நெய்வேலி:
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 5-ம் நாளாக தொடர்கின்ற நிலையில், போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக செப்டம்பர் 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 27-ம் தேதி மனிதசங்கிலிப் போராட்டமும் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியடைந்தது.இதையடுத்து தொமுச, அதொஊச, பாதொச உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஸ்கியூபாலத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தை வாழ்த்திப் பேசிய அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. செம்மலை, தொழிலாளர்களின் பணிநிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் உடனடியாக செவிசாய்த்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்
பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில்,
ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பலமுறை இதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்தியுள்ளேன். நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவளிக்கிறோம். எனவே நிர்வாகம் 2 தினங்களுக்குள் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
இல்லையெனில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டத்தை செப்டம்பர் 27-ம் தேதி நடத்துவார்கள் என்றார் வேல்முருகன்.உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் உள்ள தொமுச, பாதொச, அதொஊச, எல்எல்எப் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். உண்ணாவிரதப் போராடத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உண்ணாவிரதப் போராட்டம் பேச்சுவார்த்தை விளக்கப் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பேசிய பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், இது உண்ணாவிரதப் போராட்டம்தான் என்றார்.ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் மெயின்பஜார் காமராஜ் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.