புதுடில்லி :
தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பிரமாண்ட பணி நேற்று துவங்கியது. முதல் குடிமகன் என்ற அந்தஸ்துடைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தனது விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலர்களிடம் வழங்கினார். பதினைந்தாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. பதிவாளரும், மக்கள் தொகை ஆணையருமான சந்திர மவுலி, துணை இயக்குனர் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று இப்பணியை துவங்கினர். இதையொட்டி, பிரதிபா பாட்டீலிடம் விவரங்களை சேகரித்தனர். அதன், பின், துணை ஜனாதிபதி அமீது அன்சாரியிடம் சேகரித்தனர்.
இது குறித்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் எல்லாரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். இதன் மூலம், தனி நபர் மட்டுமின்றி, நாடும் பல வழிகளில் பயன் பெறமுடியும். இவ்வாறு பிரதிபா பாட்டீல் கூறினார்.
மக்கள் தொகை ஆணையர் சந்திரமவுலிகூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, இரண்டு கட்டமாக நடைபெறும். இதற்காக மொத்தம் 5,956 கோடி செலவிடப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்படும். இப்பணிகளை முடிக்க 45 நாட்கள் ஆகும். அசாம், மேற்கு வங்கம், புதுடில்லி, மேகாலயா மற்றும் கோவா மாநிலங்களில் நேற்று முதல் பணிகள் துவங்கின. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பணிகள் துவங்குவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. இரண்டாம் கட்டமாக, மற்ற மாநிலங்களில் அடுத்த வருடம் பிப்ரவரியில் பணிகள் துவங்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, எத்தனை பேரிடம் மொபைல் போன்கள் உள்ளன, கம்ப்யூட்டர் வைத்துள்ளவர்கள் எத்தனை பேர், இன்டர்நெட் பயன் பாட்டை பெறுபவர் எவ்வளவு, எத்தனை பேருக்கு குடிநீர் வசதி கிடைத்துள்ளது, எத்தனை பேர் வங்கிக் கணக்குகளை வைத்து உள்ளனர் என்பது போன்ற விவரங்களும் முதன் முறையாக சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சந்திரமவுலி கூறினார்.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்:
இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக 102 கோடி மக்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர், மக்கள் பிரதிநிதி என, அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்' என்றார்.
downlaod this page as pdf
Read more »