உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

போலி இயற்கை உரங்கள்: விவசாயிகளே உஷார்!


உரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேப்பம் பிண்ணாக்கு, இயற்கை உரங்கள்.
 
கடலூர்: 
 
           மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
             இருப்பினும் குறைந்த அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடே, தற்போது நமது இயற்கை வேளாண் விஞ்ஞானிகளால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஒருகாலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டி.டி.டி., பி.எச்.சி. பூச்சிக்கொல்லி மருந்துகள், தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. காரணம், டி.டி.டி. மருந்தின் நச்சுக் கழிவுகள், தாய்ப்பாலில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு, கரைந்து போகாமல் தங்கி விடுவதே, மோசமான விளைவுகளுக்குக் காரணம். எனவேதான் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.இயற்கை உரங்களின் பட்டியலில், நுண்ணுயிர் உரங்கள், மண்புழு உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.
 
           இயற்கை உரங்களின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில், இயற்கை உரங்கள் என்ற பெயரில், பல போலிஉரங்கள் உலா வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.எள்ளுப் பிண்ணாக்கு, மணிலா பிண்ணாக்கு ஆகியவற்றில் வேப்பெண்ணெயைத் தெளித்து, வேப்பம் பிண்ணாக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.திரவ வடிவில் அசோஸ்பி, பாஸ்போமிக்ஸ், பொட்டாஷ் ஆக்டிவா, ஜிங்க் ஆக்டிவேட்டர் போன்ற இயற்கை உரங்கள் கவர்ச்சிகரமான பொட்டலங்களில் உரக்கடைகளில் விற்பனைக்கு உள்ளன.
 
            பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூரில் சிறிய அளவில் குடிசைத் தொழில்போல் பலரும் இந்த இயற்கை உரங்களைத் தயாரித்து, பயிர் வளர்ச்சி உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் விற்கிறார்கள். ஒரே இயற்கை உரம், பயிர்களுக்கு பல்வேறு சத்துகளை அளிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதியை பெற, ரூ.300 கட்டணம் செலுத்தி, வேளாண்மைப் பல்கைலக்கழகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.ரசாயன உரங்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளது. அதற்கான சட்டங்களும் உள்ளன. நுண்ணுயிர் உரங்களில் ஒரு கிராமில் ஒரு மில்லியன் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும் என்று தரக் கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் மண்புழு உரங்கள், நகர கம்போஸ்டு உரங்களுக்கும் தரக் கட்டுப்பாடு உள்ளது. 
 
                    எனவே உரக் கட்டுப்பாடு அலுவலர்கள், அடிக்கடி உரக்கடைகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி, தரம் குறைவாக இருந்தால் அத்தகைய உரங்களை தயாரித்தோர், விற்பனை செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனால் சந்தையில் விற்பனையாகும் ஏனைய இயற்கை உரங்களுக்கு எந்தத் தரக்கட்டுப்பாடும், அதற்கான சட்டங்களும் இல்லை என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். இதனால் விளம்பரங்களை நம்பி இந்த இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
குப்பையில் இருந்து  மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்து வரும் பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி இதுபற்றிக் கூறுகையில்,
 
            ""மாதம் 3 முதல் 4 டன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறோம். காய்கறிச் செடிகளுக்கும், நிறுவனங்களில் புல்வெளிகள் அமைப்போரும் இந்த உரத்தை விரும்பி வாங்குகிறார்கள். அதிக அளவில் பயன்படுத்த இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.ஆனால் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல டானிக்குகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. புதுவை மாநிலத்தில் இத்தைகைய இயற்கை உரங்களை அதிகம் தயாரிப்பதாக அண்மையில் என்னை சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால் அவற்றின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது'' என்றார்.
 
இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
 
                  ""இயற்கை உரங்களுக்கு தரக் கட்டுப்பாடு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடாவது இருக்க வேண்டும்'' என்றார் அவர்.

