தமிழகத்தில் உள்ள சிறிய துறைமுகங்கள் தற்போது தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், புதிய தொழிற்சாலைகள் உருவாகவும்; நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு பெருகவும்; பொருளாதாரம் வளர்ச்சியடையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் என மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இந்த மூன்று பெரிய துறைமுகங்கள் தவிர, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், பாம்பன், குளச்சல், வாலினோக்கம், கன்னியாகுமரி, எண்ணூர், புண்ணக்காயல், திருக்கடையூர், பி.ஒய்-3 ஆயில் பீல்டு, காட்டுப்பள்ளி, திருச்சோபுரம், மணப்பாடு, கூடங்குளம் உள்ளிட்ட 15 சிறிய துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. சிறிய துறைமுகங்களை மேம்படுத்தினால் கிடைக்கும் லாபத்தை கருத்தில் கொண்டு, தமிழக கடல்சார் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறிய துறைமுகங்களை மேம்படுத்தினால், அவைகளைச் சுற்றி எண்ணெய் தொழிற்சாலைகள், அனல் மின் நிறுவனங்கள், நங்கூரம், சங்கிலி போன்றவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவை உருவாகும்.
துறைமுகம் மற்றும் அதன் அருகில் தொழிற்சாலைகள் ஏற்படுத்துவது குறித்து கடந்த 2007ம் ஆண்டு மாநில அரசு கடல்சார் கொள்கை ஒன்றை அறிவித்தது. இதன்படி, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட துறைமுகம் அருகிலேயே தொழிற்சாலைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த 2006ம் ஆண்டில் 15 என இருந்த சிறிய துறைமுகங்கள் தற்போது 20 ஆக அதிகரித்துள்ளன. சென்னையில் இருந்து 200 கி.மீ., தெற்கே உள்ளது கடலூர் துறைமுகம். தமிழக கடல் சார் வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த துறைமுகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் கடல் அரிப்பை தடுக்கும் தடுப்பு சுவர்கள், நிர்வாக அலுவலகம், கப்பல்கள், படகுகள் நிறுத்துமிடங்கள் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டது. நிதி பிரச்னை காரணமாக இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, தனியார் மூலம் இத்துறைமுகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகத்தை மேம்படுத்துதல், பராமரித்தல், பகிர்வு, பரிமாற்றம் ஆகியவற்றிற்காக 30 ஆண்டுகள் சலுகை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பிளாஸ்ட் நிறுவனம், தனது நிறுவனத்திற்கு தேவையான பாலி வினைல் குரோரைடு கையாளுவதற்காக கடலூர் துறைமுகத்தில் மெரின் டெர்மினல் வசதிகளை செய்துள்ளது. கடலூர் பவர்ஜென் கார்ப்பரேஷன் நிறுவனம் 325 கோடி ரூபாய் செலவில் கடலூர் துறைமுகத்தில் கப்பல் சரக்குகளை வைக்குமிடம் அமைக்க திட்டமிட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயை சுத்திகரிக்கவும், சரக்குகளை கையாளவும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் தேவையான கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள மற்ற துறைமுகங்களும் தனியார் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சிறிய துறைமுகங்களின் இன்றைய நிலை
காட்டுப்பள்ளி:
எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் செலவில் கப்பல் கட்டும் பணி உள்ளிட்ட தனியார் துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முகையூர்:
மாமல்லபுரம் அருகே உள்ள முகையூர் ஒரு சிறிய துறைமுகம் என சமீபத்தில் அரசு அறிவித்தது. இங்குள்ள துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் செலவில் கப்பல் பழுது பார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
பரங்கிப்பேட்டை:
ஐ.எல்., மற்றும் எப்.எஸ்., லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்டுள்ள இத்துறைமுகத்தில், ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கையாளப்பட உள்ளது.
திருசோபுரம்:
கடலூர் மாவட்டம், திருசோபுரத்தில், ஆயிரத்து 800 கோடி ரூபாயில் துறைமுகம் அமைக்க நாகர்ஜுனா எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு குரூட் ஆயில் மற்றும் பெட்ரோலியம் பொருட்களை இறக்குமதி செய்து, அந்த நிறுவனம் சுத்திகரிக்கும்.
சிலம்பிமங்கலம்:
கடலூர் மாவட்டம், சிலம்பிமங்கத்தில் 500 கோடி ரூபாயில் துறைமுகம் அமைத்துக் கொள்ள குட்எர்த் ஷிப் பில்டிங் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 75 ஆயிரம் டன் எடை வரையுள்ள கப்பல்களை நிறுத்தலாம்.
காவேரி:
நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் அருகே பெல் பவர் என்ற தனியார் நிறுவனம் 200 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 320 மெகாவாட் மின் நிலையம் அமைக்கிறது. இதற்கு தேவையான நிலக்கரியை கையாளக்கூடிய வகையில் காவேரி துறைமுகத்தை இந்நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.
வானகிரி:
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகா அருகே என்.எஸ்.எல்., பவர் என்ற தனியார் நிறுவனம் 250 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 500 மெகாவாட் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கையாளக்கூடிய வகையில் இத்துறைமுகத்தை சீரமைத்து வருகிறது.
திருக்கடையூர்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூரில் பி.பி.என்., பவர் ஜெனரேட்டிங் என்ற தனியார் நிறுவனம் 330 மெகா வாட்மின் உற்பத்திநிலையத்தை துவக்கியுள்ளது. இத்தொழிற்சாலைக்கு நாப்தா மற்றும் இயற்கை வாயுவை கொண்டு வருவதற்காக கடந்த 1996ம் ஆண்டு துறைமுகம் அமைக்கப்பட்டது.
திருக்குவளை:
நாகப்பட்டினம் மாவட்டம், வேட்டைக்காரன் இருப்பு என்ற இடத்தில் டிரிடெம் போர்ட் மற்றும் பவர் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் 650 கோடி ரூபாய் செலவில் 2000 மெகாவாட் மின் நிலையம் அமைத்துள்ளது. இதற்கு தேவையான நிலக்கரியை கையாள வேண்டி, 276 ஏக்கர் நிலத்தில் துறைமுகம் அமைக்க இந்த நிறுவனத்திற்கு ஆண்டு குத்தகை அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மணப்பாடு:
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடில் சிறிய துறைமுகம் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, இந்தியன் பவர் புராஜக்ட் என்ற தனியார் நிறுவனம் 2 ஆயிரம் மெகாவாட்டில் காஸ் டர்பைன் மின் உற்பத்தி நிலையத்தை நிறைவேற்ற உள்ளது. இதற்காக இந்த நிறுவனத்திற்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம்:
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சார உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இதற்காக, இத்துறைமுகத்தில் ஒரு கிலோ மீட்டர் நீளம் 500 மீட்டர் அகலத்தில் கடல்நீரை சேமித்து வைக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுகிறது. பவர்பிளாண்ட், ஆர்.சி.சி., ஜெட்டி ஆகியவை 340 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
பனையூர்:
இங்கு கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் 4 ஆயிரம் மெகாவாட் மின்திட்டத்திற்கு தேவையான நிலக்கரி கையாளப்படும் அளவிற்கு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
உடன்குடி:
சென்னை உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம், இத்துறைமுகத்தில் 600 கோடி ரூபாய் செலவில் கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குமிடம் கட்ட உள்ளது. சூப்பர் அனல்மின் நிலைய திட்டத்தின் ஆயிரத்து 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இந்த துறைமுகத்தில் கையாளப்படும்.
முதலில் சாலை...! அடுத்தது துறைமுகம்...!
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, நாட்டில் உள்ள முக்கிய சாலைகளை நான்கு மற்றும் ஆறு வழி போக்குவரத்து கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதன் மூலம், டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகியவை தற்போது "தங்க நாற்கர சாலை' திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை இணைக்கும் சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகள், பல ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு நான்கு, ஆறு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான சாலை மேம்பாட்டு திட்டங்களில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாட்டில் உள்ள துறைமுகங்களையும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.