உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கருத்தரங்கம்

கடலூர்:

      கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கருத்தரங்கம் அண்மையில் நடந்தது. கல்லூரி தாளாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி கணிதத் துறை தலைவர் எம்.ரேணுகா வரவேற்றார். முதல்வர் டாக்டர் எஸ்.ரமாராணி தொடக்க உரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழகத் திருச்சி மண்டல பேராசிரியர் விஜயபாலாஜி கணிதத்தின் பயன்பாடு குறித்து பேசினார்.  இதில், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கட்டுரை வாசிப்பு போட்டி, கணித மேதை ராமாநுஜம் தொடர்பான ஆண்டை மையப்படுத்தும் நிகழ்வுகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.



Read more »

புதன், செப்டம்பர் 26, 2012

மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் வெற்றி

கடலூர்:

மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் வெற்றி  பெற்றனர். நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மண்டல தொழில் நுட்பக்  கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி, நாகப்பட்டினம் ஹாஜி ஷேக் இஸ்மாயில்  பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 16 பாலிடெக்னிக் கல்லூரிகள் பங்கேற்றன. போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், முதல்வர் சுந்தரமூர்த்தி, துணை முதல்வர் வாசுதேவன்,  உடற்கல்வி இயக்குனர் அருணகிரி பாராட்டினர்.

.

Read more »

திங்கள், செப்டம்பர் 24, 2012

கடலூர் மாவட்டத்தில் மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவக்கம்

கடலூர்:


            கடலூர் மாவட்டத்தில் மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மின்னணு மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துறைகளில் ஏற்படுத்தி வருகிறது. வெளிப்படையான துரிதமான முறைகளில் அரசின் சேவைகள் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் நுட்பத்தினை தேசிய தகவலியல் மூலம் மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தலின்படி மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இணையதள வசதியுடன் இருக்கும் கம்ப்யூட்டர் வாயிலாக கலெக்டருக்கு அனுப்பப்படும் அனைத்து தபால் மூலம் வந்த விவரங்களை பதியப் பெற்று உரிய பிரிவுகளுக்கு அனுப்பி பதில் விவரங்கள் பதிவு செய்யும் இச்சேவையை கலெக்டர் ராஜேந்திர ரத்னு தொடங்கி வைத்தார்.

              இதற்கென தேசிய தகவல் மையம் தயாரித்துள்ள இணைய வழியில் இயங்கக்கூடிய மென்பொருளை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கலெக்டர் அவர்களுக்கு வரும் தபால்களை தபால் பிரிவில் உள்ள ஊழியர் தினமும் தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து உரிய பிரிவுகளுக்கு அனுப்புவார்.அந்தந்த பிரிவு அலுவலர்கள் அவருக்குரிய தபால்களை கம்ப்யூட்டர் மூலம் பார்த்து உரிய பதிலை அளித்து தனது மின்னணு பதிவேட்டிலும் அனைத்து தபால்களையும் பதிவு செய்து கொள்வர். இந்த முறையில் பதிவு செய்யும் தபால்களின் விவரங்கள் பதில் அளித்த தகவல்கள் எந்தெந்த பிரிவுகளில் தபால்கள் நிலுவையில் உள்ளது என்ற புள்ளி விவரங்களை இந்த மென்பொருள் மூலம் உடனுக்குடன் எடுத்துக் கொள்ளலாம்.மேலும் உயர் அதிகாரிகள் இந்த விவரங்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்.சார்பில் செஞ்சுருள் சங்க துவக்க விழா

விருத்தாசலம்:


   விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., சார்பில் நடந்த செஞ்சுருள் சங்க துவக்க விழா மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் கதிரவன் எல்.சி.டி., புரொஜக்டர் மூலம் செஞ்சுருள் சங்க செயல்பாடு மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கமளித்தார். பேராசிரியர்கள் முத்தழகன், சிவக்குமார், துரைராசு, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜசேகர் உட்பட மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.திட்ட அலுவலர் பாலசங்கு நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், செப்டம்பர் 18, 2012

பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினம் கொண்டாட்டம்


 கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினத்தில் ( 17/09/2012)  கல்லூரியில் அமைந்துள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 




Read more »

சனி, செப்டம்பர் 15, 2012

கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம்

கடலூர்:


    கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

      சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முதல் வரும் 19ம் தேதிவரை சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி கடலூர் சில்வர் பீச்சை சுத்தம் செய்யும் பணியை ஊராக தொழில்துறை மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். கே.என்.சி., மற்றும் அரசு கல்லூரி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்,

            சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் நமது மாவட்டத்தில் ஒருவாரம் கடைபிடிக்கப்படுகிறது. சில்வர் பீச்சில் சேகரித்த குப்பைகள் 16 வகையாக பிரித்தெடுத்துள்ளனர். கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் வராதவாறு கண்காணிக்கப்படும். ஒருவாரத்திற்கு கடற்கரையொட்டியுள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் 27 ஆயிரம கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது .மாவட்டத்தில் இதுவரை 70 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் தடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குறைப்பதற்கு வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்போர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

            நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் விஜயக்குமார், இன்ஜினியர் ரவி, நகராட்சி தலைவர் சுப்ரமணியன், துணைச் சேர்மன் குமார்,அ.தி.மு.க.,ஒன்றிய செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து ஓருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி குழுமம் 2011-12 திட்டத்தின் கீழ் 29.50 லட்சம் செலவில் இரண்டு டம்பர் பிளேசர் லாரியும், 9.60 லட்சம் செலவில் 16 டம்பர் பிளேசர் பின்களை என மொத்தம் 39.10 லட்சம் செலவில் புதிதாக வாங்கப்பட்டது



Read more »

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம்

கடலூர்:

           கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று துவங்குகிறது.

 கல்லூரி முதல்வர் மல்லிகாசந்திரன் கூறுகையில்,

            கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் கிராமங்களில் முகாமிட்டு சமூக சேவையாற்றி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் இன்றும், நாளையும் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கும் முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை, ஈ.சி.ஜி.,எக்கோ சோதனைகள் செய்யப்படும். நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில்அமைச்சர் சம்பத் முகாமை முடித்து வைக்கிறார் என்றார்.

 


Read more »

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

கடலூர் புனித வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் 100 பேர் ரத்ததானம்

கடலூர், :


    கடலூரில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் மாணவியர் 100 பேர் ரத்ததானம் செய்தனர்.

         கடலூர் புனித வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மற்றும் அன்னை தெரசா நிறுவனம் ஆகியன இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. கல்லூரி செயலர் முனை வர் ரட்சகர் அடிகளார் முகாமினை தொடக்கி வைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் மாணவிகள் 100 பேர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ரத்த வங்கி பொறுப்பு அலுவலர் சண்முககனி, அன்னைதெரசா சேவை இயக்கத் தலைவர் அகஸ்டின் பிரபாகரன், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சந்தானராஜ், அன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சின்னப்பன், துணை முதல்வர் அருமைசெல்வம், ஒய்.ஆர்.சி திட்ட ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டிபேர்னன், வேலை வாய்ப்பு அலுவலர் எட்வின் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண் டனர். மாணவர்களோடு சேர்ந்த பேராசிரியர் எட்வினும் ரத்ததானம் செய்தார்.



Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் கருத்தரங்கம் துவக்கம்

கிள்ளை:

          சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.கல்லூரி முதல்வர் வாசுதேவன் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் வணங்காமுடி வரவேற்றார். நேற்று நடந்த முதல்நாள் கருத்தரங்கை மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் துவக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சுவாமிநாதன் வேதியியல் ஆராய்ச்சித்துறையில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார்.

            கருத்தரங்கம் புத்தகத்தை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்பநாபன் வெளியிட்டார். கருத்தரங்கில் பேராசிரியர்கள் சேகர், சாந்தி, பழனிவேல், தேவநாதன், சண்முகன், பிரபா, சுகிலா, டார்லின்குயின், பாபுஜான், மணிவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.பேராசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார். இன்று ஆய்வு கட்டுரை சமர்பித்தல் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.


Read more »

வியாழன், செப்டம்பர் 13, 2012

கடலூர் மண்டலத்தில் 14 புதிய வழித்தடங்களில் 26 புதிய பேருந்துகள் இயக்கம்

கடலூர்:


         தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத்தில் 26 புதிய பஸ்களில் 14 புதிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1000 புதிய பஸ்கள், 379 வழித்தடங்களில் விடப்பட்டது. இதனை சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் இயக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கடலூர் பணிமனையில் 26 புதிய பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.

           புதிய பஸ் இயக்க பூஜைக்கு கடலூர் மண்டல பொது மேலாளர் பூபதி தலைமை தாங்கினார். கடலூர் நகர மன்ற தலைவர் சுப்ரமணியன், அ.தி.மு.க., தொழிற்சங்க மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன், பணிமனை செயலர்கள் சுகுமார், பாலசுப்ரமணியன், பணிமனை தலைவர்கள், கிளை மேலாளர்கள் கணபதி, மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விருத்தாசலம் - காட்டுமன்னார்கோவில்,
சிதம்பரம் - ஆண்டிமடம்,
சிதம்பரம் - வடலூர்,
சிதம்பரம் - வாத்தியார்பள்ளி,
பண்ருட்டி - திருச்சி,
பண்ருட்டி - களமருதூர்,
விருத்தாசலம் - கும்பகோணம்,
முள்ளுக்குறிச்சி - சென்னை

 உட்பட 14 புதிய வழித்தடங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.



Read more »

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அறிமுகக் கூட்டம்

பண்ருட்டி:



பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல்  கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி புலமுதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கட்டடவியல் பேராசிரியர் சுரேஷ்குமார்முன்னிலை வகித்தார். டாக்டர்  சீனுவாசன் வரவேற்றார். இதில் கட்டடவியல், இயந்திரவியல், கணிபொறி, மின்னியல், மின் அணுவியல் துறை முதலாமாண்டு 360 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

விழாவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் சீனுவாசன் பேசுகையில்,


அண்ணா பல்கலைக் கழகத்தில் கிண்டி  உள்ளிட்ட மற்ற கல்லூரி வளாகத்தை போல பண்ருட்டி வளாகம் அனைத்து வசதிகளும்  பெற்றவை. இங்கு ஒவ்வொரு மாதமும் வகுப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது.  இதில் மாணவர்கள் தங்களது குறைகளை கூறி பிரச்னைக்குத் தீர்வு காணலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் ராகிங் இல்லை. முதலாம் ஆண்டு மாணவர்கள் பயமின்றி  படிக்கலாம். குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யலாம். அரசு கல்லூரி  மாணவர்களுக்காக உதவிகள், ஸ்காலர்ஷிப் வழங்கி வருவதை மாணவர்கள் அனைவரும்  அறிய வேண்டும். மொபைல்போன் கல்லூரி வளாகத்தில் பேசுவது தடை  செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தங்களது பிள்ளைகள் படிப்பதை கவனித்தது  போல் பெற்றோர்கள் கல்லூரி படிப்பில் எப்படி படிக்கின்றனர் என அறிந்து பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை வழங்க வேண்டும் என்றார். ஆங்கிலத்துறை  பேராசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.



Read more »

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் பி.எட்., வகுப்புகள் துவக்க விழா

கிள்ளை:


கிள்ளை அருகே ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் பி.எட்., வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமையேற்றுகுத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆலோசகர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலர் பாபு வரவேற்றார். ரங்காச்சாரி பேசினார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு படங்களாக மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.விழாவில் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயபால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், நடனசபேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அறிவுக்கடல் நன்றி கூறினார்.

Read more »

சனி, செப்டம்பர் 08, 2012

மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிரவுன் சர்க்கஸ் துவக்க விழா

கடலூர்:

     கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிரவுன் சர்க்கஸ் துவக்க விழா நேற்று  நடந்தது. நகராட்சி சேர்மன் சுப்ரமணியன் திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சர்க்கசில் ஆப்பிரிக்கா, மணிப்பூர்,
மங்கோலியா கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், ரிங் டான்ஸ், இரும்பு கூண்டுக்குள்  இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஸ்கை வாக், பயர் டான்ஸ், ஆப்பிரிக்கா காட்டு  நடனம், பார் விளையாட்டு, கூர்மையான நான்கு கம்பி மீது படுப்பது,  அந்தரத்தில் கம்பி மீது தலைகீழாக தொங்குவது உள்பட 28 வகையான சாகசங்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞர்கள், குதிரை, ஒட்டகங்களின் அணிவகுப்பு, ஜோக்கர்களின்  நகைச்சுவை உள்ளிட்ட நிகழ்ச்சியும்இடம் பெற்றுள்ளன. அக்டோபர் 10ம் தேதி,  வரை நடைபெறும் சர்க்கஸ் தினமும் மதியம் 1 மணி, மாலை 4, இரவு 7 மணி என  மூன்று காட்சிகள் நடக்கிறது. கட்டணம் 50, 100, 150 ரூபாய் ஆகும். 150  ரூபாய் டிக்கெட் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து சர்க்கஸ் மேலாளர் சந்திரன் கூறுகையில்,


சர்க்கசில் ஆப்பிரிக்க கலைஞர்கள் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும். பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன என்றார்.

.

Read more »

புதன், செப்டம்பர் 05, 2012

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆண்டு தோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர்) வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். தமிழக அரசு சார்பில் 2011-2012ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு கடலூர் மாவட்டத்திலிருந்து தொடக்கக் கல்வித்துறையில் 13 பேரும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் 15 பேரும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

அவர்களில் தேர்வு பெற்றவர்கள் விவரம்:

சிதம்பரம், ராணி சீதையாட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன், கடலூர் செயின்ட் ஆன்ஸ் பள்ளி முதல்வர் எர்மின் இக்னிஷியஸ், தர்மநல்லூர் ஆதிதிராவிட நலப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி,  வேப்பூர் அரசு மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியை ராஜகுமாரி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் குறிஞ்சிப்படி அடுத்த பொட்டவெளி, வள்ளலார் உதவி பெறும்  துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், கரைமேடு நடுநிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர் குணசேகரன், கீழக்கொல்லை உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியை  தேவிகா, வீனங்கேணி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை இருதயமேரி, சிதம்பரம்  ராமகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் அருள்பிரகாசம், குமராட்சி ஒன்றியம் மா.புளியங்குடி பள்ளி ஆசிரியர் கணேசன் ஆகியோர் நல்லாசிரியர்  விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பெற்ற இவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior