விருத்தாசலம் :
மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் முறை மின் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகம் மின் நுகர்வோர்களின் வசதிக்காக மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மின் நுகர்வோர்கள் விருப்பப்பட்டால் மின் கட்டண தொகையை முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும் வைப்பு தொகை மின் நுகர்வோரது மின் கட்டண அட்டையில் குறித்து தரப்படும். மேலும் அந்த வைப்புத் தொகைக்கு ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வீதத்தில் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு வைப்புத் தொகையுடன் நுகர்வோரது கணக்கில் வைத்து கொள்ளப்படும்.
மின் நுகர்வோர் இரு மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும் மின் கட்டணத் தொகை அந்த வைப்பு தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இந்த திட்டத்தினால் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த அலுவலகத்தை நாடி வரும் சிரமத்தையும் கால விரயத்தையும் தவிர்க்கலாம். எனவே அனைவரும் இந்த திட்டத்தினை பயன்படுத்திகொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செயற் பொறியாளர் சிவராஜ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.