Read more »

கூடுதல் கட்டணம் வசூல்: பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

         கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

             கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:

             இந்த தனியார் பொறியியல் கல்லூரியில் இ-லேர்னிங் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வசூலித்து இருக்கிறார்கள். இக்கட்டணம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கிடையாது என்று திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறியது:

           மாணவர்களைத் துறைத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். கல்லூரிக்குள் நுழைய விடாமல் கல்லூரி அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். போராட்டத்தில் பங்கேற்க வெளியேற முயன்ற சில மாணவிகளை, கல்லூரி விடுதியில் தனி அறையில் அடைத்தனர். அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு மாணவியை அடிக்க முயன்றனர். மாணவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரிடம் தவறாகப் பேசியுள்ளனர். புகார்களுக்கு நிர்வாகத்திடம் பேசி, எங்களின் படிப்புக்கு எவ்வித இடையூறும் பின்விளைவும் இல்லாத நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.

                மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இயக்குநர் சி.ஏ.தாஸ்,  கடலூர் வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

செல்போன் அரசியல் நடத்தக் கூடாது: பாமகவினருக்கு அன்புமணி கட்டளை

நெய்வேலி:

              பாமக நிர்வாகிகள் செல்போனில் அரசியல் நடத்துவதால் கிராமங்களில் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாமகவினருக்கு செல்போன் ஒத்துவராது; அவற்றை உடைத்தெறியுங்கள் என்று நெய்வேலியில் வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில்  பாமக  இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  பேசியது: 

               30 ஆண்டுகளுக்கு முன் கட்சியினர் சைக்கிள், பஸ் போன்றவற்றின் மூலம் கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்தனர். ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் செல்போன் வந்துவிட்டதால் எவரும் கிராமப்புறத்துக்கு செல்வதில்லை. வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் தகவலை சொல்லிவிட்டு அமர்ந்து விடுகின்றனர். இதனால் கட்சி எப்படி வளரும்? கடந்த 10 ஆண்டுகளாக கட்சி வளர்ச்சி பெறவில்லை. எனவே நிர்வாகிகள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள பிரச்னைகளை கையில் எடுத்துப் போராட வேண்டும். கட்சியின் அனைத்து கிளைகளிலும் 25 வயதுக்குட்பட்டவர்களையே நிர்வாகிகளாக நியமிக்கவேண்டும். கட்சியின் பழைய நிர்வாகிகள் இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும்.

            தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் வன்னியர்கள். இதில் 20 சதவீதம் தான் இடஒதுக்கீடு கேட்கிறோம். தற்போதுள்ள இடஒதுக்கீட்டால் பிற ஜாதியினர் அதிகம் பயனடைகின்றனர். வன்னியர்கள் பயன் அடைவது குறைவாக உள்ளது.  தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற புதிய திட்டங்கள் எனது முயற்சியால் வந்த திட்டங்கள். ஆனால் இன்று யார்யாரோ அதற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். 

                 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி செலவாகும் என்கிறார் தமிழக முதல்வர். தமிழகத்தின் ஆண்டு வரவு செலவு திட்டமதிப்பீடு ரூ.69 ஆயிரம் கோடி. இதில் ரூ.400 கோடி செலவு செய்ய முடியாதா என்ன? என்றார் அன்புமணி.  மாநிலத் தலைவர் கோ.க.மணி, எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் இயந்திரங்கள்

கடலூர்:

            தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கீழ்காணும் எண்ணிக்கையில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில்  வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு: 

            பல்வகைத் தானியங்கள் கதிரடிக்கும் இயந்திரங்கள் 8. இயந்திரம் ஒன்றுக்கு அதிகபட்ச மானியம் ரூ. 1.5 லட்சம். சோளக் கதிர் அடிக்கும் இயந்திரங்கள் 2. அதிகபட்ச மானியம் இயந்திரம் ஒன்றுக்கு ரூ. 80 ஆயிரம்.÷8 குதிரைத் திறன் கொண்ட, களை எடுக்கும் கருவிகள் 40. அதிகபட்ச மானியம்  ரூ. 50 ஆயிரம். 4 சக்கர 20 குதிரைத் திறன் கொண்ட இடைஉழவு இயந்திரங்கள் 60. அதிகபட்ச மானியம் ரூ. 1.25 லட்சம். பவர் ஸ்பிரேயர்கள் 20. அதிகபட்ச மானியம் ரூ. 20 ஆயிரம்.

             நெல் நாற்று நடவு இயந்திரங்கள் 15. இயந்திரம் ஒன்றுக்கு மானியம் ரூ. 1.25 லட்சம். பெரிய வகை நாற்று நடவு இயந்திரம் ஒன்று. மானியம் ரூ. 4 லட்சம். பவர் டில்லர்கள் 50. இயந்திரம் ஒன்றுக்கு மானியம் ரூ. 45 ஆயிரம். சுழல் கலப்பைகள் 70. மானியம் ரூ. 20 ஆயிரம். உழவுக் கருவிகள் 3. மானியம் ரூ. 10 ஆயிரம். நெல் அறுவடை இயந்திரங்கள் 10. இயந்திரம் ஒன்றுக்கு மானியம் ரூ. 4 லட்சம். கரும்பு சோகையை தூளாக்கும் இயந்திரங்கள் 2. மானியம் ரூ. 1 லட்சம். நிலம் சமன் செய்யும் லேசர் லெவலர் இயந்திரங்கள் 2. மானியம் ரூ. 1.7 லட்சம். செயின்வாள் போன்ற தோட்டக்கலை கருவிகள் 25. மானியம் ரூ. 25 ஆயிரம். இருபாலரும் இயக்கக்கூடிய  சிறுவேளாண் கருவிகள் 300. மானியம் ரூ. 5 ஆயிரம்.  நெல் நாற்று தயாரிக்கும் தட்டுகள் 3 ஆயிரம். மானியம் ரூ. 50.

                  மேலும் வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் 5 சுய உதவிக் குழுக்களுக்கு டிராக்டர் தவிர்த்து இதர வேளாண் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்குதற்கு, குழு ஒன்றுக்கு மானியம் ரூ. 8 லட்சம். மேற்கண்ட கருவிகள், இயந்திரங்களுக்கு, இந்த ஆண்டுக்கான விலை மற்றும் கம்பெனிகள் அங்கீகாரம் பெறப்பட்ட உடன் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத் திட்டம் குறித்து விவசாயிகள், கடலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர், சிதம்பரம், விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர்களை அணுகி பயன் அடையலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் கப்பல் ஊழியர் வீட்டில் ரூ. 4 லட்சம் நகைகள் கொள்ளை

கடலூர்:

            கடலூரில் கப்பல் ஊழியர் வீட்டில் இரும்பு கிரில்களைப் பெயர்த்து எடுத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.

              கடலூர் சிவானந்தபுரம் ராமநாதன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (49). கப்பலில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி (38) 2 மகள்களுடன் வசித்து வருகிறார். வியாழக்கிழமை காலை தமிழ்ச்செல்வி எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணம் திருட்டுப் போயிருந்தன. வீட்டின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலில், இரும்பு கிரில்களைப் பெயர்த்து எடுத்து திருடர்கள் உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்று விட்டனர். கடலூர் முதுநகர் போலீஸôர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

கடலோரக் காவல் படைக்கு உதவ வயர்லெஸ் கருவிகள் தேவை: மீனவர்கள் கோரிக்கை

கடலூர்:

            கடலோர பாதுகாப்பில் போலீஸôருக்கும் கடலோரக் காவல் படையினருக்கும் உதவுவதற்கு மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

            மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு, கடலோரப் பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடலோர கிராமங்களில் தனியாகக் கணக்கெடுப்பு நடத்தி, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே வங்கக் கடலிலும், கடற்கரை கிராமங்களிலும், சந்தேகப்படும் நிலையில் நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலோர கிராமங்களில் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

              இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் கடலூர் டி.எஸ்.பி. மகேஸ்வரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் பேசிய மீனவர் கிராமப் பிரதிநிதிகள், புதுவை மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டு இருப்பதுபோல், கடலூர் மாவட்ட மீனவர்களுக்கும், வயர்லெஸ் கருவிகள் வழங்க வேண்டும். அதன்மூலம் போலீஸôர் எதிர்பார்க்கும் தகவல்களை உடனுக்குடன் வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

Read more »

Cuddalore Students stage demonstration


Students of a private engineering college staging a demonstration in front of the Collectorate in Cuddalore on Thursday. 
 
