இடி, மின்னல் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினத்தில் உடைந்து விழுந்து கிடக்கும் மின் கம்பம்.
கடலூர்:
கடலூரில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் கடலூரில் உயர் அழுத்த மின் பாதையில் 42 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடலூர் நகரம் இரவில் பெரும்பகுதி நேரம், இருளில் மூழ்கிக் கிடந்தது. கடலூரில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.
பலத்த சூறாவளிக் காற்று வீசியது. மாலை 6-30 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டியது. அத்துடன் இந்த ஒரு மணி நேரமும் நகரில் இருந்து வானத்தில் எந்த திசையைப் பார்த்தாலும், பளிச் பளிச் என்று மின்னல் கண்ணைப் பறிக்கும் வகையில் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இடி முழக்கம் காதுகளைச் செவிடாக்கும் நிலையில் ஒலித்தது. பல வீடுகளில் ஜன்னல், கதவுகள் பலமாக அதிர்ந்தன. இடி, மின்னல் காரணமாக கடலூரில் இரவு 7 மணி முதல் மின்சாரம் தடைபட்டது. நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த லாரன்ஸ் சாலையில் மட்டும் சில மணி நேரம் மின்சாரம் தடைபடாமல் இருந்தது. இரவு 8-30 மணிக்கு மேல் அங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. இரவு 12 மணிக்கு ஒருசில பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு பெரும்பாலான பகுதிகளிலும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.இடி, மின்னல் காரணமாக கிராமப் பகுதிகளில் சில மின்மாற்றிகள் பழுதடைந்தன.
கடலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உயர் அழுத்த மின்பாதையில் 42 இடங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டது. ஏராளமான இன்சுலேட்டர்கள் உடைந்து சிதறின. தேவனாம்பட்டினத்தில் மின் கம்பம் ஒன்று தரைமட்டமாகச் சாய்ந்து விழுந்தது. கடலூர் அரசு மருத்துவமனை அருகே தனியார் அகண்ட அலைவரிசைச் சேவை கோபுரம் ஒன்று பழுதடைந்தது. செவ்வாய்க்கிழமை மாலை வரை இதன் சேவை தடைபட்டது. கேப்பர் மலைப் பகுதியிலும் கடலூர் நகரிலும் ஏராளமான தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதம் அடைந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடலூரில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் மின்சாரம் ஏறத்தாழ 30 நிமிடங்களுக்கு ஒருமுறை துண்டிக்கப்படுவதும், 15 அல்லது 20 நிமிடம் கழித்து மீண்டும் வருவதுமாக இருந்தது. இடி தாக்கி கடலூரை அடுத்த தெற்குப் பூவாணிக்குப்பம் முருகேசன் மனைவி ஞானசௌந்தரி (40) காயம் அடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், புதர்களுக்குள் இருந்த பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடிசைகளுக்குள் நுழைந்தன. கடலூர், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி போன்ற பகுதிகளில் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். கடலூரில் செவ்வாய்க்கிழமை காலை 8-30 மணியுடன் முடவடைந்த 24 மணி நேரத்தில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது. நகரில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
Read more »