
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் மரம் நடுகிறார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர் (வலம)
கடலூர்:
கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் சனிக்கிழமை உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாப்பட்டது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிறுவனத்தின் சார்பில் மரங்கள் நடுவதைப் பாராட்டிய அவர், மேலும் அதிக அளவில் மரங்களை நடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சுற்றுச்சூழலை பேணுவோம், பூமியைக் காப்போம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
தொழிற்சாலை முதன்மை நிர்வாக அலுவலர் (இயக்கம்) என்.எஸ்.மோகன் நிகழ்ச்சியில் பேசுகையில்,
கெம்ப்ளாஸ்ட் சன்மார் குழுமத்தின் அனைத்து தொழிற்சாலைகளும், ஒருசொட்டுக் கழிவுநீரைக் கூட வெளியேற்றாமல் மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தொழிற்சாலை வளாகத்தில் இந்த ஆண்டு 1000 மரக்கன்றுகள் நடுவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மோகன் குறிப்பிட்டார். மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவிப்பொறியாளர் ரொனால்டு டெரி பிண்டோ, சுற்றுச்சூழல் விஞ்ஞானி தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.