளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. திட்டக்குடி வெலிங்டன் ஏரி நீர்மட்டம் வியாழக்கிழமை 21.5 அடியாக இருந்தது. மொத்த உயரம் 29.7 அடி. ஏரிக்கு 1060 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

                      கொள்ளிடம் கீழணை மொத்த உயரம் 9 அடி. வியாழக்கிழமை அணை நிரம்பி விட்டது. அணைக்கு 19,929 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்த, 23,270 கனஅடி நீர், கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு கடலுக்குச் செல்கிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 5,291 கனஅடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, கடலுக்குச் சென்று கொண்டு இருக்கிறது. வாலாஜா ஏரியில் இருந்து, 1,520 கனஅடி நீரும், பெருமாள் ஏரியில் இருந்து 2,215 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

               இந்த உபரி நீர் முழுவதும் பரவானாற்றில் திறந்து விடப்பட்டு, கடலுக்குச் சென்று கொண்டு இருக்கிறது. பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூரை அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள, மணல் குன்றுகள் பெருமளவு அடித்துச் செல்லப்படுகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தால் உருவான இந்த மணல் குன்றுகளில் சில, 100 அடி உயரம் கொண்டவை. பல திரைப் படங்கள் இங்கு எடுக்கப்பட்டு உள்ளன.

                    இயற்கை எழில் கொஞ்சும் இந்த மணல் குன்றுகள், முந்திரிக் காடுகள் அழிக்கப்பட்டதாலும், பரவனாறு வெள்ளப் பெருக்காலும் தொடர்ந்து அழிவைச் சந்தித்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மணல் குன்றுகள் பெரிதும் சேதம் அடைந்து வருகின்றன. கன மழை காரணமாகவும் பரவனாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்காலும் தீர்த்தனகரி, தாணூர் உள்ளிட்ட பெருமாள் ஏரி பசனப் பகுதிகளில், 100 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நொச்சிக்காடு, நடுத்திட்டு பகுதிகளில் 300 ஏக்கரில் வெட்டி வேர் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் 100 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

Read more »

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் இருகரையும் தொட்டு செல்லும் நீர்.
 
சிதம்பரம்:

                கல்லணையிலிருந்து கீழணைக்கு அதிகநீர் வருவதால் கீழணையிலிருந்து வியாழக்கிழமை 24 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது.

              இதனால் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருகரையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மேலும் கல்லணையிலிருந்து வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு 34 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நீர் வெள்ளிக்கிழமை கீழணையை வந்து சேரும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

              கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 45.5 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு கூடுதலாக வரும் நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக விவசாயிகளுக்கு பாதிப்பின்றி சிறிது சிறிதாக திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.சிதம்பரம் பகுதியில் பலத்த மழைசிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை முதல் கருத்த மேகமூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்தது. 

             இதனால் குண்டும், குழியுமாக உள்ள சிதம்பரம் நகர சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு நகர்களில் நீர் வடிய வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

மழையளவு விவரம்: 

 சிதம்பரம்-10 மி.மீ, 
புவனகிரி-15 மி.மீ, 
சேத்தியாத்தோப்பு- 11.5 மி.மீ, 
பரங்கிப்பேட்டை- 16 மி.மீ, 
அண்ணாமலைநகர்- 3.6 மி.மீ. 

சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை விடப்பப்பட்டது.

Read more »

தமிழகத்தில் 2011 பிப்ரவரி 9-ல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

              தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 9-ல் தொடங்கி 28 வரை நடைபெறுகிறது.
 
               இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2011-ல் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.இதற்கான தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குகிறது.
 
என்னென்ன விவரங்கள்: 
 
                முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் குறித்த விவரங்களை சேகரிக்கவும், தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்காகவும் கடந்த ஜூன் 1 தொடங்கி ஜூலை 15 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் வீடுகள், அதில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்கிற விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பே முழுமையான கணக்கெடுப்பு என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியது:
 
                  ந்தக் கணக்கெடுப்பில் தனிநபர்களின் விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்படும். அதாவது, குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? படிப்பு, தொழில், வருமானம், திருமணம் ஆனவர்கள் எத்தனை பேர்? குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
 
யார் கணக்கெடுப்பை மேற்கொள்வர்? 
 
              மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக 3 நாள்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர்கள் பணி செய்ததாகவே கருதப்படும் என்று பொதுத் துறை செயலாளர் கருத்தையா பாண்டியன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை அல்லது பிற்பகல் வேளை என ஏதாவது ஒரு வேளை மட்டுமே கணக்கெடுப்புப் பணிக்கு அனுமதிக்கப்படும். மீதியுள்ள அரை நாள் பணிக்குச் செல்ல வேண்டும். கணக்கெடுப்பு முடிந்ததும் விடுபட்ட இடங்கள் குறித்த பணிகள் மார்ச் 1-ம் தேதி 5-ம் தேதி வரை நடத்தப்படும். 
 
                இந்த ஆறு நாட்களிலும் கணக்கெடுப்புப் பணி முழு நாளாக மேற்கொள்ளப்படும் என பொதுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்
 
கணக்கெடுப்பு அதிகாரிகள் யார்? 
 
                மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளின் ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், இதர மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதன்மை அதிகாரிகளாகவும், மாவட்ட கூடுதல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை 
 
                பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில் ஜாதி குறித்த விவரங்கள் கேட்கப்பட மாட்டாது என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூனில் நடைபெற்ற கணக்கெடுப்பில் வீட்டுப் பட்டியல் அதாவது வீட்டில் உள்ள விவரங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள தனிநபர்களின் அனைத்து விவரங்களும் எடுக்கப்பட உள்ளன. 
 
                  ஆனால், அதில் ஜாதி குறித்த தகவல் கேட்கப்பட மாட்டாது.தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து கேட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read more »

ஊகவணிகத்தில் மக்காச் சோளம்: கடலூர் மாவட்ட விவசாயிகள் புதிய முயற்சி

திட்டக்குடி வட்டம் கீழக்கல்பூண்டி கிராமத்தில் பூக்கத் தொடங்கி இருக்கும் மக்காச்சோளம். (வலது படம்) கீழக்கல்பூண்டி கிராமத்தில் அண்மையில் நடந்த விளக்கக் கூட்டம்
கடலூர்:

                  ஊகவணிகத்தின் மூலம், மக்காச்சோளத்துக்கு நியாயமான விலை கிடைக்க கடலூர் மாவட்ட விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

                  தமிழ்நாட்டில் 2 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் மக்காச்சோளம், தமிழ்நாட்டின் ஆண்டுத் தேவையில் 50 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. எனினும் தமிழகத்தில் விளையும் மக்காச்சோளத்துக்கு, நியாயமான விலை கிடைப்பது இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.

                    கடலூர் மாவட்டம் மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு 14,300 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு உள்ளது. மக்காச்சோள விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு, அதிகபட்சவிலையாக குவிண்டாலுக்கு ரூ.800 மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள். மக்காச்சோள வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில், சிண்டிகேட் கூட்டணி அமைத்துக் கொண்டு, மக்காச்சோள விலையை குறைத்துவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

                இந்நிலையைப் போக்க ஊகவணிகம் மூலம் மக்காச்சோளத்தை விற்பனை செய்ய கடலூர் மாவட்ட விவசாயிகள் புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளனர். தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த முறையைப் பின்பற்றியதால், கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை, முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மக்காச்சோள விவசாயிகள் இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக, கடலூர் மாவட்ட விவசாயிகள் கூறுகிறார்கள்.

              ஊகவணிகத்தை மேற்கொள்ளும் என்.சி.டி.இ.எக்ஸ். ​(Nation​al​ Commodity​ Deriv​ative Ex​ch​ange​ LTD)​  என்ற நிறுவனத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டதன் விளைவாக, அந்த நிறுவனத்தினர் கடந்த திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இக்கூட்டம் திட்டக்குடி வட்டம் கீழக்கல்பூண்டி கிராமத்தில் நடந்தது. ஊகவணிக நிறுவனத்தின் தலைமை அமைப்பாளர் உமா மதன், மக்காச்சோளப் பிரிவு தென்னிந்திய மேலாளர் ரமேஷ் சந்த், விருத்தாசலம் வேளாண் விற்பனை துறை உதவி அலுவலர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கங்களை அளித்தனர்.

இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                  "தமிழகத்தில் விளைச்சலைவிட மக்காச்சோளத் தேவை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் ரூ.800தான் கிடைத்தது. மஞ்சள் விவசாயிகளிடமும் வியாபாரிகள் இதே முறையைப் பின்பற்றியதால், மஞ்சள் விவசாயிகள் நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஊகவணிகத்தின் மூலம், மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது.

              அதன் அடிப்படையில் மக்காச்சோளத்திலும் ஊகவணிகத்தின் மூலம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, முயற்சி செய்கிறோம். இந்த முறையில் மக்காச்சோளத்தை விற்பனை செய்ய, விவசாயிகளுக்கு சேமிப்புக் கிடங்கு வசதிகள் தேவைப்படும். இந்த ஆண்டு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்துவோம். எங்கள் முயற்சி வெற்றி பெற்றால் வரும் ஆண்டுகளில் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசை வற்புறுத்துவோம்' என்றார். 

                   நிகழ்ச்சியில், மாவட்ட அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன், உழவர் மன்றங்களின் நிர்வாகிகள் வேணுகோபால், ஏ.கே.ரவிச்சந்திரன், எல்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

தமிழகத்துக்கு வந்த சிங்கப்பூர் மாணவர்கள்

சிதம்பரம்:

                 சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவாக தமிழகம் வந்துள்ளனர்.சுற்றுலாக் குழுவினர் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் முறை குறித்து தெரிந்து கொண்டனர்.

                 சிங்கப்பூர் நாட்டின் பெருமையை பற்றியும், அதன் அழகையும், தூய்மையையும் பற்றி நாம் பெருமையாக பேசுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களுடன் தமிழகத்துக்கு கல்விச்சுற்றுலா வந்துள்ளனர். சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூச்சூன் பள்ளி மாணவ, மாணவியர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் பெருமாள், டேவிட், சகாயராஜ் ஆகியோர் இந்தியாவுக்கு ஒருவார கல்விச் சுற்றுலாவாக வந்துள்ளனர்.

                   இதன் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு வந்த அம்மாணவர்கள் சிதம்பரத்தை அடுத்த தண்டேஸ்வரநல்லூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனர். அவர்களை பள்ளித் தாளாளர் அருளானந்தம், தலைமைஆசிரியை ஜோஸ்பின்மேரி ஆகியோர் வரவேற்றனர்.  மாணவர்களுக்கு தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.மேலும் தமிழகத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் உள்ளிட்ட கலாசாரங்கள் குறித்து சிங்கப்பூர் மாணவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் அச்சுற்றுலா குழுவினர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

Read more »

கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த சேர்மன் மனு

கானல் நீராகிப் போன கனவுகள் 

கடலூர் : 

             கடலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என சேர்மன் தங்கராசு கூறியுள்ளார். 

இதுகுறித்து நான்காவது நிதிக்குழுத் தலைவரிடம் கடலூர் நகராட்சி சேர்மன் தங்கராசு அளித்துள்ள மனு: 

                    சிறப்பு நிலை நகராட்சியான கடலூர் நகராட்சியை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து, இந்நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம், காரைக்காடு, குடிகாடு, பச்சையாங்குப்பம், சான்றோர் பாளையம், கண்ணாரப்பேட்டை, சுத்துக்குளம், கரையேறவிட்டகுப்பம், அரிசி பெரியாங்குப்பம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, கோண்டூர், கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி ஆகிய பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும்.

                   கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் துணை பஸ் நிலையம் அமைக்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகிய பகுதிகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கரைப்பகுதியை பலப்படுத்த வேண்டும். கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தேவனாம்பட்டினம் கடற்கரையை சுற்றுலா தளமாக அங்கீரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 


Read more »

கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் : இந்திய ஜனநாயக கட்சி

விருத்தாசலம் : 

              கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வலியுறுத்தி பேசினார். 

                  விருத்தாசலத்தில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கொடியேற்று விழா நடந்தது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை தலைவர் தர்மலிங்கம், நகர தலைவர் பார்த்தசாரதி, செல்வராயர், ஹரிதாஸ்பாபு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சவுந்தர்ராஜன் வரவேற்றார். விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, பாலக்கரை, பெரியார்நகர் உள்ளிட்ட இடங்களில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கொடியேற்றி பேசினார். முன்னதாக தொகுதி வேட்பா ளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிறுவனர் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர்  கூறியது: 

                இந்திய ஜனநாயக கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும். விருத்தாசலம் உட்பட 12 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 75 சதவிகிதம் வேட்பாளர்களை அறிவித்து விடுவோம்.

                  46 தொகுதியில் நாங்கள் வலுவாக உள்ளோம். 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. தமிழக கிராமங்களில் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கள் இல்லை. இதில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. நான் வள் ளளாக இருக்க நீங்கள் வறுமையில் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய ஆளும் அரசின் நிலைபாடு. இலவசங்களை வழங்கி மக்களை வறுமையில் தள்ளுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை முற்றிலும் ஒழிப்போம்.

                       மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு தரமில்லாத நிலக்கரியை வாங்குவதும், முறையாக பராமரிக்காமலிருப்பதும் தான் காரணம். தன் சுய லாபத்திற்காகவே தரமில்லாத நிலக்கரியை வாங்குகின்றனர். தமிழகம் விவசாயத்தில் முன்னேற பொறியியல் கல்லூரிகளுக்கு நிகராக விவசாய கல்லூரிகளை அமைக்க வேண்டும். விருத்தாசலத்தை பொருத்தவரை பொறியியல் கல்லூரி, பெண்கள் கல்லூரி இல்லை. எங்கள் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றால் இந்த கல்லூரிகள் அமைய நடவடிக்கை எடுப்போம்.  விருத்தாசலத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டமாக பிரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

Read more »

Rs. 16.15 crore for executing road works in Cuddalore district

CUDDALORE: 

            The State government has allotted a sum of Rs. 16.15 crore under special roads scheme to Cuddalore district.

          The funds will be utilised for improving existing roads and laying cement roads in municipalities such as Cuddalore, Panruti, Vriddhachalam, Nellikuppam and Chidambaram, according to Collector P. Seetharaman.

            He told presspersons here that all road works would be completed by March 31 next. The government had earmarked a total of Rs. 1,000 crore for the construction of tar and cement roads in the municipalities and town panchayats in the entire State, which included Rs. 16.15 crore for Cuddalore district.

             As regards Cuddalore town, a sum of Rs. 10.38 crore had been sanctioned under the special scheme for construction of 40 roads and another Rs. 10.32 crore by the Highways Department for 75 roads. Cuddalore Municipal Chairman T. Thangarasu issued work orders on Wednesday for laying cement roads to a distance of 17.65 km at a cost of Rs. 8 crore and tar roads to a distance of 5.94 km at a cost of Rs. 2.11 crore. As the northeast monsoon was active over Cuddalore, the road works would begin in the third week of December.

            In Panruti municipality, 7.81 km-long tar roads would be laid at a cost of Rs. 1.33 crore and 7.81 km-long cement roads laid at a cost of Rs. 1.39 crore. In Vriddhachalam municipality, work on 13 cement roads would be taken up at a cost of Rs. 80.10 lakh and work on 28 tar roads at a cost of Rs. 1.5 crore. In Nellikuppam municipality, 14 tar roads would be laid at a cost of Rs. 1.02 crore and in Chidambaram municipality road works would be undertaken on Western Car Street at a cost of Rs. 65 lakh.

               Another sum of Rs. 2.5 crore had been allotted for improving Chidambaram-Sivapuri-Kavarapattu Street, Venugopalapuram Street and the traffic roundabout in Chidambaram town, Mr. Seetharaman said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior