திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளிகளுக்குரிய, காணாமல் போன எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்களுக்குப் பதிலாக, தேர்வுத் துறை வழங்கிய புதிய சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் புதன்கிழமை அளிக்கப்பட்டன.
சென்னையிலிருந்து லாரி மூலம் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள லால்குடி, முசிறி, திருச்சி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்தார்.
அப்போது, 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,447 மதிப்பெண் சான்றிதழ்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கி. சுவாமிநாதன், சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குநருக்குத் தகவல் தெரிவித்தார். இதை அடுத்து, காணாமல் போன மதிப்பெண் சான்றிதழ்களுக்குப் பதிலாக, அதே பதிவெண் கொண்ட புதிய சான்றிதழ்கள் அச்சிட அரசின் அனுமதி பெறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலையே அச்சடிக்கப்பட்டன.
தேர்வுத் துறை துணை இயக்குநர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் காணாமல் போன 1,447 மதிப்பெண் சான்றிதழ்களுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட புதிய சான்றிதழ்களை புதன்கிழமை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மதிப்பெண் சான்றிதழ்கள் காணமல் போன 11 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.