உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

சம்பா சாகுபடி: கூடுதல் தண்ணீருக்கு காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்

வீராணம் ஏரியின் தோற்றம் (கோப்பு படம்).

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகளை முன்னரே தொடங்க வசதியாக, கொள்ளிடம் கீழணைக்கு கூடுதலாக காவிரி நீரைத் திறக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.

           காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை 28-ம் தேதி, 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. உடனேயே அது 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட நீரால் காவிரிக் கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கே பயன்பட்டது.

         கல்லணைக்கு வரும் 4 ஆயிரம் கனஅடி நீரில், கடலூர், நாகை மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு, 10 சதவீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற அடிப்படையில், 400 கன அடி மட்டுமே கொள்ளிடம் கீழணைக்குத் திறக்கப்பட்டது. இதனால் 9 அடி உயரம் கொண்ட கொள்ளிடம் கீழணையில், 5.6 அடி உயரத்துக்கே நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

           இந்த நிலையில் கொள்ளிடம் கீழணையில் இருந்து புதன்கிழமை பாசனத்துக்கு 550 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கு மண்ணியாறு உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் திறந்த சில மணி நேரத்திலேயே, வடவாறு தவிர ஏனைய வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. வடவாறில் தற்போது 550 கனஅடி நீர் முழுவதும் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் வியாழக்கிழமை பகல் 12 மணி வரை அந்த நீர் வீராணத்தைச் சென்றடையவில்லை. மேட்டூர் அணையில் காவிரிநீர் இருப்பு குறைவாக இருப்பினும், கடலூர் மாவட்டம் தவிர, ஏனைய டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் இன்னமும் முடிவடையாமல் இருப்பதே, மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்துக்கு குறைவான நீர், திறப்பதற்குக் காரணம் என்று, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

             வீராணம் ஏரியில் வியாழக்கிழமை நீர் மட்டம் 41.1 அடியாக இருந்தது. வீராணத்தில் நீர் மட்டம் 42 அடியாக உயர்ந்தால் மட்டுமே, சென்னைக்கு முழு அளவான 77 கனஅடி நீர் அனுப்ப முடியும். தற்போது நீர் மட்டம் குறைவாக இருப்பதால், 3 மோட்டார்கள் மட்டும் இயக்கப்பட்டு 55 கனஅடி நீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. வடவாறில் 1,000 கனஅடியாவது திறந்தால்தான், வீராணத்தின் நீர் மட்டத்தை ஒரு வாரத்தில் 42 அடிக்கு உயர்த்த முடியும், அதன்பிறகே சென்னைக்கு 77 கனஅடி நீர் அனுப்ப முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

           கடந்தஆண்டு காலம் கடந்து காவிரி நீர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் உளுந்து பயிரிட முடியாமல் போயிற்று. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 80 கோடிக்கு மேல். தமிழகத்தில் உளுந்து விலையும் அதிகரித்தது. அதனால்தான் சம்பா விவசாயத்தை முன்னரே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறிவருகிறோம்.  கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிட்டதால் சம்பா சாகுபடியை முன்னரே தொடங்க விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கவும், வீராணம் நீர் மட்டத்தை உயர்த்தவும் வசதியாக, கொள்ளிடம் கீழணைக்கு கல்லணையில் இருந்து உடனே கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ் கூறுகையில், 

                கீழணையில் இருந்து திறக்கப்படும் 550 கனஅடி நீர் முழுவதும், வடவாறில் விடப்பட்டு உள்ளது. எனினும் இந்த அளவு நீரைக் கொண்டு வீராணம் ஏரி 42 அடியை எட்ட காலதாமதம் ஆகும். கல்லணையில் கூடுதல் நீர் திறந்தால், பாசனத்துக்கும், சென்னைக் குடிநீருக்கும் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Read more »

சுரங்கப்பாதைக்கு டெண்டர்: நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை

கடலூர்:

            கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை விரைவில் டெண்டர் விடவேண்டும் எனக்கோரி, கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.

 கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: 

                 கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு ரயில்வே இலாகா சார்பில் டெண்டர் விடப்பட்டுவிட்டது. ரயில்வே துறைப் பணியும் நெடுஞ்சாலைத் துறை பணியும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான், மக்களுக்குப் பயனுள்ளதாகவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் இல்லாமலும், விரைவில் பணி நிறைவடையவும் வசதியாக இருக்கும். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடுவதில் தாமதம் ஆவதால், நகராட்சி மற்றும் மின்வாரியம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே விரைவில் டெண்டர் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Read more »

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்: பா.ம.க. கொண்டாட்டம்

விருத்தாசலம்:

              ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததை முன்னிட்டு விருத்தாசலத்தில் பாமகவினர் வியாழக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

             ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு அரசியல் அமைப்புகள், மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அமைச்சரவைக் குழு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமையில் பாமகவினர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வெடிவெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Read more »

தனது சொந்த நிதியில் 5 லட்சத்தில் அறக்கட்டளை உருவாக்கிய எம்எல்ஏ அய்யப்பன்

கடலூர்:

            கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தனது சொந்த நிதியில் இருந்து | 5 லட்சத்தில், கல்லூரி மற்றும் பள்ளிகளில் அறக்கட்டளைகளை உருவாக்கி இருக்கிறார். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், பேச்சுக் கலைப் பயிலரங்கமும் வியாழக்கிழமை நடந்தது.

விழாவில் அய்யப்பன் எம்எல்ஏ பேசுகையில், "

              இக்கல்லூரியில் விழாக்கள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வகையில், "டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி, அதற்குத் தேவையான நிதி |1 லட்சத்தைத் எனது சொந்த நிதியில் இருந்து வழங்குகிறேன்' என அறிவித்து, அந்தத் தொகையை உடனேயே வழங்கினார். மேலும் கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதுநகர் பிலோமினாள் மேல்நிலைப் பள்ளி, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கும், தலா 1 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அய்யப்பன் தெரிவித்தார். 

                      கல்லூரி விழாவுக்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழாழி கொற்கை வேந்தன் தலைமை வகித்தார்.விழாவை கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார். புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளங்கோ சிறப்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் அர்த்தநாரி வரவேற்றார். முனைவர் குமரன் நன்றி கூறினார்.

Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில்; கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு

கடலூர்: 

             சுதந்திர தினத்தை முன் னிட்டு அனைத்து ஊராட் சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.
 
             கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தின் விபரம், நடைபெறும் இடம், நேரம், விவாதிக்கப்படவுள்ள பொருள் கள் பற்றி ஊராட்சி மன்ற கட்டடத்திலும், தொலைக் காட்சி அறையிலும், சமுதாயக்கூடத்திலும் மக்கள் பார்வைக்கு விளம்பர பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

             வரும் 15ம் தேதி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டிய பொருள்கள் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் தேர்வு செய்திடவும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்து அங்கீகாரம் செய்தல், ஊரக, பொங்கல் விளையாட்டு போட்டிகள்  நடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். பொது நிதியிலிருந்து குடிநீர், மின்சாரம்,பொது சுகாதாரம், செலவின் அறிக்கை சபையில் படித்து ஒப்புதல் பெற வேண்டும்.
 
                 கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப்பட்ட பட்டியலை பார்வைக்கு வைப்பது, ஊராட்சி மன்றத் தலைவரால் அல்லது ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி பெற்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்படும் இதர பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும். இந்த பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் அனுப்பப்படுவார்.  கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழுவினர், கிராம மக்கள்  பங்கேற்க வேண் டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Read more »

தமிழகத்தில் 7.44 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

கடலூர்: 

             தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 44 ஆயிரத்து 87 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை செயலர் தனவேல் கூறினார்.
 
கடலூரில் வருவாய்த்துறை செயலர் தனவேல் கூறியதாவது:

              வருவாய்த்துறை பணிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் இன்று (நேற்று)  ஆய்வு மேற் கொள்ளப்பட் டது.  வி.ஏ.ஓ., க்களுக்கான பணி பளுவை குறைத்து பொது மக்கள் கொடுக்கக் கூடிய மனுக் கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக கம்ப்யூட் டர் மயமாக்கும் முறையை கொண்டு வந்துள்ளோம். அடுத்த கட்டமாக குறுவட்டம் அளவிலும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 12,300 வி.ஏ.ஓ., க்களுக்கு அரசு குடியிருப்பு கட்டி தரப்பட் டுள்ளது. 

             நில அளவைத் துறையில் 725 சர்வேயர் பணியிடங்களை நிரப்ப அரசு ஆணை விரைவில் பிறப்பிக்க உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய நில பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் முலம் தாசில் தார் அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம் கம்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக  41.3  கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை தமிழகத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 390 பேருக்கு 2 லட் சத்து 12 ஆயிரத்து 268 ஏக் கர் இலவச நிலப்பட்டாவும், 7 லட்சத்து 44 ஆயிரத்து 87 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

                தமிழ்நாடு விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர் நல வாரியம் மூலம் 75 லட்சத்து 93 ஆயிரத்து 769 பேருக்கு  அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் தடுப்பு மேலாண்மை திட்டம் மூலம் 14 புதிய பாதுகாப்பு மையங்கள் 19.04 கோடியில் கட்டப்பட உள்ளது. மேலும் 9.45 லட்சம் மதிப்பில்  21 புதிய இயற்கை இடற்பாடு முன்னெச்சரிக்கை மையங்கள் அமைக் கப்படவுள்ளது.

Read more »

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் முதலிடம்: பன்னீர்செல்வம்

நடுவீரப்பட்டு: 

         அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலாவதாக உள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

சி.என். பாளையத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியது :

                சி.என். பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக  நானே முன் வந்து தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்தேன். 1996ம் ஆண்டு நெல்லிக் குப்பம் தொகுதி இடைத் தேர்தல் நடந்தபோது தொகுதி முழுவதும் 15 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன. அதில் சி.என். பாளையம் பகுதியில் 1 கோடி ரூபாய் பணிகள் நடந்தன.நமது முதல்வர் கிராம பகுதிகள் மற்றும் நகரங்களில் பாலம் கட்டி மக்கள் மனதில் இடம் பெற வைத்துள்ளனர். இந்த பாலம் இரண்டு ஊராட்சியை இணைக்கும் பாலம் என்பதால் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.  

                  கொள்ளிடத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பிலும், நொச்சிக்காடு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும்  பாலம் கட்டப்பட்டு வருகிறது.கருணாநிதி ஆட்சியில் சாதனைகள் பல நடந்து வருகின்றது. ஜெ., ஆட்சியில் சி.என்.பாளையம் ஊராட்சியில் ஏதாவது நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதா என எண்ணிப் பாருங்கள். இந்த அரசு சொன்னதை செய்யும் என பேசினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 4.56 கோடி மானியம் விடுவிப்பு: சீத்தாராமன்

கடலூர்: 

            கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4.56 கோடி ரூபாய் அரசு மானியத் தொகையை விடுவித்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 
           ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாநில நிதிக் குழு மானியமாக வழங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 2010 மாதத்திற்கானது மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சிக்கு 10 லட்சத்து 2 ஆயிரத்து 429 ரூபாயும், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 95 லட்சத்து 56 ஆயிரத்து 9ம், 681 கிராம ஊராட்சிகளுக்கும் 3 கோடியே 47 லட்சத்து 98 ஆயிரத்து 718 ம் ஆக 4 கோடியே 56 லட்சத்து 57 ஆயிரத்து 156 ரூபாயும் விடுவித்து வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளைப் பொறுத்தவரை மேற்கண்ட தொகையிலிருந்து ஊராட்சி நிர்வாக செலவிற்காக ஊராட்சி நிதி கணக்கு எண் 1க்கு 2 கோடியே 48 லட்சத்து 34 ஆயிரத்து 741 ரூபாயும், மின்கட்டணம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் செலுத்துதல் செலவிற்காக, ஊராட்சி நிதி கணக்கு எண் 2க்கு 99 லட்சத்து 63 ஆயிரத்து 977 ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

                    எனவே மாவட்ட ஊராட்சி அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் பணியாளர்களுக்கு ஊதியம் நிலுவையின்றி வழங்கிய பின் தங்கள் பகுதிகளில் தேவையான குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் எடுத்து செய்ய வேண்டும்.  ஊராட்சி பணியாளர்களுக்கு முழுமையாக ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்குதல், நூலக வரித்தொகை நூலக ஆய்வுக்குழுவிற்கு செலுத்தப்பட வேண்டும். ஊராட்சி பணியாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்ட சந்தா, பங்குத் தொகை கட்டப்பட வேண்டும். ஊராட்சி பணிகளில் பிடித்தம் செய்து நிலுவையில் உள்ள பல்வேறு வரியினங்களை உரிய தலைப்பில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Read more »

