தே.கோபுராபுரம் கிராமத்தில் எப்போதும் மூடியே கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம்.
விருத்தாசலம்:
கிராமப்புற மக்களின் நலனுக்காக பல கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் பல கிராமங்களில் பூட்டியே கிடக்கின்றன. இவை முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஓர் அம்சமாக கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வொரு கிராமத்திலும் கட்டாயமாக அரசு நூலகங்களை அமைத்து வருகிறது.அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், அனைத்து கிராமங்களுக்கும் தலா ரூ.3,80,000 முதல் ரூ.3,90,000 வரை நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படுகிறது. பின்னர் அரசு சார்பில் தளவாட பொருள்கள் மற்றும் புத்தகங்களுக்காக ரூ.1,00,000 ஒதுக்கப்படுகிறது.இந்திய விடுதலை வீரர்களின் சிறப்புகள், விடுதலைப் போராட்ட வரலாற்றை கூறும் நூல்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அம்பேத்கர், பெரியார் பற்றிய நூல்கள் மற்றும் அவர்களது படைப்புகள், திருக்குறள் போன்ற அற இலக்கிய நூல்கள் நூலகத்துக்கு வழங்கப்படுகின்றன. அரசு நிர்வாகத் தேர்வுகளுக்கு பயன்படும் நூல்களும் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் உள்ளன. செய்தி நாளேடுகளும் நூலகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், ஓய்வு நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் அரசு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.இந் நூலகத்தைப் பராமரிக்கவும், நூல்களை பாதுகாக்கவும் அப் பகுதிகளில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.750 ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. ஆனால், பல கிராமங்களில் இத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இன்னும் சில நூலகத்தில் புத்தகங்களே வந்து சேரவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. நூலகம் பூட்டியே கிடப்பதால் மாணவர்கள் மற்றும் நூல் வாசிப்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த நிலை விருத்தாசலம், கம்மாபுரம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது.ஓர் உதாரணம்விருத்தாசலம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 51 கிராமங்களில் இதுவரை 31 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2010 ஆண்டில் மேலும் 10 நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது. நூலகம் அமைக்கப்பட்ட கிராமங்கள் சிலவற்றில் நூலகம் மூடியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பயன்பாடின்றி கிடக்கும் நூலகங்கள் சிலவற்றில் சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. கிராம ஊராட்சித் தலைவர்கள் நூலகங்களுக்கு முக்கியத்துவம் தராததும், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நூலகப் பராமரிப்பு குறித்து ஊராட்சித் தலைவர்களிடம் கண்டிப்போடு அறிவுறுத்தாததும் இதற்கு முக்கியக் காரணம்.கருத்துப் புதையல்கள் குவிந்து கிடக்கும் புத்தகங்களை கிராமத்து மாணவர்கள் எளிதாகப் படித்து மகிழ உதவிய அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் மீது அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் விருப்பமாகும்.