உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 14, 2012

டெலிபிரம்மா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செல்போனில் திரைப்படங்களைத் தேட புதிய "அப்ளிகேஷன்"



         செல்போனில் திரைப்படம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேடித் தரும் புதிய பயன்பாடு (அப்ளிகேஷன்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
 
         பெங்களூரைச் சேர்ந்த டெலிபிரம்மா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பயன்பாட்டின் பெயர் "இன்டாரெக்ட்'.  ஒரு திரைப்படம் தொடர்பான விளம்பரம் பத்திரிகை, போஸ்டர், இண்டர்நெட் விளம்பரம், தொலைக்காட்சி என எதில் வெளிவந்தாலும், அதனை செல்போன் கேமரா மூலம் "ஸ்கேன்' செய்து கொள்ளும் இன்டாரெக்ட் பயன்பாடு.  பின்னர் அது தொடர்பாக இணையத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் ஒரு சேர செல்போனுக்கு கொண்டு வந்து விடும். அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா முதல் அதன் பாடல்கள், விமர்சனம், திரையிடப்பட்டுள்ள திரையரங்கு காட்சி நேர விவரம், திரைப்படத்தின் அதிகாரபூர்வ இணையதளம், திரைப்படம் தொடர்பான விக்கிபீடியா தகவல், யூ டியூப் உள்ள டிரைலர், ஃபேஸ் புக், டிவிட்டரில் அத்திரைப்படத்தை விரும்பி இருப்பவர்கள் என ஒன்று விடாமல் அத்திரைப்படம் தொடர்பான அனைத்து தகவல்களும் செல்போனில் ஒரு சேர கொண்டு வந்துவிடும்.  
 
         இதன் மூலம் ஒவ்வொரு இணையதளமாக சென்று தகவல்களைத் தேட வேண்டிய நேரம் மிச்சமாகும். செல்போனில்  தேடுவதன் மூலம் இப்பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  பயன்பாட்டை திறந்தால், செல்போனில் உள்ள கேமரா தானாகவே இயங்கும், கேமராவுக்கு எதிராக பத்திரிகையில் வெளியாகியுள்ள திரைப்பட விளம்பரத்தை காண்பித்தால், அது ஸ்கேன் ஆகி விடும். அதன் பின்னர் திரைப்படத்தின் அனைத்து விவரங்களையும் செல்போன் கொட்டிவிடும்.
 
 










Read more »

கடலூர் உப்பனாற்றில் கலந்த ரசாயனக் கழிவுகளால், மீனவர்கள் பாதிப்பு





 
கடலூர்: 
 
        கடலூர் உப்பனாற்றில் சனிக்கிழமை திடீரெனக் கலந்த ரசாயனக் கழிவுகளால், மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.  
 
           சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை முதல் சென்னை வரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வர்த்தக ரீதியான படகுகள் போக்குவரத்துக்காக, கடற்கரையையொட்டி ஆங்காங்கே, கடலுடன் தொடர்பு கொண்டு அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் என்ற நீர்வழிப்பாதைதான், தற்காலத்தில் உப்பனாறு என்று அழைக்கப்படுகிறது.  இந்த உப்பனாற்றில்தான் மேற்கு மாவட்டங்களில் இருந்து பெருக்கெடுத்து வரும் பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு ஆகியவை கலந்து வங்கக் கடலில் சங்கமிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறந்த நீர்வழிப் பாதையாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய், பராமரிக்கப்படாமல் போனதால், தற்போது ஆங்காங்கே தூர்ந்துக் கிடக்கிறது. 
 
           சிறந்த வர்த்தகத்துக்காக ஆங்கிலேயர்களால் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட கால்வாய், இன்று மிகப்பெரும் ரசாயனத் தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ளவும், அவற்றின் கழிவுகளை விடுவதற்கும் ஏற்ற இடமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதால், மக்களின் உடல் நலத்துக்குக் கேடுவிளைவிக்கும் மிகமோசமான ரசாயனக் கழிவுகளின் சங்கமமாக உப்பனாறு மாற்றப்பட்டு இருக்கிறது.  ÷உப்பனாற்றின் கரையில் அமைந்துள்ள கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 25-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் இவைகள் பெரும்பாலும் தங்களது ரசாயனக் கழிவுகளை உப்பனாற்றிலேயே கலந்து வந்தன.  
 
           இதனால் உப்பனாற்றில் உள்ள மீன்வளத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. மீன் வளம் வெகுவாகக் குறைந்ததுடன், மீனவர்களை மிகமோசமான தோல்நோய்களும் தொற்றிக் கொண்டன. இதனால் உள்நாட்டு மீனவர்கள் பலர் மீன்பிடித் தொழிலைவிட்டு கூலி வேலைகளுக்குச் சென்று விட்டனர்.  உப்பனாற்றில் பிடிபடும் மீன்களின் உடலிலும் ஃபுளோரைடு உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதற்கு, இந்த ரசாயனக் கழிவுகள் காரணமாக இருந்து இருக்கின்றன. 
 
         உப்பனாற்றில் ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதற்கு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களில் விளைவாக உப்பனாற்றில் ஆலைக் கழிவுகள் கலப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  எனினும் பல ஆலைகள் இன்னமும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக, ரசாயனக் கழிவுகளை உப்பனாற்றில் கலந்து கொண்டு இருப்பதாகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இத்தகைய மோசமான நடவடிக்கைகளைக் கண்காணிக்க உப்பனாற்றின் கரையோரமாக, சாலை ஒன்று அமைக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை உப்பனாற்றில் செம்மங்குப்பம் அருகே, ரசாயனக் கழிவுகள் பெருமளவில் கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களின் கால்களில், அரிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். 
 
            இது குறித்து சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குப் புகார் செய்தார். மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து உப்பனாற்றைப் பார்வையிட்டு, சோதனைக்காக ரசாயனக் கழிவுகள் கலந்த ஆற்றுநீரின் மாதிரியை எடுத்துச் சென்று உள்ளனர்.  ஆய்வுக்குப் பின்னரே, எந்த தொழிற்சாலையில் இருந்து, என்ன வகையான ரசாயனக் கழிவுகள் உப்பனாற்றில் கலக்கப்பட்டன என்ற விவரம் தெரியவரும்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக கடலூரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_405461.jpg

கடலூர் :

       ""இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட்டுக் கெடுக்கும் கும்பலை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, அழகிரி எம்.பி., பேசினார்.


கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக, கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் பேசியது: 

           கூடங்குளம் அணு மின் பிரச்னையில் முதல்வர் ஜெ., தவறான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார். முதல்வர் இதுபோன்ற பிரச்னையை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது. உலகில் பல நாடுகள் அணுவை பயன்படுத்தி வருவது தெரிந்தது. பிரான்ஸ் நாட்டில் அணு உலையைக் கொண்டு, மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். எந்த ஒரு திட்டத்திலும், 100 சதவீதம் பாதுகாப்புடன் இருக்க முடியாது.


          என்.எல்.சி., நிறுவனம் கூட 100 சதவீதம் பாதுகாப்புடன் இயங்கவில்லை. நிலக்கரியை பயன்படுத்துவதன் மூலம் 50 கி.மீ., வரையுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் துகள்கள் காரணமாக, மாநிலத்திலேயே அதிக காசநோய் தாக்கும் மாவட்டமாக கடலூர் உள்ளது. கூடங்குளத்தால் பாதிப்பு என போராடும் போது என்.எல்.சி.,யால் பாதிப்பு என, எங்களால் போராட முடியும். இப்படிச் செய்தால் மின் தடை மேலும் கூடுதலாகும். கூடங்குளம் மின் நிலையத்தை மூட வேண்டும் என்றால் என்.எல்.சி.,யும் இழுத்து மூட போராட்டம் நடத்துவோம்.


        தமிழகத்தில் திராவிட கட்சிகளால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள போர்டு, ஹுண்டாய் கம்பெனிகள் தமது விரிவாக்க கம்பெனிகளை குஜராத்தில் நிறுவுகின்றன. இதனால், 50 ஆயிரம் பேருக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பை நாம் இழந்து விட்டோம். குஜராத் மாநிலம் தொழில் துறையில் வளர்ச்சி பெற்றிருப்பதை மறுக்க முடியாது. தோஷிபா நிறுவனம் துவக்க விழாவில் முதல்வர், அன்னிய முதலீட்டை வரவேற்போம் என கூறியுள்ளார். ஆனால், லோக்சபாவில் நடந்த சட்ட முன்மொழிவில் எதிர்த்து குரல் கொடுத்த முதல்கட்சி அ.தி.மு.க., தான். இவர்களைப் போன்று அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்கிற கட்சியல்ல காங்கிரஸ்.

          முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு பெரிய விஞ்ஞானி. இவர் கூடங்குளத்தை ஆய்வு செய்து, பெரிய விபத்து ஏற்பட்டால் கூட அதைத் தவிர்க்க, நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என விளக்கினார். அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாத இந்த கும்பலுக்கு, மாநில அரசு ஆதரவு அளித்து வருகிறது. 1,000 பேர் கும்பலுக்காக கடந்த ஆறு மாதங்களாக திட்டம் துவக்கப்படாமல் உள்ளது. உங்களால் முடியாது என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். சி.ஆர்.பி.எப்., போலீசை வைத்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அன்னிய முதலீட்டாளர்கள் எப்படி இந்தியாவுக்கு வருவர்.


        கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு என போராடும் தேச விரோத கும்பலுக்கு, ஜெ., அரசு ஆதரவாக இருக்கக் கூடாது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தில், வாய் மூடி மவுனமாக இருக்கக் கூடாது. இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட்டு கெடுக்கும் கும்பலை, 24 மணி நேரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார்.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior