உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 15, 2011

விருத்தாசலம் அருகே பழுதடைந்த வேளாண்மை விரிவாக்க மையம்


விருத்தாசலத்தை அடுத்த பாலக்கொல்லையில் பழுதடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் வேளாண்மை விரிவாக்க மையம்.
விருத்தாசலம்:

          விருத்தாசலம் அருகில் உள்ள பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மையம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இம்மையத்திலேயே வேளாண் பொருள்கள் வைக்கப்படுவதால் பாதுகாப்பாக இருக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  

              விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதி பாலக்கொல்லை கிராமம். இங்கு தமிழக அரசு சார்பில் வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பாலக்கொல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்குத் தேவையான வேளாண் பொருள்களான ஜிப்சம் உள்ளிட்ட உரங்களை வைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.  

             ஜிப்சம் உள்ளிட்ட உரவகைகள் பல்லாயிரக்கணக்கில் மதிக்கத்தக்கதாகும். ஆனால் உரங்கள் மற்றும் வேளாண்மை பொருள்கள் வைத்திருக்கக்கூடிய பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையிலும், பராமரிப்பு இல்லாத நிலையிலும் உள்ளது.  

இதுகுறித்து பாலக்கொல்லை கிராம மக்கள் தெரிவித்தது:  

               வேளாண்மை விரிவாக்க மையம் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது. கட்டடத்தின் முன்பக்கம் செடிகொடிகள், முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் இங்கு வைத்திருக்கும் உரம் போன்ற பொருள்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.  மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடம், சுகாதார வளாகம் என பல்வேறு கட்டடங்கள் கட்டித்தரும் அரசு பழுதடைந்துள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.  

               எனவே தொடர்புடைய துறை அதிகாரிகள் பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Read more »

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 200 கம்பெனி துணை ராணுவம்: டி.ஜி.பி.லத்திகாசரண்







கடலூர்: 

         ""தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 200 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்'' என தமிழக டி.ஜி.பி., லத்திகாசரண் கூறினார்.

              கடலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் 4.38 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எஸ்.பி., அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று காலை நடந்தது. டி.ஜி.பி., லத்திகாசரண் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், வடக்கு மண்டல ஐ.ஜி., குடாவ்லா முன்னிலை வகித்தனர்.

பின்னர் டி.ஜி.பி., லத்திகாசரண்  கூறியது: 

            கடலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போதிய இட வசதியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். அதனால் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 3,300 சதுர அடியில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு முதல் எங்கெங்கு போலீஸ் அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதோ அங்கெல்லாம் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

              அதன்படி திருவாரூரில் மாவட்ட போலீஸ் அலுவலகம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. அதேப்போன்று தேவைப் படும் இடங்களில் கமிஷனர் அலுவலகமும் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளது. இதற்காக 200 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளனர். தமிழகத்தில் உள்ள பதட்டமான, மிக பதட்டமான தொகுதிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

               அவை முடிந்தவுடன் கலெக்டருடன் பேசி இறுதி செய்யப்படும். இவ்வாறு டி.ஜி.பி., லத்திகாசரண் கூறினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாவட்ட நீதிபதி ராமபத்ரன், கூடுதல் கலெக்டர் வீரராகவராவ் உடனிருந்தனர்.

Read more »

எஸ்.எம்.எஸ்.வழியாக ஓட்டுப்பதிவு நிலவரம் தேர்தல் ஆணையம் ஏற்பாடு

காட்டுமன்னார்கோவில் : 

              ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஓட்டுப்பதிவு குறித்த நிலவரத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் உடனடியாக தெரிவிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. 

               தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி இதுவரை இல்லாத அளவில் தற்போது தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப்பிடியால் அரசியல் கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி. 20ம் தேதியில் இருந்து மாதிரி தேர்தல் பயிற்சி. பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் சமயோஜிதமாக நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

               முதல் முறையாக தேர்தல் அலுவலர்களுக்கு பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் எந்த பிரச்னை குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கோ, தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 242 சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளின் நிலை குறித்து தேர்தல் ஆணையம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதுவாக யோசனை செயல்படுத்தியுள்ளனர். 

             இதில் ஓட்டுச்சாவடியில் உள்ள அதிகாரி 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம், ஆண், பெண் எண்ணிக்கை குறித்த விவரங்களை உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதே சமயம் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பிரச்னை குறித்தும் தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சரியான தகவல்களை பெறமுடியும் என்பதால் தேர்தல் கமிஷன் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Read more »

ரூ.13 கோடியில் கடலூர் கெடிலம் நதிக்கரை சீரமைப்புத் திட்டம்

கடலூர்:

             கடலூரில் கெடிலம் நதிக்கு இருபுறமும் ரூ. 13.75 கோடியில், கரைகளை சீரமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

             கடலூர் மாவட்டத்தை இயற்கை இடர்பாடுகளில் இருந்து காப்பாற்ற, கெடிலம் ஆறு, பெண்ணையாறு, மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு ஆகியற்றின் கரைகளை பலப்படுத்தும் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 232 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் ரூ. 13.75 கோடியில் கடலூர் கெடிலம் ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டு உள்ளது.