ஊர்க்காவல் படை கோட்ட தளபதிக்கு; சிதம்பரத்தில் பிரிவு உபசார விழா

சிதம்பரம்: 

          சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை கோட்ட தளபதி கோவிந்தராஜனுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது. சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை கோட்ட தளபதியாக பணியாற்றிய கோவிந்தராஜனுக்கு பிரிவு உபசாரவிழா ஓட்டல் சாரதாராமில் நடந்தது. கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தளபதி கேதார்நாதன் வரவேற்றார். சரக உதவி தளபதி டாக்டர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.  நிகழ்ச்சியில் துணை வட்டார தளபதி பேராசிரியை ஜெயந்திரவிச்சந்திரன், பத்மாகோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

Read more »

தொழில் முறைக் கல்வி பயிலக துவக்க விழா

சிதம்பரம்: 

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் முறைக்கல்வி பள்ளி ஆசிரியர்கள் பயிலக துவக்க விழா நடந்தது.  

               தேசிய தொழிற்பயிற்சி ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி குழும பண்டிட் சுந்தர்லால் தொழில் முறைக்கல்வி மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வணிகவியல் துறை சார்பில் கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கை பாடங்களில் தொழில் முறைக்கல்வி குறித்த சிறப்பு முகாம் துவங்கியது.  துணை வேந்தர் ராமநாதன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சந்திரமோகன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ் நிலையத்தின் செயல்பாடு மற்றும் நோக்கம் குறித்துப் பேசினார்.  நிகழ்ச்சியில் பேராசிரியர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சங்கர் நன்றி கூறினார். தென் மாநிலம் முழுவதிலும் இருந்து 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

House keys given to the tsunami-hit

CUDDALORE: 

              Health Minister M.R.K. Panneerselvam on Wednesday handed over the keys of permanent houses to 131 tsunami-affected coastal families at Rasapettai near here. The houses were built at a cost of Rs. 3.37 crore.

             The Minister said that the houses were constructed under the Rajiv Gandhi Rehabilitation Programme. With this, as many as 1,580 permanent houses were built under the programme at a total cost of Rs 37.82 crore and handed over to the beneficiaries in the district. Mr. Panneerselvam also said that under the programme, construction of 3,627 more houses — 1,838 units to be built in urban areas by the Tamil Nadu Slum Clearance Board and 1,789 units by the District Rural Development Agency — was being taken up at a cost of Rs. 83.95 crore.

             Mr. Panneerselvam said that roads were constructed at a cost of Rs. 7.15 crore and 23 panchayat union offices at a cost of Rs. 78.57 lakh in the tsunami affected areas. For improving livelihood support, as many as 3,960 self-help groups were formed and a revolving fund of Rs. 10.71 crore and loan amounting to Rs. 3.87 crore were given away, the Minister said. Collector P. Seetharaman, and Cuddalore Municipal Chairman T. Thangarasu were present.

Read more »

Human chain at the Cuddalore Uzhavar Sandhai

CUDDALORE: 

               Members of the Federation of All Residents' Welfare Associations and S.S.Subbaraya Nagar Residents' Welfare Association formed a human chain at the Uzhavar Sandhai here on Thursday. It was aimed at drawing the attention of authorities to the need for the speedy execution of a subway at the Lawrence Road level-crossing here.

Read more »

பரங்கிப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை: 

           பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத்துறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

            பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலை துறை சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சஞ்சீவிராயர் கோவில் தெருவில் இருந்து சின்னக்கடை வரை, பெரியக்கடை ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். 

                  சின்னக்கடை, சஞ்சீவிராயர் கோவில் தெரு ஆகிய இடங்களில் எதிர் எதிரே இரண்டு பஸ்கள் வந்து விட்டால் ஒதுங்கக்கூட இடமில் லாத நிலை ஏற்படுகிறது.  இதுபோன்ற நேரங்களில் அவசரத்திற்காக வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களின் நிலைமை படுமோசம். இதனால் அகரம் ரயிலடியில் இருந்து பரங்கிப்பேட்டை சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத் துறை சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior