கடலூர்:
தமிழக அரசின் நீர் மேலாண்மைக் குறைபாடுகள் காரணமாக, காவிரி டெல்டா பாசன விவசாயம் ஆண்டுதோறும் சூதாட்டமாக மாறியிருக்கிறது. அதாவது ஒன்று தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அல்லது அதிகப்படியான மழை நீரால் பயிர்கள் சேதமடையும்.
வெள்ளப் பாதிப்பு காலங்களில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ரூ. 200 கோடியைத் தாண்டும்.தமிழகத்தில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை நம்பி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனப் பகுதிகளாகும். டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்தான், தமிழகத்தின் அரிசி விலையை நிர்ணயிக்கிறது.கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர் கதையாகி விட்டது.
2005ல் ரூ. 44 கோடியும், 2008-ல் ரூ. 36 கோடியும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல்கட்டமாக ரூ. 23 கோடி வழங்கப்பட்டு உள்ளது.முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டு இழப்பீடு அதிகமாகும் என்கிறார்கள் அதிகாரிகள். இந்த இழப்பீட்டுத் தொகைகள் விவசாயிகளின் இழப்புக்கு, எந்த வகையிலும் ஈடாக முடியாது. நெல்லுக்கு இழப்பீடு 2005 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.இவ்வாண்டு ரூ. 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
டெல்டா நிலங்களில் ஒரு ஏக்கருக்கு சாகுபடிச் செலவு ரூ. 14 ஆயிரம். மகசூல் மதிப்பு, பயிர் காப்பீட்டு நிறுவனக் கணக்குப்படி ரூ. 24 ஆயிரம். ஒரு டி.எம்.சி. நீரில் 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் விவசாயிகள். எனவே காவிரி டெல்டா பாசன நிலங்களுக்கு, சம்பா சாகுபடிக்கு 170 டி.எம்.சி. தண்ணீர் தேவை. மேட்டூர் அணையின் கொள்ளளவு 94 டி.எம்.சி. எனவே அணை இருமுறை நிரம்பினால், 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா சாகுபடியை, நிறைவாகச் செய்யலாம்.
அரசு முறையாக நீர் மேலாண்மை செய்தால், இதை எளிதாக நிறைவேற்ற முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.மேட்டூர் அணைக்கு இயல்பாகக் கிடைக்கும் நீர், நீதிமன்ற உத்தரவுகளின்படி கர்நாடகத்திடம் பெறவேண்டிய நீர், ஆகியவற்றைக் கணக்கிட்டு, உரிய காலத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, கடைமடைப் பகுதிவரை குறித்த காலத்தில் நீர் கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட நீர் மேலாண்மையை மேற்கொள்வதன் மூலம், 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களையும் பொன் விளையும் பூமியாக மாற்ற முடியும் என்கிறார்கள் முன்னோடி விவசாயிகள்.
கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் 70 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் அழிந்து விட்டது. வீராணத்தின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி பாசனப் பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கி சாகுபடி செய்ய முடியாத நிலை அல்லது கதிர் முற்றும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறது. கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் வடிகால் வசதிகளை மேம்படுத்தாததும், வீராணம் ஏரியில் முறையாக நீர் மேலாண்மை செய்யாததுமே, கடலூர் மாவட்ட பயிர் பாதிப்புகளுக்குக் காரணம். இவ்வாண்டு கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் தாமதமானதே, 50 ஆயிரம் ஏக்கரில் 15 முதல் 25 நாள் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகக் காரணம் என்கிறார் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் தாமதமாவதால், மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் சேதமாவதுடன், 1 லட்சம் ஏக்கர் உளுந்து சாகுபடியும் இல்லாமல் போகிறது. கடலூர் டெல்டா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நெல் பயிரில் நஷ்டம் ரூ.140 கோடி, உளுந்து சாகுபடியில் நஷ்டம் ரூ. 60 கோடி. கர்நாடகத்திடம் நமது உரிமையக் கேட்டுப் பெறாததும், உரிய காலத்தில் காவிரி நீர் கிடைக்கச் செய்யாததும், சரியான நீர் நிர்வாகம் இல்லாததுமே இந்த நஷ்டத்துக்குக் காரணம் என்கிறார் ரவீந்திரன்.