                     இத்திட்டத்தில் கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம் முதல், கடலூர் வழியாகத் தேவனாம்பட்டினம் வரை, இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. கரைகள் இல்லாத பகுதிகளில் புதிதாகக் கரை அமைக்கப்படுகிறது. கரைகள் 3.5 மீட்டர் உயரம், 5 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இத்தகைய பணி கடலூரில் நடைபெற்றது இல்லை என்று கூறப்படுகிறது.

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கினார்

கடலூர்:

             கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் குணா என்ற குணசேகரன் வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். 

                      கடலூர் தொகுதி பாஜக வேட்பாளராக கடலூர் மார்க்கெட் காலனியைச் சேர்ந்த குணசேகரன் (36) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜக மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தொகுதி பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.  குணசேகரன் தனது தேர்தல் பிரசாரத்தை மார்க்கெட் காலனியில் வெள்ளிக்கிழமை தொடங்கினார். அவருடன் பாஜக நகரத் தலைவர் வெங்கடேசன், முன்னாள் நகரத் தலைவர் தேவநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

              கடலூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களாக பண்ருட்டி தொகுதிக்கு, தொகுதி பொறுப்பாளர் செல்வகுமார், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வைரக்கண்ணு, நெய்வேலி தொகுதிக்கு மாநில மகளிரணி அமைப்பாளர் கற்பகம் மோகன், விருத்தாசலம் தொகுதிக்கு வேல்முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் 2 நாள் சிறப்பு முகாம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. நகராட்சி அவலுவலகங்கள். ஊராட்சி ஒன்றிய அலவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

                  கடலூர் நகராட்சி அலுவலகத்திலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே  1-7-2010, 15-9-2010, 10-1-2011 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டில்களில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டும், புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தால், இந்த முகாமில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க பதிவு செய்து கொண்ட பலரும், இந்த முகாமுக்கு வந்து அடையாள அட்டைகளைக் கோரியதால் பெரிதும் சலசலப்பு ஏற்பட்டது.

                 அறிவிக்கப்பட்ட காலத்தில் பெயர்களை சேர்க்காமல் இருந்து விட்டு, கடைசி நேரத்தில் பெயர்களை கொடுத்து உடனேயே அடையாள அட்டைகள் கிடைக்கும் என்று நம்பி வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வேண்டிய நபர்கள், இன்னும் அதிகமாக இருப்பதை எடுத்துக் காட்டுவதாகவே முகாம் அமைந்து இருந்தது. போதிய விழிப்புணர்வற்று இருப்பதால் பலர், தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

                 மேலும் இந்த முகாமில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில், அச்சுப் பிழைகள் அதிகமாக இருந்ததாக வாக்காளர்கள் பலர் தெரிவித்தனர். பலருடைய பெயர்கள், தந்தை பெயர் உள்ளிட்டவை தவறாக அச்சிடப்பட்டு இருப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்தனர். இப்பிழைகளால் வாக்குப் பதிவின்போது, வாக்களிப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டு, வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடுமோ? என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.

Read more »

சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிருப்தியில் விவசாயிகள்

சிதம்பரம்:

               முழுமையான வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வழங்கப்படாதததால் ஆளும் திமுக அரசின் மீது சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

               கடலூர் மாவட்டத்தில் 2010 கடைசியில் பெய்த கன மழையினால், வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டதாலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 தினங்களுக்கு மேலாக நீர் சூழ்ந்து இயல்பு நிலை பாதித்தது. அப்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடி நிவாரணமான உணவு மற்றும் அரிசி சரியாக வழங்கப்படவில்லை.

               ஆள் பற்றாக்குறை, இடுபொருள்களின் விலையேற்றம், உரத் தட்டுபாடு, நெல்லுக்கு போதிய விலை இல்லாததது இவைகளை மீறி விவசாயிகள் சம்பா சாகுபடி பயிரிட்டனர். இந்நிலையில் கன மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்து பயிர்கள் மூழ்கி மேலும் சேதத்தை ஏற்படுத்தியது. வெள்ள நீர் வடிந்த பிறகு எப்போதும் போல் மத்தியக் குழுவினர் வந்து வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

              விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும் என கோரினர். ஆனால் அரசு ஹெக்டேருக்கு ரூ.8ஆயிரம் என அறிவித்தது. அந்த தொகையும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 50 சதவீதம்தான், உதாரணமாக ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் என நிவாரணம் வழங்கப்பட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். 

