உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 18, 2012

கடலூரில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

கடலூர்:


    இலவச ஆம்புலன்ஸ் பிரிவில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்காணல் முகாம் வரும் 19ம் தேதி கடலூரில் நடக்கிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 


      தமிழகத்தில் இயங்கி வரும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 19ம் தேதி கடலூரில் நடக்கிறது.

         ஓட்டுனர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும், 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், 162.5 செ.மீ., உயரமுடையவராகவும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து ஐந்தாண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., நர்சிங், விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, உயிரியல் , லைப் சயின்ஸ் அல்லது ஜி.என்.எம்., - ஏ.என். எம்., - டி.என்.ஏ., - டி.எம். எல்.டி., - டி.பார்ம் முடித்தவராகவம், 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


         மேற்கண்ட தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் பிற சான்றிதழ்களுடன் வரும் 19ம் தேதி கடலூர், பீச் ரோட்டில் உள்ள ரோட்டரி அரங்கில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். டிரைவர் பணிக்கு எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண் பார்வை சோதனை மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வு நடைபெறும். தேர்வு பெறுபவர்களுக்கு எட்டு நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு, உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

  இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் 044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.



Read more »

புதன், அக்டோபர் 10, 2012

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ தேர்வில் பங்கேற்கவுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி

கடலூர்:

நெய்வேலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் பங்கேற்கவுள்ள மாவட்ட இளைஞர்களுக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


        இந்திய ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நெய்வேலி, பாரதி விளையாட்டரங்கில் நடக்கிறது. இந்த முகாமில் சிப்பாய், நர்சிங் உதவியாளர், எழுத்தர் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு பெற்ற மற்றும் பதினேழரை வயதிலிருந்து 23 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு கலெக்டர் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் படி நெய்வேலியில் நடைபெறவுள்ள ராணுவ ஆள் தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பம் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

          அதேப்போன்று எழுத்து தேர்விற்கான பயிற்சி முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது.ராணுவ ஆள் தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள், சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் 15ம் தேதி மாலை 4 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ஆஜராகி பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறியுள்ளார். .

Read more »

புதன், அக்டோபர் 03, 2012

கடலூர் மாவட்டத்தில் இலவச சட்ட மையம் விரைவில் துவக்கம்

கடலூர்:


      தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு இந்தியா முழுவதும் ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இம்மையங்கள் விரைவில் துவங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இம்மையத்தில் பட்டதாரிகள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

            மாவட்ட அளவில் 100 பேரும், வட்ட அளவில் 50 பேரும் இலவச சட்ட பணிகள் ஆலோசனை மையத்தில் கிராம மக்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்க வழிகாணப்பட்டுள்ளது. இதற்காக வாரந்தோறும் 3 நாட்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் 3 மணி நேரம் ஆலோசகர்கள் மக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் குறித்து எடுத்துரைக்க பணியாற்றுவர். இதற்காக சம்பளமும் வழங்கப்படவுள்ளது. கிராம இலவச சட்ட ஆலோசனை மையத்தில் திருமண சட்டம், குழந்தை திருமண சட்டம், குடும்ப நல நீதிமன்ற சட்டம், வரதட்சணை கொடுமை சட்டம், உள்ளூர் சட்ட- ஒழுங்கு சட்டம், பெண் கொடுமை தடுப்பு சட்டம், வருவாய் துறை சட்டம், தொழிலாளர் நல சட்டம், முத்திரை தாள் சட்டம் உள்ளிட்ட 29 சட்டப்பிரிவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்க வழிகாணப்பட்டுள்ளது.

           வழக்கு தொடர விரும்பு பவர்களுக்கு இம்மையங்கள் வட்ட, மாவட்ட அளவிலான நீதிமன்றத்தில் உள்ள இலவச சட்ட மையத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்டும். இது போன்று மாவட்டத்தில் உள்ள 52 காவல் நிலையங்களில் குழந்தைகள் சம்மந்தப்பட்ட வழக்கு தொடர்பாக ஒவ் வொரு காவல் நிலையத்தி லும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.  கடலூரில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையத்தில் பணியாற்றுவது மற்றும் காவல் நிலையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளவது தொடர்பாக பணியாற்றவுள்ளவர்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி உத்திராபதி மற்றும் பயிற்சியாளர்கள் வழக்கறிஞர்கள் அருணாச்சலம், பாலதண்டாயுத பாணி, கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், வனராஜ், சந்திர சேகரன், ராஜசேகர், அமுதவள்ளி, ஜானகிராமன், ஆண்டாள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

கந்தசாமி நாயுடு கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:


              கடலூர் கே.என்.சி. மகளிர் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
          கே.என்.சி. மகளிர் கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயில்கின்றனர். அரசு உதவிப் பெறும் இக்கல்லுரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகளை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகமும் செய்யவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசும் கண்டு கொள்ளவில்லை என மாணவியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கல்வி உதவித்தொகையை ஆண்டு தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். கல்லூரி ஆய்வுக்கூடத்துக்கு போதுமான உபகரணங்கள் வழங்க வேண்டும். விலையில்லா மடிக்கணினி ஆண்டின் தொடக்கத்திலேயே அனைத்து மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்.

           இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரியிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாணவர் சங்க நகரத் தலைவர் எம்.ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.அரசன், நகரச் செயலர் இளங்கோவன், துணைச் செயலர் எஸ்.மாணிக்கம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.அமர்நாத், கல்லூரித் தலைவர் கே.ஆர்த்தி, செயலர் எஸ்.செல்வபிரியா, துணைச் செயலர்கள் எம்.வினோதினி, ராஜலட்சுமி, புவனா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவியர்கள், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து மனு அளித்தனர். அரசு உதவிப் பெறும் கல்லூரியாக இருப்பதால் அடிப்படை வசதிகளை ஆராய்வதற்கு தனியே குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியர் உறுதியளித்தார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior