கடலூர் எல்காட் அலுவலக தாழ்வாரத்தில் மலைபோல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுகளுக்கான இறுதி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுக்காக மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட கடலூர் மாவட்டத்தில் 7.5 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தன. போலி கார்டுகளைக் கண்டறிகிறோம் என்று உணவு வழங்கல் துறை மேற்கொண்ட நடவடிக்கையால், 1.17 லட்சம் ரேஷன் கார்டுகள் போலியானவை என்று அதிகாரிகள் முத்திரையிட்டனர். அலுவலர்கள் முறையாகக் களஆய்வு மேற்கொள்ளாததால், உண்மையான பலரது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் எழுந்தன.
போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்யப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்த உடனேயே, போலியான ரேஷன் கார்டு வைத்திருப்போர் உஷாராகி விட்டனர். உடனடியாகச் செயல்பட்டு தங்களது ரேஷன் கார்டுகளைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் கள ஆய்வுக்கு அலுவலர்கள் வந்தபோது வீட்டில் இல்லாதவர்கள், கள ஆய்வை முறையாகச் செய்யாதோரிடம் சிக்கிக் கொண்டோர், கிராமங்களில் உள்ள அப்பாவி ஏழை மக்கள் பலரும் இதில் பாதிக்கப்பட்டனர்.அவ்வாறு பாதிக்கப்பட்டோர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டது.
எனினும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே மீண்டும் ரேஷன் கார்டு கிடைத்தது. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்போர், நகர்ப் புறங்களில் நாள்தோறும் அலுவலக வேலை என்று, தங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் போனோர் பலர், அலைந்து திரிந்தும் ரேஷன் கார்டுகளைப் பெற முடியவில்லை. புதிதாக விண்ணப்பித்த பலருக்கும் பல்வேறு காரணங்களைக் கூறி ரேஷன் கார்டு மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்காமல் உள்ளது. அந்த வகையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டுக்காக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். வழங்கல் துறை அலுவலர்கள் உரிய ஆய்வுகள் அனைத்தும் முடித்து, எல்காட் நிறுவனத்துக்கு அனுப்பினால் அங்கு கார்டு அச்சிடுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அங்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் அச்சிடாமல் தேங்கிக் கிடப்பதாகவும் அவற்றைப் பாதுகாக்க இடமின்றி தாழ்வாரங்களில் முடங்கிக் கிடப்பதாவும் கூறப்படுகிறது. இப்போதெல்லாம் ரேஷன் கார்டு என்பது தேசிய அடையாள அட்டைக்குச் சமமாக மதிக்கப்படுகிறது. ரேஷன் கார்டு இருந்தால்தான் அரசின் எந்தச் சலுகைக்கும் விண்ணப்பிக்க முடியும். மாதம் 20 கிலோ ரேஷன் அரிசியை பெறுவதற்கும், இதர ரேஷன் பொருள்களை வாங்குவதற்கும், ஆண்டுக்கு இருமுறை இரு இலவச வேட்டி- சேலை, இலவச கலர் டி.வி. பெறுவதற்கும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு இல்லாவிட்டால் முடியாது.
கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் இதுபற்றிக் கூறுகையில்,
போலி ரேஷன் கார்டு என்று விசாரணை ஏதுமின்றி, ஆயிரக்கணக்கானோரின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. உரிய காலத்தில் புதுப்பிக்க முடியாமல் போன பலரையும், புதிதாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியாயமான ரேஷன் கார்டுக்காக காத்து இருக்கிறார்கள்.தாலுகா மட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் இருந்த ரேஷன் கார்டு வழங்கும் அதிகாரம், தற்போது மாவட்ட வழங்கல் அலுவலருக்கு மாற்றப்பட்டு இருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் ரேஷன் கார்டு வழங்குவதை தாற்காலிகமாக வாய்மொழி உத்தரவின் மூலம் நிறுத்திவைத்து இருப்பதாகவும் வட்ட வழங்கல் அலுவலர்கள், விண்ணப்பதாரர்களிடம் தெரிவிக்கிறார்கள் என்றார்.மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, தற்போது கடலூர் மாவட்டத்தில் 6,54,951 ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிய ரேஷன் கார்டுக்காக, அனைத்து ஆவணங்களுடனும் விண்ணப்பித்தால், நியாயமானதாக இருந்தால் கள ஆய்வு செய்து, 60 நாள்களில் ரேஷன் கார்டு வழங்குகிறோம். கடலூரில் உள்ள எல்காட் அலுவலகத்தில் ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது. ரேஷன் கார்டு கோரி தற்போது எவ்வளவு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று தெரியவில்லை. ரேஷன் கார்டு வழங்க தாற்காலிகத் தடை ஏதும் இல்லை. உடனுக்குடன் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து எல்காட் அலுவலக கடலூர் மேலாளர் கூறுகையில்
ரேஷன் கார்டு அச்சிடுவது குறித்து பொதுமக்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை போலும்!
Read more »