
கனமழை காரணமாக புதை குழிகளாக மாறிப்போன, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் பாரதி சாலை (தேசிய நெடுஞ்சாலை).
கடலூர்,:
கடலூரில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது.
சட்டப் பேரவை, உள்ளாட்சி என இரு தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. பல அரசியல் கோட்டைகளை உடைத்தெரிந்து கடலூர் மக்கள் இயல்பாக வாக்களித்து விட்டர்கள். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அனுபவித்து வரும் துன்பங்களில் இருந்து, கடலூர் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்ப வில்லை. இது இப்படித்தான் நடக்கும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம் என்ற அதிகார வர்க்கத்தினரின் மனக்கோட்டையைத் தான் மக்களால் இன்னமும் உடைக்க முயவில்லை.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், கடந்த 25-ம் தேதி முதல் கடலூரில் 3 நாள்கள் கனமழை பெய்தது. இந்த 3 நாள் மழையையே கடலூர் மக்களால் தாங்க முடியவில்லை. இயல்பு வாழ்க்கை பெரிதும் பதிக்கப்பட்டது.இதற்கு காரணம் நகரச் சாலைகள். கடலூர் நகரின் பிரதானச் சாலைகள் அனைத்தும், பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு, முறையாக மூடப்படாததால், மழை பெய்ததும் நிலைமை மிக மோசமாகி விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சாலைகள் சிதைக்கப்பட்டு, வடகிழக்குப் பருவமழை காலத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை கடலூர் மக்கள் அனுபவிப்பது இது 4-வது ஆண்டாகும்.
அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டு விடும் என்ற அதிகாரிகளின் அறிவிப்பு, காற்றில் கரைந்து போயிற்று. கடலூர் முதுநகர் மணிக்கூண்டு முதல் புதுநகர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சுமார் 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கற்ற நிலைக்கு மாறி இருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூறியது
தற்காலிக சீரமைப்புக்கூட மழைக்காலம் முடிந்த பிறகுதான் என்று கூறிவிட்டனர். அப்படியென்றால், 2012 ஜனவரி மாதம் வரை கடலூர் நகரின் துயரம் நீடிக்குமோ, அதை தாங்கள் அனுபவித்துத்தான் தீர வேண்டுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.