சிதம்பரம்:
சிதம்பரம் நகராட்சியில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று பாமக நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் குற்றம் சாட்டினார்.
சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் திமுக உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் கோரியதன் பேரில் மறைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையிலும், காந்தியடிகள் மறைந்த தினத்தை முன்னிட்டும் கூட்டத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசிய விபரம்:ஆ.ரமேஷ் (பாமக)- நகராட்சியில் வாங்கப்பட்ட பிளீச்சிங் பவுடரில் 33 சதவீத காரத் தன்மை இருக்க வேண்டும். ஆனால் 11 சதவீத காரத்தன்மைதான் உள்ளது. இதை அனைத்து நகரமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று நிருபிக்க தயார். இல்லையெனில் பதவியை ராஜிநாமா செய்ய தயார். எனவே இதுகுறித்து நகரமன்றத்தலைவர் ஆய்வு செய்து ஆனையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதி பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்காத நகரின் மையப் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்நிதியை ரத்து செய்து பிற்படுத்தப்பட்ட பகுதி வளர்ச்சிக்கு செலவிட வேண்டும். நகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை.தலைவர்: பிளீச்சர் பவுடர் முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகமது ஜியாவுதீன் (இ.காங்)- சிதம்பரம் நகராட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக தொலைபேசி எண்கள் கொண்ட விளம்பர பலகையை நகராட்சி அலுவலகத்தில் வைக்க வேண்டும்.அப்புசந்திரசேகரன் (திமுக)- சமீபத்தில் பெய்த மழையில் சிதம்பரம் நகரில் உள்ள முக்கியச் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. அதனைச் சீரமைக்க வேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது கொசு ஒழிப்புப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக)- சிதம்பரம் மானாசந்து மேல்நிலை குடிநீர் தேக்க வளாகத்தில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க வேண்டும். போல்நாராயணன்தெருவில் சாலை மிக மோசமாக உள்ளதால் உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.ராஜலட்சுமி (திமுக)- காலை வேளையில் நடைபெறும் நகரமன்றக் கூட்டத்தை காலதாமதமாக 12 மணிக்கு மேல் தொடங்குவதால் வீட்டில் சமையல் செய்ய முடியவில்லை. எனவே காலதாமதமாக கூட்டத்தை தொடங்கினால் தலைவர் மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.ஏ.ஆர்.சி.மணி (திமுக)- நகராட்சிக்கு ரூ.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் வருமானத்தைப் பெருக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாதம் வரி மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ரூ.10 லட்சம் தான் வருமானம் வருகிறது. ஆனால், ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க ரூ.30 லட்சம் செலவாகிறது.÷பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியை சம்பளத்துக்கு செலவிடும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் வருமானத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ராஜாமான்சிங் (சுயேட்சை)- சிதம்பரம் நகராட்சியில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்.தலைவர்: 4 முறை டெண்டர் விடப்பட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை. டெண்டர் விடப்பட்ட பின்னர் பணி தொடங்கப்படும்.இரா.வெங்கடேசன் (திமுக)- சிதம்பரம் நகரில் 500-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேலாளர் ஜி.செல்வராஜ், மீட்டிங் கிளார்க் காதர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.