CUDDALORE: 

            Final year students studying in a private engineering college located on Cuddalore-Nellikuppam main road staged a demonstration in front of the Collectorate here on Thursday. They alleged that the college management had been collecting fees of Rs. 2,000 a year for e-learning but no such course was conducted for the past four years. Hence, they urged the management to refund the fees. They submitted a representation to Collector P. Seetharaman.

Read more »

பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் திறப்பு விழா

பரங்கிப்பேட்டை : 

             அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறப்பு விழா நடந்தது. 

                பு.முட்லூர் ஊராட்சி தலைவர் ரபிக்குல்தர்ஜா தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார் வையாளர் சிவசண்முகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி வரவேற்றார். பள்ளிக் கட்டடத்தை சேர்மன் முத்துபெருமாள் திறந்து வைத்தார். விழாவில் துணை தலைவர் முத்துஞானசேகரன், ஆணையாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிய ஊராட்சி தொடக்கப்பள்ளி திறப்பு விழா

சிதம்பரம் : 

              சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார்  துவக்கி வைத்தார்.  

               புவனகிரி ஒன்றியம் அம்பாள்புரத்தில்  தொடக்கப் பள்ளி இல்லாததால்  இளங் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து கல்விக்குழு உறுப்பினர் துரைமணிராஜன், அமைச்சர்  பன்னீர் செல்வத்திற்கு கோரிக்கை வைத்தார். அப்பகுதிக்கு புதிய பள்ளி அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து புதிதாக ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி துவக்க விழாவில் புவனகிரி சேர்மன் தனலட்சுமி கலை வாணன் தலைமை தாங்கினார். 

                   கல்வித்துறை அதிகாரிகள் சவரிமுத்து, பிரான்சிஸ்ஜெயராஜ், குணபாரி முன்னிலை வகித்தனர்.  கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து முதல் வகுப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  முன்னாள் சேர்மன் மதியழகன், ஆசிரியர் மன்ற மாநில துணைத் தலைவர் வரதராஜன், செல்வராசு,சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஊராட்சித் தலைவர் ஆனந்திகுமார் நன்றி கூறினார்.

Read more »

புதுப்பேட்டை பள்ளியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

சிதம்பரம் : 

               சிதம்பரம் புதுப்பேட்டை  உண்டு உறைவிடப்பள்ளியில் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு செய்தார். 

                  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சிதம்பரம் புதுப்பேட்டை வடக்குத் தெருவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 50 மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியை மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆடியபாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார்.  அப்போது  குமராட்சி வட்டார வளமைய மேற் பார்வையாளர் சிவக்குமார், கலாவதி கலியபெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் புதுநகர் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

கடலூர் : 

             கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,  ஆய்வு மேற் கொண்டார். 

                 கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வருகை மற்றும் வழக்குப் பதிவேடு உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள், தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தவர் கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இள வட்டம் 2010 பரிசளிப்பு விழா

சிதம்பரம் :  

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கம் இள வட்டம் 2010 சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. 

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி ஆசியுடன் செஞ்சுருள் சங்கம் இளவட்டம் 2010 சார்பில்  பல்வேறுப் போட்டிகள் நடந்தது.  இதில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பல்கலைக்கழக நூலக மைய அரங்கில் நடந்தது.  செஞ்சுருள் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் வரவேற்றார். பேராசிரியர்கள் பழனியப்பன்,முத்துவீரப்பன்,செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச் சியை துவக்கி வைத்தனர்.  

                  மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மீரா, மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி, திட்ட மேலாளர் கதிரவன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற் றிப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். செஞ்சுருள் சங்க அலுவலர் ராஜா நன்றி கூறினார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயராஜ் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.

Read more »

சிதம்பரம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வர்த்தக சங்கத்தினர் கலெக்டருக்கு மனு

சிதம்பரம் : 

              சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி  கலெக்டருக்கு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.  

இது குறித்து அண்ணாமலை நகர் வர்த்தக சங்கத் தலைவர் அருள், செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமதாஸ் உள்ளிட்ட குழுவினர்கள் நேற்று சிதம்பரத்தில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:  

               அண்ணாமலை நகர் பகுதியில் மக்கள் தொகை நிறைந்த குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகம்  உள்ள பகுதியாக உள்ளது.  எப்போதும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். தற்போது நகரில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல்  இப்பகுதியினர் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.  அத்துடன் பல்வேறு விபத்தில் பாதிக்கப்படுகின்றனர்.   ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மின் விளக்கு அமைக்கவும், மேம்பாலத்தில் போக்குவரத்துடன் கூடிய ரவுண்டானா மற்றும் போலீஸ் குடை, மேம்பாலத்தில் இருந்து மாணவர் ராஜேந்திரன் சிலை வரை கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவும், விபத்து நடக்கும் பகுதியில் வேகத் தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் : 

             சிதம்பரம் நகர மேம்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. 

             சிதம்பரம் நகரத்தை மேம்படுத்தி, பராமரிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன்,  திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன், டி.எஸ்.பி., மூவேந்தன், மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி, நகராட்சி சேர்மன் பவுஜியாபேகம்,   ஊராட்சித்தலைவர்கள் வேணுகோபால், தனலட்சுமி ரவி, ராஜேந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  

                   கூட்டத்தில்  ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி அமைப்பது குறித்தும், நடராஜர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதி சாலைகளை சரி செய்வது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது,  பொதுக் கழிப்பிடத்தை தூய்மையாக வைத்திருப்பது, நகரில் தெரு  விளக்கை பாதுகாப்பது, பழுதடைந்துள்ள சாலையை சரிசெய்வது, பொது சுகாதாரம் மற்றும் பஸ் நிலையம் பராமரிப்பது குறித்து ஆலோசிக் கப்பட்டது.  கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, விவசாயத் துறைகள்  மற்றும் பிரத்துறை அதிகாரிகள், அரிமா, ரோட்டரி சங்க நிர் வாகிகள்  பங்கேற்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 5,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


குறிஞ்சிப்பாடி : 

            குறிஞ்சிப்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கீழ் வீதியில் உள்ள 10ம் எண்  வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜ், பறக்கும் படை தாசில்தார் கண்ணன், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் அயன்குறிஞ்சிப்பாடி முழுவதும் ஆய்வு செய்தனர்.  கீழ் வீதியில் பாவாடை மகன் வடிவேல் என்பவர் வீட்டின் அறையில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினர். அதில் 5,000 கிலோ அரிசி இருப்பதாகவும் இவற்றின் வெளி மார்க்கெட் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரிவித்தனர். அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் "பைக்கா' விளையாட்டுப் போட்டி


கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி இன்று (6ம் தேதி) துவங்குகிறது. 

இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான  "பைக்கா' விளையாட்டுப் போட்டிகள் இன்று 6ம் தேதி துவங்குகிறது. 6, 7 தேதிகளில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியிலும், 9, 10 தேதிகளில் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 

                11 மற்றும் 12ம் தேதிகளில் காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 13, 14 தேதிகளில் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 16, 17 தேதிகளில் தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வடக்குப்பாளையம் தூய இருதய மேல் நிலைப் பள்ளியிலும், 18, 19 தேதிகளில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19, 20 தேதிகளில் எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 20, 21 தேதிகளில் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 21, 22 தேதிகளில் புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடக்கிறது. 

                    இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், போட்டி நடக்கும் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அல்லது ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior