கடலூர்:
சாலைகளையும் பொது இடங்களையும் ஆக்கிரமிப்பதற்குச் சற்றும் அஞ்சாத நகரமாக மாறிவருகிறது கடலூர்.
2 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாவட்டத் தலைநகரான கடலூரில் போக்குவரத்து நெரிசல் கடந்த சில ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்து விட்டது. தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகரைக் கிழித்துக் கொண்டு செல்வதால், வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சாலைகளை விட்டு வெளியே சென்று, வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பாத வணிகர்கள், குறிப்பிட்ட சாலைகளில், கோயில் நிலங்களில் தங்கள் வணிகத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தால், கடலூர் சாலைகளில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் லாரன்ஸ் சாலை, பாரதிசாலை, நேதாஜி சாலை, சுப்புராயச் செட்டித் தெரு, தேரடித் தெரு, சன்னதித் தெரு, முதுநகர் சிதம்பரம் சாலை ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு மிகச் சாதாரணமாகத் தடையின்றி நடந்து வருகிறது. நகராட்சி, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைத் துறைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை ஆண்டுக்கு ஒருமுறை வெறும் சம்பிரதாயத்துக்காகவே நடத்துகின்றன. கோடை காலத்தில் 2 அல்லது 3 மாதங்கள், கடைகளுக்கு முன் வேனில் பந்தல் அமைக்கக் கூட, காவல்துறை மற்றும் நகராட்சியில் அனுமதி பெற்றுதான், மற்ற நகரங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கே, வணிகர்களின் அனுமதி பெற்றுதான் அரசுத் துறைகள் சாலைகளில் வர வேண்டும் என்ற பரிதாப நிலையில் கடலூர் உள்ளது என்கிறார், கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன். சுகாதாரப் பணிகளில் கடலூர் நகராட்சி ஜீரோ மதிப்பெண் பெற்று, கடை நிலையில் இருப்பதாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அறிவித்து இருக்கும் நிலையில், சாலைகள், பொது இடங்கள், நடைபாதைகளை ஆக்கிரமிப்பதில் நாட்டில் முதல் இடம் வகிப்பதாக மக்கள் சான்றிதழ் அளிக்கிறார்கள்.
பலகோடி செலவிட்டு, பளபளப்பான கற்கள் பதித்து, சாலையோரங்களில் நடை பாதைகள் அமைக்கப்பட்டும், அவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளனர். பழக்கடைகள், சிறு வணிகர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போயிற்று கடலூரில். தேசிய நெடுஞ்சாலையும் ஆக்கிரமிப்புக்கு விதிவிலக்கல்ல. தேசிய நெடுஞ்சாலையோரம் உருவாகி வரும் பழக்கடைகள், போக்குவரத்தை பெரிதும் ஆபத்தாக மாற்றி வருகின்றன.
தி.மு.க. வின் பொறுப்பில் உள்ள கடலூர் நகராட்சி, கோடிக்கணக்கில் மக்களிடம் வரி வசூலித்துக் கொண்டு, வணிகர்களின் கைப்பாவையாக மாறி, மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகப் பொதுநல அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. எதுவாக இருந்தாலும் வியாபாரிகளைக் கேட்டுத்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று, கடலூர் நகராட்சி கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு, மக்கள் நலனைப் புறக்கணித்து விட்டதாக குடியிருப்போர் நலச் சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளன. ரூ. 10 கோடிக்கு மேல் சொத்துவரி வசூல் ஆகாமல் பாக்கி இருப்பதாக அடிக்கடி நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.
ஆனால் மக்கள் நலனைப் புறக்கணித்து யாருக்காக நகராட்சி நிர்வாகம் வக்காலத்து வாங்குகிறதோ?, அவர்கள்தான் நீதிமன்றத் தடை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, நகராட்சிக்கு வரி செலுத்த மறுத்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. இதனால் மைனாரிட்டி ஆக்கப்பட்ட மக்கள் சமூகம், நாள்தோறும் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது. கடலூரில் சுரங்கப்பாதை அமைக்க வணிகர்கள் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. என்றாலும் நகராட்சி நிர்வாகிகளோ, நீதிமன்றம் தடைவிதித்து விட்டதாகவே சொல்லிக் கொண்டு, சுரங்கப் பாதைப் பணிகளை நிறைவேற்ற விடாமல், 4 வணிகர்களுக்கு ஆதரவாகவும், ஒட்டுமொத்த நகர மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டுகிறார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன்.
எனவே கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டும் என்று, பொதுமக்கள் புதிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் மற்றொரு பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கருத்துக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் ஆதரவு தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.