தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்து விநியோகிக்க 250 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனை, பேராசிரியர் எம். விஸ்வநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் சார்பில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடல், கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:
நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இப்போது 3.5 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த நோய் குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சீராக உடல் எடையைப் பராமரித்தல் ஆகியவற்றை தவறாது பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நோய் பாதிப்பைத் தடுக்க முடியும்.
கிராமப்பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு குறைவாக உள்ளது. ஏனெனில், கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை, கடின உழைப்பு, சரிவிகித உணவு ஆகியவையே இதற்குக் காரணங்களாகும். ஆனால், சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வசதி கிராமப் பகுதிகளில் குறைவாக உள்ளது. நகரப் பகுதிகளில் இதற்கான வசதிகள் போதிய அளவில் இருந்தபோதும், வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றார் சிவ்தாஸ் மீனா.
முன்னதாக ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், ரத்த சர்க்கரை அளவைக் காட்டும் கருவி, கொழுப்பின் அளவைக் காட்டும் கருவி, ரத்த அழுத்தம் கண்டறியும் சாதனம் உள்ளிட்ட 19 பொருள்கள் அடங்கிய பையை (கிட்) அவர் அறிமுகம் செய்தார். (நோயாளிகள் தாங்களாகவே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான இந்தப் பையின் விலை 6,750 ஆகும்).
இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி. நம்பெருமாள் சாமி பேசியது:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் முறையான உணவுப் பழக்கம், போதிய உடற் பயிற்சி, மருந்துகளைச் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் கண் கோளாறுகள் உள்ளிட்ட இதர பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம். நாட்டில் பார்வை இழப்பு அதிகரித்துள்ளதற்கு சர்க்கரை நோயும் முக்கிய காரணமாகும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் கண் கோளாறுகள் ஏற்படுவதில் இருந்து 76 சதவீதம் வரை தடுக்க முடியும்.
இதே போன்று, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதை 50 சதவீதம் வரை தடுக்கலாம். இவை தவிர நரம்பியல் பாதிப்புகளையும் 60 சதவீதம் வரை தடுக்க வாய்ப்புள்ளது. இதய நோய் பாதிப்பைப் பொருத்தவரை 42 சதவீதம் வரை தவிர்க்க வாய்ப்புள்ளது என்றார் நம்பெருமாள் சாமி.
இதன்பின் மருத்துவ நிபுணர்கள் நோயாளிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், ஸ்ரீ ராமச்சந்திரா இதய சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் எஸ். தணிகாசலம், டாக்டர் இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி, இ.வி. கல்யாணி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கீதா, டாக்டர் பி.பி. சிவராமன், டாக்டர் கோகுல்நாத், டாக்டர் வர்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Read more »