                 முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு குடிசைகளுக்கு தலா ரூ.1500 வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.÷ஆனால் வெள்ள நீர் புகுந்த குறிப்பிட்ட குடிசைகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படாததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தினந்தோறும் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்களால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதும், போலீசார்  அவர்களை சமரசப்படுத்துவதுமாக அப்பிரச்னை முடிவுற்றது.

                ஆனால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை.  2005-ம் ஆண்டு வெள்ளத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1500 நிவாரணம் வழங்கியுள்ளது. தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் போதிய நிவாரணம் வழங்கப்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆளும் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை சரியாக வழங்கப்படவில்லை.  இந்த அதிருப்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக திரும்பும் என தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் மா.கோ.தேவராசன் தெரிவித்தார்.

Read more »

பெண் கல்வியால் நாட்டின் வளங்கள் பெருகும்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன்

கடலூர்:

            பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியால் நாட்டின் வளம் பெருகும் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார். 

             கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், 17-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. 

விழாவில் மாணவ, மாணவிகள் 709 பேருக்கு பட்டங்களை வழங்கி துணைவேந்தர் ராமநாதன் பேசியது: 

          பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி மூலம் நாட்டின் வளத்தைப் பெருக்க முடியும். நாம் நமது தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து செயல்படுவதன் மூலம் பல வெற்றிகளைப் பெறமுடியும். மாணவர்கள் விளக்குகளைப் போன்றவர்கள். ஒரு விளக்கின் மூலம் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும். 

               பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கல்வியால் மட்டுமே சமுதாயத்தை உயர்த்த முடியும் என்றார் துணை வேந்தர். பல்கலைக்கழக அளவில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 22 மாணவ, மாணவியர் கௌரவிக்கப் பட்டனர். விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமைத் தாங்கினார். புனித வளனார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள், விடுதிக் காப்பாளர் சூசைக்கண்ணு அடிகள், கல்லூரி துணை முதல்வர் அருமைச் செல்வம், ஆங்கிலத் துறைத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், தேர்வுத்துறை இயக்குநர் பெரியநாயக சாமி, கல்லூரி மேலாளர் அந்தோனி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத் தொகுதிகள்: சிதம்பரம், புவனகிரி - ஓர் அலசல்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தொகுதி பங்கீடுகள் பின்வருமாறு இருக்கலாம்.

             கடலூர், விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், புவனகிரி, நெய்வேலி ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், திட்டக்குடி, காட்டுமன்னார்குடி ஆகிய தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் தி.மு.கழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

             மேலும் குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம், நெய்வேலியில் பா.ம.க.வின்  வேல்முருகன், காட்டுமன்னார்குடியில் நடப்பு உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடலாம் என்றும் தெரியவருகிறது சிதம்பரம் தொகுதியைப் பொறுத்தவரை, மறு சீரமைப்பில் புவனகிரி தொகுதியிலிருந்து சில ஊர்களை அது கூடுதலாகப் பெற்றுள்ளது.

             தி.மு.க அணியில் சிதம்பரம் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதை பொறுத்த வரையில் மாவட்ட அரசியலே பிரதான காரணியாக இருக்கிறது. எது எப்படியோ சிதம்பரம் தொகுதி பற்றி," நம் கட்சி போட்டியிடுமா? நம்மவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?" போன்ற மணிக்கொருதரம் மெருகேற்றப்படும் கலவையான கருத்துக்களுடன் விவாதங்கள் ஆங்காங்கே பலமாக நடைபெற்று வருகிறது

                 அ.தி.மு.க சார்பில் அருண்மொழிதேவன் M.L.A, முன்னாள் அமைச்சர் கலைமணி, தோப்பு சுந்தர், V.K.மாரிமுத்து, உள்ளிட்டோரும், தே.மு.தி.க சார்பில் சபா.சசிகுமார், ஷபியுல்லாஹ், காங்கிரஸ் சார்பில் பரங்கிப்பேட்டை R.குமாரமுருகன், சத்தியமூர்த்தி, P.P.K.சித்தார்த்தன், வழக்கறிஞர் வேல்முருகன், ராதாப்பிள்ளை உள்ளிட்டோர்களும், சிதம்பரம் அல்லது புவனகிரி தொகுதிக்காக முயற்சி செய்து வருகின்றனர். புவனகிரி தொகுதிக்காக நடப்பு எம் எல் ஏ வான  பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த செல்வி இராமஜெயம் M.L.A. விண்ணப்பித்துள்ளார்.

                பா.ம.க சார்பில் தேவதாஸ் படையாண்டவர், V.M.S.சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்கிறார்.இதில் சிலர் மிகத் தீவிரமாக தங்கள் கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்களின் தொடர்பின் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்

                 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், கடந்த வெள்ளியன்று காலை நடைப்பெற்ற நேர்காணலில் பரங்கிப்பேட்டையிலிருந்து விருப்ப மனு தாக்கல் செய்திருந்த பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், A.R.முனவர் ஹுசேன், M.K.பைசல் யூசுப் அலி, கைருன்னிசா, புருஷோத்தமன், ஒன்றிய சேர்மன்கள் முத்து.பெருமாள், செந்தில் குமார், மாமல்லன், முன்னாள் M.L.A. சரவணன், தச்சக்காடு ராமதாஸ், டாக்டர் அமுதா பெருமாள், திருமாறன், கோவிந்தராஜ், ஷாஆலம், பேராசிரியர் சபாபதி மோகன், உட்பட 31 நபர்கள் சிதம்பரம் தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தனர், இவர்கள் அனைவர்களையும் ஒரே நேரத்தில் அழைத்து, உங்கள் அனைவர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி, காலமின்மையால் தனித்தனியே சந்திக்க முடியவில்லை, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுங்கள், தலைவர் முடிவினை அறிவிப்பார் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பேராசிரியர் சபாபதி மோகன் புவனகிரி தொகுதிக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார்.

          முன்னதாக புவனகிரி தொகுதிக்காக நடைப்பெற்ற கூட்டு நேர்காணலில், "புவனகிரி தொகுதியில் தி.மு.க எப்போது வெற்றி பெற்றது? உள்ளிட்ட சில கேள்விகள் நேர்காணலில் பங்கேற்றோரிடம் கேட்கப்பட்டது, மேலும் பங்கேற்றோர் அனைவர்களும் ஒரே குரலில் தி.மு.கழகம் புவனகிரியில் போட்டியிட வேண்டும் என்று நேரடி வேண்டுகோளும் கட்சித் தலைமையிடம் விடுத்துள்ளனர். ஆனால் புவனகிரி தொகுதியினை காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், பா.ம.க மறுப்பதாகவும் நேற்றிரவு கிடைத்த தகவல் உறுதிப்படுத்துகிறது

            தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு சிதம்பரம் தொகுதியை முஸ்லிம் லீக் கேட்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. வெற்றி தோல்வியைப் பொறுத்தவரை, திமுகவுக்கு சற்றே ஆதரவு அதிகமிருந்தும் கடந்த முறை புவனகிரியில்  அதிமுக வென்றதற்கு வேட்பாளரின் நற்பெயரும் பெருங்  காரணமாக அமைந்தது எனலாம்.  சென்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு "இலுப்பைப்பூ'வாக  இத்தொகுதி அமைந்தது.

                திமுக-காங்கிரஸ் இடையேயான பங்கீடு முடிவுக்கு வரும் பட்சத்தில் தான், வெற்றி தோல்வி குறித்து விரிவாக சொல்ல இயலும். ஏனெனில், இத்தொகுதிகள் வேட்பாளர் தேர்வுகளும் முடிவை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.

Read more »

Letika Saran opens DPO building in Cuddalore

DGP Letika Saran inaugurating the District Police office in Cuddalore on Monday.


CUDDALORE:

          Director General of Police Letika Saran inaugurated the integrated District Police Office (DPO) complex constructed at a cost of Rs. 4.38 crore here on Monday.

            After cutting the ribbon, lighting the lamp and unveiling the plaque, the DGP told the presspersons that the Tamil Nadu Police Housing Corporation had built the new structure on 33,000 sq. ft of land. It would house the office of the Superintendent of Police, the crime branch, the special branch and the record room. It would have proper seating arrangements for the petitioners.

        As the existing SP office, a colonial structure, lacked adequate space the new one had been built. Asked whether the ancient building would be retained, the DGP said that it would be left untouched. The construction work on the Thiruvarur DPO office would be completed soon. From 2002 the Police Department had undertaken the construction of the DPO offices in the districts, wherever warranted, and those DPOs having adequate space were allowed to function in the same buildings. In the same way new Commissionerates too were being built as per the need.

“Law & Order peaceful”
          The DGP said that the law and order situation in the State was peaceful. As the Assembly elections were getting nearer, the security arrangements would be tightened. As many as 200 companies of the Central Para Military Forces (CPMF) would be deployed on poll duty across the State.

Sensitive polling stations

         About the number of polling stations identified as sensitive, the DGP said that depending upon the ground reality the numbers would keep on changing. The process of identifying the sensitive, hyper-sensitive and critical polling stations had been initiated in coordination with the respective District Collectors, the DGP added. A high-level police officer said that since it was the election time the inaugural function was organised in a low key. District Collector P. Seetharaman, Additional DGP (L & O) K. Radhakrishnan, Inspector-General of Police (North Zone) R.C. Kudawla, Principal District Judge D. Ramabathiran, Deputy Inspector General of Police (Villupuram range) A.G.Pon.Manickavel, and Superintendents of Police Ashwin Kotnis (Cuddalore) and Xavier Dhanraj (Villupuram) participated.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior